ஒரு குரல் மௌனமாகிவிட்டது. ஆனால், அந்த மௌனம்கூட இசையாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ரேடியோவின் மெல்லிய சத்தத்தில். அதிகாலை கோயில் திருவிழா மேடைகளில். பேருந்து ஜன்னலோரப் பயணங்களில். காதலை முதன்முதலாக உணர்ந்த கணங்களில். பிரிவின் வலியைத் தனியாகச் சுமந்த இரவுகளில். தமிழரின் வாழ்க்கையின் ஒவ்வோர் உணர்வுக்கும் பின்னணியாக ஒலித்த குரல் அது. அதுதான் எஸ். ஜானகி. ஒரு பாடகி என்பதைக் கடந்து, உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த குரலாகவும், ஐந்து தலைமுறைகளின் நினைவுகளில் நிரந்தர இடம்பிடித்த இசைச் சகாப்தமாகவும் விளங்கியவர். இந்தியத் திரையிசையின் பொற்காலத்தை மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை நினைவுகளையும் தனது குரலால் அலங்கரித்த அந்த இசைத் தேவதையின் மறைவு, ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. அவருடன் பல படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் சிற்பியிடம், ஜானகி அம்மாவின் நினைவுகளைப் பற்றிக் கேட்டோம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெகிழ்ச்சியில் நனைந்திருந்தன. "புதிய இசையமைப்பாளர் சினிமாவுக்கு வந்தால், ஜானகி அம்மா மாதிரி யாரும் அவர்களை உற்சாகப்படுத்த முடியாது. இன்றைக்கு ஒரு புதிய இசையமைப்பாளருக்கு முதல் வாய்ப்பே மிகப் பெரிய சவால். அந்த நேரத்தில் முன்னணி பாடகர்கள் ஒத்துழைப்பதே பெரிய விஷயமாக இருக்கும். இசையமைப்பாளர் சிற்பி ஆனால் ஜானகி அம்மாவிடம் அந்த வேறுபாடு எப்போதுமே இருந்ததில்லை. புதியவர், அனுபவம் குறைவானவர் என்ற பாகுபாடு அவருக்கு கிடையாது. ஒரு பாடலுக்கு என்ன தேவை, ஒரு இசையமைப்பாளருக்கு என்ன நம்பிக்கை தேவை என்பதை நன்றாகப் புரிந்திருந்த கலைஞர் அவர். மனோ பாலா இயக்கத்தில் வெளியான 'செண்பகத் தோட்டம்' படம்தான் நான் முதன்முறையாக இசையமைத்த திரைப்படம். அந்தப் படத்தில் பாடும்போது எனக்கு அவர் கொடுத்த உற்சாகத்தை இன்னும் மறக்க முடியவில்லை. 'நல்லா இருக்கு. இன்னும் சிறப்பாக செய்வீங்க' என்று அவர் சொன்ன சில வார்த்தைகளே அப்போது எனக்கு மிகப் பெரிய விருதாக இருந்தது. ஒரு புதிய இசையமைப்பாளரின் தோளில் கை வைத்துத் தைரியம் கொடுக்கும் அளவுக்கு பெரிய மனம் அவருக்கு இருந்தது. அவருடைய குரல் பற்றி என்ன சொல்வது? 'நாட்டாமை' படத்தில் குஷ்பு பாடும் 'கொட்டப் பாக்கும்.' பாடலுக்கு முன் வரும் அந்த ஹம்மிங்கை அப்போதும் ரசிகர்கள் ரசித்தார்கள்; இப்போதும் அதே பிரமிப்போடு ரசிக்கிறார்கள். அந்த சில நொடிகளே பாடலின் உயிராக மாறிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு மாயத்தை தனது குரலால் உருவாக்கியவர் ஜானகி அம்மா. அதேபோல, 'மெளன கீதங்கள்' படத்தில் இடம்பெற்ற 'டாடி. டாடி.' பாடலின் துறுதுறுப்பும், குறும்பும், உணர்வும் ஜானகி அம்மாவின் குரலால்தான் முழுமை பெற்றது. அந்தப் பாடலை அவர்களைத் தவிர வேறு யாராலும் அப்படிப் பாட முடியாது என்று நான் உறுதியாகச் சொல்வேன். ஜானகி மறைவு ஜானகி அம்மா பாடலைப் பாடவில்லை; அந்தப் பாடலுக்குள் வாழ்ந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் மாறிப் பாடினார். குழந்தையின் குரலாக வேண்டுமென்றாலும், வயதான பெண்ணின் உணர்ச்சியாக வேண்டுமென்றாலும், காதலின் மென்மையாக வேண்டுமென்றாலும், சோகத்தின் ஆழமாக வேண்டுமென்றாலும், அவரது குரல் அதற்கேற்ப வடிவம் எடுத்துவிடும். அதுதான் அவருடைய தனிச்சிறப்பு. 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள். இந்த எண்ணிக்கையைச் சொல்லும்போதே பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் அது வெறும் எண்ணிக்கை அல்ல; பல மொழிகள், பல இசையமைப்பாளர்கள், பல தலைமுறைகள், ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள், கோடிக்கணக்கான ரசிகர்களின் நினைவுகள் ஆகியவற்றின் தொகுப்பு. அந்தச் சாதனையை இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாது. அது ஒரு சாதனை மட்டுமல்ல; ஒரு சகாப்தம். எஸ்.எம். சுப்பையா நாயுடு முதல் இன்றைய அனிருத் வரை எல்லாத் தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் பாடியவர் ஜானகி அம்மா. இசையின் வடிவம் மாறியிருக்கலாம்; காலம் மாறியிருக்கலாம். ஆனால் அவரது குரலின் இனிமை மட்டும் மாறவே இல்லை. அதனால்தான் ஒவ்வொரு தலைமுறையும் அவரை தங்களுடைய பாடகியாகக் கொண்டாடியது. இந்த உலகத்தின் எந்த மூலை முடுக்குக்குப் போனாலும், எங்காவது ஒரு இடத்தில் ஜானகி அம்மாவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு வானொலியில். ஒரு தேநீர் கடையில். ஒரு பேருந்துப் பயணத்தில். ஒரு மேடை இசை நிகழ்ச்சியில். அல்லது யாரோ ஒருவர் தனிமையில் முணுமுணுக்கும் பாடலில். அந்தக் குரல் காற்றில் கலந்து நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். ஜானகி அம்மா இனி நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கும் வரை, அவர் மறையப் போவதில்லை. இசை இருக்கும் வரை. ஜானகி அம்மாவின் குரலும் இருக்கும். அதனால்தான், அவர் ஒரு பாடகி அல்ல. காலத்தை வென்ற குரல்" என்று ஜானகி அம்மாவின் நினைவுகளில் மூழ்கி நெகிழ்கிறார் இசையமைப்பாளர் சிற்பி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/music-director-sirpi-sharings-about-late-legendary-singer-s-janaki



