சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “தமிழ்நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் மூலம் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது வரை மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை தவெக அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மணல் குவாரிகளின் கட்டுப்பாடற்ற, விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஏற்படும் பாதிப்பை மறந்துவிட்டு, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மணல் தட்டுப்பாட்டை போக்கவே மீண்டும் மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையால் காவிரி டெல்டா பகுதிகளின் நிலை மேலும் மோசமடையும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர். அதோடு, மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதை தாண்டி, உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல், தடுக்க நினைப்போர் மீது தாக்குதல் என சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் அடிப்படைக் காரணமாகவும் அமைந்த அவலச் சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-reopen-closed-quarries-must-be-abandoned-ttv-dhinakaran




