திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த `ஜாகிர்’ திருமலை ராவ் என்ற ஜமீன் அல்லது குறுநில மன்னன், தனது காதலிக்காக ஐரோப்பியக் கட்டடக்கலையில், இந்த மாளிகையைக் கலை நயத்துடன் கட்டியிருப்பதாகச் சொல்லி சிலிர்க்க வைக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சிதிலமடைந்த நிலையில் கண்ணாடி மாளிகை தோற்றம் கண்ணாடி மாளிகை உருவாக்கப்பட்ட விதம் சுவாரஸ்யமூட்டுகிறது. ஜாகிர் திருமலை ராவ் ஒருமுறை இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, பிரென்ச் நாட்டுப் பெண் ஒருவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியவர், இங்கிலாந்திலிருந்து அவரை அழைத்து வந்து பெற்றோர் முன் நிறுத்தியிருக்கிறார். பெற்றோரின் சம்மதம் கிடைக்காததால், ஊருக்கு வெளியில் இந்த இடத்தில் ஐரோப்பிய நாட்டின் கட்டடக் கலையில் பிரமாண்ட மாளிகையை எழுப்பி காதலியுடன் வாழ்ந்திருக்கிறார். காலப்போக்கில், அவர்கள் மறைந்த பின்பு மாளிகையில் யாருமே வசிக்கவில்லை. ஜாகிர்தாரின் வாரிசுகள் இன்றும் பெங்களூரு மற்றும் ஜார்க்கண்ட்டில் வசிக்கிறார்கள். ஆனாலும், கண்ணாடி மாளிகைக் கட்டடம் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து அழிவின் விளிம்பிலிருந்தது. வாசற்கால்கள், கண்ணாடிகள், இரும்புச் சட்டங்கள் என மாளிகையிலிருந்து என்னனென்னவெல்லாம் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியுமோ, அவற்றையெல்லாம் திருடிச் சென்றிருக்கிறார்கள் மர்ம நபர்கள். இந்த நிலையில்தான் 2021-ம் ஆண்டில், கண்ணாடி மாளிகையைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது ஆரணி வனச்சரக வனத்துறை. வனத்துறை அதிகாரிகள் மாளிகையைச் சுற்றிலும் வேலி அமைத்து, பாதுகாக்கப்பட்ட இடமாகவும் அறிவித்திருந்தார்கள். இதோடு கடந்துவிடாமல், `மாளிகையைப் புனரமைத்து அதன் வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்க வேண்டும்’ என்று வரலாற்று ஆய்வாளர்கள், அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். புதுப்பிக்கப்பட்ட பிறகு கண்ணாடி மாளிகையின் தோற்றம் அதன்படி, பொதுப்பணித்துறையினர் மூலமாக கண்ணாடி மாளிகையைச் சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்சமயம், இறுதிகட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இன்னும் சில நாள்களில், பணிகள் நிறைவுப் பெற உள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த கண்ணாடி மாளிகை, இப்போது புத்துயிர்ப் பெற்று கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்தப் பணிகள் பற்றிப் பேசுகிற அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், "என்னோட சின்ன வயசுலருந்தே இந்தக் கண்ணாடி மாளிகை சிதிலமடைஞ்ச நிலையிலதான் பார்த்துக்கிட்டிருந்தேன். இப்ப புதுப்பொலிவோட பார்க்கிறப்ப ராஜா காலத்துல எவ்வளவு அழகா இருந்திருக்கும்னு நெனைக்கத் தோணுது. வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணாடி மாளிகையை சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்க வேண்டும்’’ என்றார். ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா. போலி வெப்சைட் மூலம் பணம் பறிக்கும் கும்பல், உஷார் மக்களே! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/arani-historic-glass-house-renovated-structure-restored-by-government-of-tamilnadu




