அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு அருளும் முருகப்பெருமானை நாடி லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சென்று வழிபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் திருத்தலத்துக்கு இணையான தலம் ஒன்று உள்ளது. திருச்செந்தூர் கடல்கரைத் தலம் என்றால் இது நதிக்கரைத்தலம். வாருங்கள் அந்த அற்புதத் தலம் குறித்து அறிந்துகொள்வோம். தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகில் புதுக்குடியில் அமைந்திருக்கிறது, நதிக்கரை சுப்ரமணியசுவாமி திருக்கோயில். திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின்கரையில் அமைந்துள்ளது இந்த முருகனின் ஆலயம். திருச்செந்தூரில் மூலவர் தவநிலையிலும் சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம் உண்டு. அதேபோல் மூலவரின் இடப்புறத்தில், சிவபரம்பொருள் லிங்கத் திருமேனியுடன், பார்வதி அம்பிகையுடன் காட்சி அளிக்கும் தலம் இது. சிறிய கோயில்தான் எனினும் சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. வெளிப் பிராகாரத்தில் கன்னிமூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களை தரிசிக்க முடிகிறது. உள் பிராகாரத்தில் பைரவர் காட்சி தருகிறார். இங்கு ஶ்ரீசுப்ரமணியர், ஶ்ரீசண்முகப் பெருமான் என இரண்டு உற்சவர்கள். இருவருமே தேவியருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள். கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள். சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் - ஊஞ்சல் உற்சவம் என கோலாகலமாக நடைபெறுகிறது சஷ்டித் திருவிழா. இந்தத் திருக்கோயிலின் தல விருட்சமாக அரசும் வேம்பும் பின்னிப் பிணைந்தபடி திகழ்கின்றன. இவற்றின் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. திருமணத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து இந்த விருட்சங்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். புதுக்குடி நதிக்கரை சுப்பிரமண்ய சுவாமி கோயிலுக்கு வந்து படித்துறையில் - தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் அரசு - வேம்பு மரங்களுக்கு 11 வகை அபிஷேகம் செய்கிறார்கள். மேலும், அரசமரத்துக்கு வெள்ளை வேட்டியும், வேப்ப மரத்துக்குச் சிவப்பு வண்ண பட்டும் சாற்றி, ரோஜா மாலை அணிவித்து, வேப்பமரத்துக்குத் திருமாங்கல்யம் அணிவித்து வழிபடுகிறார்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கிறார்கள். இப்படி வழிபடும் நாளில் மூலவருக்கும் 11 வகை அபிசேகம் செய்ய வேண்டும். அப்போது முருகனுக்கு வெள்ளை வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவிக்க வேண்டும். வள்ளி-தெய்வானை தேவியருக்கு சிவப்பு நிறப் பட்டும் ரோஜா மாலையும் சாத்துகிறார்கள். முருகன் சந்நிதியிலும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, ஐந்து நெய் விளக்குகள் ஏற்றி மனமுருக வழிபடவேண்டும். இவ்வாறு வணங்கி வழிபட்டால், தடைகள் மற்றும் தோஷங்கள் நீங்கி விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்தப் பரிகாரத்தை அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று, அதிகாலை 5 முதல் 7 மணிக்குள் செய்து முடிப்பது சிறப்பு. கந்தசஷ்டி காலத்தில் முறைப்படி விரதம் இருந்து, நதிக்கரை முருகன் கோயிலுக்கு வந்து வழிபடவேண்டும். கந்த சஷ்டி விழாவையொட்டி முருகனுக்கு நடைபெறும் திருக்கல்யாணம் - ஊஞ்சல் உற்சவத்தன்று முருகனுக்கும், வள்ளி - தெய்வானை தேவியருக்கும் ரோஜா மாலை சாத்தி வழிபடவேண்டும். இதன் மூலம் இல்லறம் இனிக்கும்; மன வேறுபாட்டால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர், என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. புதுக்குடி நதிக்கரை சுப்பிரமண்ய சுவாமி தைப்பூசத் திருநாளில் கோயிலின் பாலதண்டாயுத சுவாமிக்குச் சிறப்பு அபிசேகமும், விசேச தீபராதனையும் நடைபெறுகின்றன. இந்த வைபவத்தை தரிசிப்பதால் சகல தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். நதிக்கரைக் கோயில் என்பதால், அருகிலுள்ள பல கோயில்களுக்கு வேண்டுதல் செய்யும் பக்தர்கள் இங்கிருந்து நதித் தீர்த்தம், பாற்குடம் எடுத்துச் செல்கிறார்கள். ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில், இங்கு நதிக்கரையில் முன்னோர் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் விசேஷமாகக் கருதப்படுகிறது. நவகயிலாய தலங்கள், நவதிருப்பதிகளை தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், அவசியம் இந்த நதிக்கரை முருகனையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள். இந்த முருகனின் திருவருளால் உங்கள் வாழ்வில் சகல இன்னல்களும் நீங்கி சந்தோஷம் பொங்கிப் பெருகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/spiritual/temples/puthukudi-nathikkarai-subramaniyaswamy-temple




