தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தை 'சக்தி மாதம்' என்றும், 'அம்மன் மாதம்' என்றும் அழைப்பதுண்டு. ஆடி மாதம் பிறந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களும் களைகட்டியுள்ளன. இந்த மாதத்தில் வேத பாராயணங்கள், மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான உற்சவங்களும் வெகுசிறப்பாக நடைபெறும். இந்து சமயத்தில், சூரியனின் நகர்வை கொண்டு வருடத்தை உத்ராயணம், தட்சிணாயனம் என இரு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். சூரியன், தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலம், உத்ராயண காலம் ஆகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண காலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். கூழ் ஊற்றுவது ஏன்? சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம், தட்சிணாயன காலம் ஆகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதமும் தேவர்களுக்கு இரவு பொழுதாகும். தட்சிணாயன காலம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனின் ஆற்றல் அதிகமாக வெளிப்படும் என்கிறார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் மந்திரங்கள், வேத பாராயணங்கள், ஜெயங்கள் ஆகியவற்றிற்கு அதிக சக்திகள் உள்ளன. உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே ஆடி மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். இதைத்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்கிறார்கள். ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அந்த சமயம் தூசிகள் மூலம் நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. எனவே, வேப்பிலை, மஞ்சள் கொண்டு அம்மனை வழிபடுவதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் ஊற்றுவதும் பாரம்பரிய முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பீடை மாதமல்ல. பீட மாதம் மேலும், ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனால் விவசாயம் செழித்து, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆடி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் வாழ்க்கையை செழிக்க வைக்கும் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்த்து, அம்மனின் அருளை பெறுவதற்காக வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால், ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததை சுட்டிக்காட்டி, சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வர். ஆனால் அது உண்மையல்ல. அது, அவர்கள் அறியாமையால் சொல்வதாகும். 'பீட மாதம்' என்பதே உண்மையான பெயர் ஆகும். இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வணங்கும் மாதம் என்பதே இதன் பொருள். ஆடி மாத வழிபாடுகள் குலதெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி சுவாதி, ஆடிப் பெருக்கு, ஆடித் தபசு, கருட பஞ்சமி, நாக சதுர்த்தி போன்ற சிறப்புமிக்க நாட்கள் வருகின்றன. மேலும், ஆடி மாதத்தில்தான் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் இன்று (17.7.2026) பிறந்துள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமையில் ஆடி பிறந்துள்ளது சிறப்பானதாகும். இந்த மாதத்தின் முதல் நாளிலேயே அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டை சுத்தம் செய்து, அம்மன் படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடலாம். மேலும், அன்னைக்கு பொங்கல், பாயசம் நைவேத்தியமாக படைத்தும், அம்மன் பாடல்களை பாடியும் வழிபட்டு அம்மன் அருளை பெறலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/spiritual-significance-of-aadi-month




