தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் கூறிய பல வாக்குறுதிகள், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்-அமைச்சர் விஜய்யால் அறிவிக்கப்பட்டுவிட்டன. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் அரசியலுக்கும், அரசுக்கும் புதியவர் என்றாலும் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் நல்ல அனுபவமும், திறமையும் வாய்ந்த முதிர்ச்சியை பிரதிபலித்தது. தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் கூறிய பல வாக்குறுதிகள், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்-அமைச்சர் விஜய்யால் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில், சிங்கப்பெண் அதிரடி போலீஸ் படை, 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் எதிர்ப்பு படை அமைப்பு, கூட்டுறவு சங்க கடன் ரத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் போன்ற பல திட்டங்கள் அடங்கும். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சரால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை தமிழக நிதிநிலையை நன்றாக படம்பிடித்து காட்டியது. 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்பதற்கேற்ப அவசியமான மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, கவர்ச்சிகரமான திட்டங்கள் பெருமளவில் இல்லை. அத்தியாவசியமில்லாத திட்டங்களை அறிவித்து, அதை நிறைவேற்ற கடன் வாங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு விஜய் அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அரசின் முடிவு, மேகதாது உள்ளிட்ட நதிநீர் விவகாரங்களில் தமிழக உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை அரசு உறுதியாக எதிர்க்கும் என்ற அறிவிப்புகள் அரசின் உறுதிப்பாட்டை காட்டுகின்றன. சைக்கிள் பழுதுபார்ப்பவர்களுக்கு மின்சார வாகனங்களை பழுதுபார்க்க பயிற்சி, சென்னையில் ஆயிரம் மின்சார பஸ்கள், 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சார சார்ஜிங் நிலையங்கள் என்பது போன்ற அறிவிப்புகள் மின்சார வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவிப்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் போல திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்க ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு திருமண பந்தத்தில் இணைய உள்ள ஏழை பெண்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும். 100 நாள் வேலைத்திட்டம் இப்போது 125 நாட்கள் ஆகியுள்ள நிலையில் 125 நாட்கள் பணி முடித்தவர்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு கிராமப்புற மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது சிறப்பானது. இதுமட்டுமல்லாமல் 'ஜென் சி' தலைமுறையினருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் சில அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன. அதில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த அரசை பொறுத்தவரையில், நிதி நிலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. நிதி கசிவை சரி செய்து, நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதி ஒருங்கிணைப்பு பாதைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். நிதி ஆதாரங்கள் இல்லையென்றால் நலத்திட்டங்களை தடங்கல் இன்றி தொடரமுடியாது என அரசு நேரடியாகவே வெளிப்படைத்தன்மையுடன் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/others/thalayangam/chief-minister-vijays-first-government-budget




