சென்னை, தமிழ் உயிரோடு இருக்கிறது. ஆனால் தமிழ்ப் பெயர்கள் உயிரோடு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஜ. ஷ. ஸ. ஹ. க்ஷ. இந்த எழுத்துகளின் ஒலிகளைக் கவனியுங்கள். மொழிக் கலப்பா? தமிழின் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத இந்த ஒலிகள், இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்களில் இயல்பாகிவிட்டன. இது வெறும் மொழிக் கலப்பா? அல்லது பல நூற்றாண்டுகளாகத் தமிழர் வாழ்வியலுக்குள் படிப்படியாகப் பதிந்த ஆரியப் பண்பாட்டின் தாக்குதலா? உலகின் தொன்மையான மொழிகளில், முதன்மையான மொழியாகப் போற்றப்படும் தமிழ், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தனது தனித்துவத்தை ஆயிரமாயிரமாண்டுகளாகக் காத்து நிற்கிறது. தமிழ் மொழியைத் தாங்கி நிற்கும் மக்களின் அடையாளங்களிலும் இருக்கிறது. இன்று தமிழர் இல்லங்களில் ஒலிக்கும் பெயர்களைப் பார்த்தால், தமிழின் இயல்பான ஒலிகளைவிட பிறமொழி எழுத்துக்களின் ஒலிகளே அதிகமாகக் கேட்கின்றன. இது ஒரு நாளில் நிகழ்ந்த மாற்றமல்ல. பல தலைமுறைகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மாற்றங்களின் விளைவாகவே பார்க்கிறோம். தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா? தமிழக வாழ்வுரிமைக் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. ஆனால், தமிழின் தனித்துவ அடையாளம் மெல்ல மெல்ல மங்கும் எந்தப் பண்பாட்டு மேலாதிக்கப் போக்காக இருந்தாலும், அதை ஆய்வு செய்து, தமிழர் சமூகத்துடன் திறந்த விவாதங்களை நடத்த வேண்டியது காலத்தின் தேவை என்று கருதுகிறோம். தமிழில் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத ஒலிகள், இன்று தமிழர் குழந்தைகளின் பெயர்களில் ஏன் தவிர்க்க முடியாததாக மாறின? தமிழில் பெயரிடும் மரபில் இந்த மாற்றம் எப்போது, எப்படி, எந்தச் சமூகப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்டது? தமிழரின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்ப் பெயர்கள் ஏன் படிப்படியாகக் குறைந்தன? இந்த மாற்றம் இயல்பாக நடந்த மாற்றமா? அல்லது ஆழமான திட்டமிடலோடு தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா? அரசின் பொறுப்பு இந்தக் கேள்விகளுக்கு, மொழியியல் மற்றும் சமூக ஆய்வுகளின் அடிப்படையில் பதில் தேட வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மொழியியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து, தமிழில் பெயரிடும் மரபில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், தமிழின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-is-alive-but-are-tamil-names-alive-velmurugan




