சென்னை, இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ‘சிஏபிடி’ (CAPD) டயாலிசிஸ் திரவப்பைகளின் விநியோகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசின் இந்த அலட்சியப்போக்கு, ஏழை மற்றும் எளிய சிறுநீரக நோயாளிகளின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உயிரையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. டயாலிசிஸ் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று இயந்திரங்கள் மூலம் டயாலிசிஸ் செய்ய முடியாத முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் அன்றாட வேலைக்குச் செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளிலிருந்தபடியே இந்த ‘தொடர்ச்சியான நடமாடும் பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ (CAPD) முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று முறை மாற்றப்பட வேண்டிய இந்தத் திரவப் பைகள், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், வறிய பின்புலத்தைக் கொண்ட நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சந்தையில் ஒரு திரவப் பையின் விலை சுமார் ரூ.305 ஆக உள்ள நிலையில், ஒரு நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.915 வரையும், மாதத்திற்குச் சுமார் ரூ.27,000 வரையும் இதற்காக மட்டுமே செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஏழை நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுவாக, சிஏபிடி முறையை மேற்கொண்டோருக்கு உடனடியாக இயந்திரம் மூலம் டயாலிசிஸ் செய்ய முடியாது என்பதால், மாற்று வழி தெரியாமலும், கையில் பணமில்லாமல் மாதாந்திர மருந்துப்பைகளை வாங்க முடியாமலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிருக்கு போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வலியுறுத்தல் எனவே, தமிழக முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தடையின்றி டயாலிசிஸ் திரவப் பைகள் மீண்டும் நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள தட்டுப்பாடுகளைக் களைந்து, போர்க்கால அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுப் பிரிவுகள் மூலம் விநியோகத்தைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/stop-distribution-of-dialysis-fluid-bags-stpi-demands-immediate-intervention-by-the-chief-minister




