மதுரை அருகே உள்ள மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் அமைந்துள்ளது திருமறைநாதர் கோவில். வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் திருத்தலங்களில் ஒன்று இந்த திருத்தலம். கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேதங்களின் பொருளை வாதம் செய்து மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறைநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் திருவாதவூர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இறைவனின் மகிமை திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டுள்ளனர். இத்தலத்தின் அம்பாள் ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தேவார வைப்புத் தலம் தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. பழமையான இக்கோவில் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருவாதவூரார் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகருக்கு, இந்த ஆலயத்தில் தான் இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாதவூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. ஆவணி மூலத் திருவிழா இக்கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளளது. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aalaya-varalaru/thiruvathavur-thirumarainathar-darshan-a-remedy-for-rheumatic-disorders




