அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்ற ஒற்றை ஆசையினால், கடின உழைப்பால் ஈட்டிய வருமானம், பூர்வீக நிலம் மற்றும் நகைகள் என சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை லாட்டரி சீட்டுகளுக்காகவே செலவிட்டு, தற்போது 5 சாக்கு மூட்டைகளில் பழைய டிக்கெட்டுகளைச் சேமித்து வைத்துள்ள முதியவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம், கேரளாவில் பேசுபொருளாகி உள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கரிவெள்ளூர் அருகேயுள்ள பாலக்குண்ணு பகுதியைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன் (வயது 80). இவரது மனைவி சாந்தா. ஆரம்ப காலத்தில் சோம்பலின்றி உழைக்கும் தீவிர விவசாயியாக வலம்வந்த ராகவனுக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் வளமான விவசாய நிலம் இருந்தது. அதில் நெல், தென்னை, வாழை போன்ற பயிர்களைச் சாகுபடி செய்ததோடு, கறவை மாடுகளையும் வளர்த்து தினமும் கணிசமான வருவாய் ஈட்டி வந்தார். ஒருபுறம் வியர்வை சிந்தி உழைத்தாலும், மறுபுறம் அதிஷ்ட தேவதை என்றாவது ஒருநாள் தன் கதவைத் தட்டும் என்ற குருட்டு நம்பிக்கை அவர் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது. 1967-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் அதிகாரபூர்வமாக லாட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தினர். ஆனால், அரசு லாட்டரி வருவதற்கு முன்பே பூட்டான் 'டேட்டா' லாட்டரி சீட்டுகளை வாங்கத் தொடங்கிவிட்டார் ராகவன். பின்னர் 1967 நவம்பர் ஒன்றாம் தேதி கேரள அரசு தனது முதல் லாட்டரிச் சீட்டை வெளியிட்டபோது, அதை வாங்குவதற்காக வரிசையில் நின்ற நபர்களில் ஒருவராகவும் ராகவன் இருந்தார். அன்று லாட்டரி ஒரு ரூபாய்க்கு விற்கத்தொடங்கியது முதல் அதை வாங்கும் மோகம் ராகவனுக்கு அதிகரித்தது. அடுத்த அறுபது ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து லாட்டரி வாங்கினார். ராகவன் வாங்கிய லாட்டரிகள் வீட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தின் பெரும்பகுதியை லாட்டரிக்காகவே செலவிட்டார். உள்ளூர் கடைகளில் வாங்குவதோடு நிற்காமல், அதிக டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்காக நாள்தோறும் பையன்னூர், காஞ்ஞங்காடு வரை பயணம் மேற்கொண்டார். அந்த காலகட்டத்திலேயே ஒரு நாள் 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை லாட்டரி வாங்குவதற்கு மட்டுமே செலவளித்தார். புதிய டிக்கெட் கட்டுகள் கடைகளுக்கு வரும்போதே இவருக்கென ஒதுக்கி வைக்கும் அளவுக்கு லாட்டரி ஏஜென்டுகளின் செல்லப் பிள்ளையாகவும் மாறினார். இடையில் பூட்டான் லாட்டரியில் கடைசி மூன்று இலக்கங்கள் ஒத்துப்போய் 4,000 ரூபாய் பரிசுகளும், அவ்வப்போது சில சிறிய தொகைகளும் கிடைத்தன. ஆனால், இந்தச் சிறிய வெற்றிகள் அவரது பேராசையை மேலும் தூண்டி, அடுத்த முறை பெரிய பம்பர் பரிசு நிச்சயம் கிட்டும் என்ற ஆசை அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. 60 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிய ராகவன் பல ஆண்டுகள் உருண்டோடியும் அவர் எதிர்பார்த்த பம்பர் பரிசு எதுவும் விழவில்லை. தினமும் ஆயிரக்கணக்கில் ரூபாய் லாட்டரி வாங்க செலவு செய்ததால் நிதி நிலைமை தலைகீழாக மாறியது. வருமானம் போதாமல் கடன் பெருகிய நிலையில், வாங்கிய கடனை அடைக்கவும் மீண்டும் லாட்டரி சீட்டுகளை வாங்கவும் தனது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை சிறுக சிறுக விற்றுத் தீர்த்தார். ஒருகட்டத்தில் கடன் சுமை கழுத்தை நெரிக்கவே, மனைவி சாந்தாவின் நகைகளையும் அடகு வைத்து இழந்தார். ஒரு காலத்தில் நிலச்சுவான்தாராகப் பெருமையுடன் வாழ்ந்த ராகவன், லாட்டரி மீதான போதையால் அனைத்தையும் இழந்து, தற்போது எஞ்சியிருக்கும் 25 சென்ட் நிலத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் மனைவியுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக உடல்தளர்ந்து வெளியூர் பயணங்கள் நின்றாலும், அவரது லாட்டரி மோகம் முற்றிலும் தணியவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளில் ஒன்றைக் கூட அவர் தூக்கி எறியவில்லை. தன் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் நினைவூட்டும் ஆவணங்களாக அவற்றை வீட்டில் பத்திரமாகச் சேர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் அந்த பழைய டிக்கெட்டுகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டியபோது, அவை 5 பெரிய சாக்கு மூட்டைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. அந்த சீட்டுகளின் அன்றைய மற்றும் இன்றைய பண மதிப்பைத் தோராயமாகக் கணக்கிட்டுப் பார்த்தபோது, சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை லாட்டரிக்காக மட்டுமே அவரது கையை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. லாட்டரி இதுகுறித்து பி.பி. ராகவன் கூறுகையில், "விவசாயம் செய்து நல்லபடியாகத்தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், கேரள அரசு முதல் லாட்டரி வெளியிடுவதற்கு முன்பிருந்தே பூட்டான் லாட்டரி வாங்கும் பழக்கம் எனக்குத் தொற்றிக்கொண்டது. அன்றிலிருந்து தினமும் காஞ்ஞங்காடு, பையன்னூர் என அலைந்து திரிந்து லாட்டரி வாங்கினேன். ஒரு நாள் ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை டிக்கெட் வாங்கிய நாட்களும் உண்டு. எப்போதாவது சில ஆயிரம் ரூபாய் பரிசு விழும். அதுவே அடுத்த முறை பெரிய பம்பர் அடித்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துவிடும். அந்த ஒரே ஒரு நப்பாசையில் சொந்தமாக இருந்த இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தையும் விற்றேன். கடனை அடைக்க என் மனைவியின் கழுத்து நகைகளையும் இழக்க நேரிட்டது. எப்படியாவது அதிஷ்ட தேவதை நம்மை ஒருநாள் வாழ வைத்துவிடுவாள் என்று நம்பினேன். ஆனால் கடைசிவரை அது நடக்கவே இல்லை. இவ்வளவு பணத்தை லாட்டரிக்காக மட்டுமே செலவளித்த என்னைப்போல ஒரு ஆள் வேறு யாரும் இருக்க முடியாது. இன்று நான் இழப்புகளால் உருவான 'இரண்டு கோடியின் துரதிர்ஷ்டசாலி'" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/story-of-lottery-loser-elder-man-raghavan-of-keralam




