ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 10 மணி அளவில் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றப்பட்ட பின்னர் கொடி மரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கும் மற்றும் கொடி மரத்தின் எதிரே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் 2-வது நாளான நாளை காலை 9 மணிக்கு மேல் அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு தங்க காமதேனு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. அம்பாள் தேரோட்டம் திருவிழாவின் 8-வது நாளான வருகின்ற 12ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமபிரான் தீர்த்தவாரி பூஜைக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அது போல் திருவிழாவின் 9 வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 13ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும், 10-வது நாளான வருகின்ற 14ஆம் தேதி அன்று அம்பாள் சிவதீர்த்ததில் தீர்த்தம் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருக்கல்யாணம் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 15ஆம் தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி- அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 16ஆம் தேதி அன்று ராமநாத சுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் கடைசி நாளான வருகின்ற 21ஆம் தேதி அன்று சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கோவிலில் இருந்து கந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aadi-thirukalyanam-festival-has-begun-at-the-rameswaram-temple




