சென்னை, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு செய்யப்படும் துரோகமாகும். த.வெ.க. அரசு வாக்குறுதி தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75% அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 2.5%, மின்சாரக் கட்டணத்தில் 5% மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் தான், தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய சதி நடக்கிறது; அதற்கு அதிகாரிகளும், முதலீட்டாளர்களும் உதவி செய்கின்றனர். தொழில் முதலீடுகள் தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயம் ஆக்கினால் தொழில் முதலீடுகள் வராது என்பதே அபத்தமான வாதமாகும். இந்த வாதத்தை ஆந்திர மாநில அரசு தகர்த்திருக்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஆந்திராவில் பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களும், அவற்றின் முடிவை மாற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இப்படியாக முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கும் ஆந்திராவில் தொடங்கப்படும் தொழில் & வணிக நிறுவனங்களில் 75% பணியிடங்களை அம்மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என 2019-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் ஆந்திராவில் முதலீடுகள் தடைபடவில்லை. தமிழக இளைஞர்களுக்கு துரோகம் குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. கர்நாடகத்தில் இதே போன்ற சட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் சட்ட ஆய்வில் உள்ளது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் தனியார் துறை வேலைவாய்ப்புகளை மட்டும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கு திருப்பி விடுவது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும். 75 விழுக்காடு தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைவதற்கு முதன்மை காரணமாக இருந்தவர்கள் இளைஞர்கள் தான். அவர்களின் எதிர்பார்ப்பு தங்களுக்கு கண்ணியமான வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும், அதற்கு வசதியாக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியும் இருக்கும் போது அதை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யக் கூடாது. தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிரான அனைத்துக் கருத்துகளையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/75-reservation-in-private-employment-tamil-nadu-government-should-enact-a-law-anbumani-insists




