சென்னை, 118 பவுன் நகை கொள்ளை விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் வினோத்குமார், தொழில் அதிபர். இவருடைய மனைவி மதுமிதா. பிரபல யூடியூபரான இவர் இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூகவலைதளங்களிலும் கணக்கு வைத்திருக்கிறார். அதில் வித விதமான ஆடைகள், நகைகள் அணிந்தும், கட்டுக்கட்டாக பணத்துடன் இருப்பது போன்றும், பணமழையில் நனைவது போன்றும் வீடியோக்களை 'ரீல்ஸாக வெளியிட்டு பிரபலமானார். இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் மதுமிதா குடும்பத்தினர் வீடு வாங்கி குடியேறினர். கடந்த 24-ந் தேதி மாலையில் மதுமிதா கணவருடன் வெளியே சென்ற நேரத்தில் அவருடைய வீட்டில் 118 பவுன் நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரபலமான யூடியூபர் அப்போது, தன்னிடம் ஏராளமான பணம்-நகைகள் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் மதுமிதா வீடியோக்களை வெளியிட்டது தான், அவருடைய வீட்டில் கொள்ளை போனதுக்கு காரணம் என சமூகவலைதளத்தில் கருத்துகள் பரவியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுமிதாவின் முந்தைய வீடியோக்களை பார்வையாளர்கள் தேடி பார்க்க தொடங்கினர். இதனால் அவருடைய வீடியோக்களுக்கு மவுசு தினமும் எகிறியது. இதற்கிடையே இந்த கொள்ளையை பற்றி துப்பு துலக்க போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படைகளை அமைத்து தீவிர மாக விசாரணை நடத்தி வந்தனர். இது ஒருபுறம் இருக்க மதுமிதா, மீண்டும் ரீல்ஸ் வீடியோக் களை சமூகவலைதளத்தில் உற்சாகமாக வெளியிட்டார். இந்த வீடியோக்களை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 18 மணி நேரத்தில் பார்த்தனர். இதனால் அவர் மேலும் பிரபலமானார். போலீசார் விசாரணை தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம ஆசாமிகள் 2 பேர் 'ஹெல்மெட்' மற்றும் முககவசம் அணிந்து டெலிவரி பையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெவ்வேறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதை வைத்து, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மதுமிதாவின் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சிக்கிய மர்ம ஆசாமிகளில் ஒருவர் பார்வதிபுரம் நோக்கி செல்கிறார். இன்னொருவர் திருநெல்வேலி மார்க்கமாக தப்பி செல்கிறார். வாலிபர் கைது இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மதுமிதா வீட்டில் கொள்ளையடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கி பாண்டி (30) என்ற வாலிபரை பிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மதுமிதாவின் ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து தான் இசக்கி பாண்டி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியுள்ளாராம். பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக இசக்கிபாண்டியனை கைது செய்தனர். அதே சமயத்தில் இந்த கொள்ளையில் இசக்கி பாண்டியனுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள்? எனவும் அவருடன் வந்த மற்றொரு ஆசாமி யார்? எனவும் விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-stealing-118-sovereigns-of-gold-jewelry-from-female-youtuber




