நடிகர் திலீப் மற்றும் சித்திக் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்குப் பிறகு, மலையாளத் திரைப்படத் துறை சங்கமான 'அம்மா' (A.M.M.A) அமைப்பின் தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட முந்தைய நிர்வாகக் குழு ராஜினாமா செய்தது. தேர்தலில், ஸ்வேதா மேனனை தலைவராகக்கொண்டு, குக்கூ பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றனர். இதற்கிடையே பதவி ஏற்று பத்து மாதங்களில் தலைவராக இருந்த நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். பின்னர் மீண்டும் நிர்வாகத்தில் தொடர்வதாக கூறிவருகின்றனர். இந்த நிலையில் அம்மா அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நடிகைகள் ரேவதியும் பத்மப்ரியாவும் ராஜினாமா செய்துள்ளனர். தங்களது இந்த முடிவு தற்போது 'அம்மா' அமைப்பில் நடந்து வரும் சர்ச்சைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டதல்ல என்றும், சுமார் 10 ஆண்டுகளாக தாங்கள் எழுப்பி வரும் கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர். இது குறித்து நடிகைகள் ரேவதி மற்றும் பத்மப்ரியா ஆகியோர் கூட்டாக வெளியிடுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ``நாங்கள் ராஜிநாமா செய்வது 'அம்மா' அமைப்பில் தற்போது அரங்கேறி வரும் அடுத்தடுத்த விவாதங்களின் அல்லது சர்ச்சைகளின் மற்றொரு அத்தியாயம் மட்டும்தான் என்று தோன்றலாம். ஆனால், இது அப்படியல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். எங்களுடைய இந்த ராஜினாமா முடிவு அவசரக்கோலத்தில் எடுக்கப்பட்டதோ அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட எதிர்வினையோ அல்ல. கடந்த ஒரு தசாப்த காலமாக நாங்கள் முன்வைத்து வரும் கோரிக்கை மிகவும் எளிமையானது. பாதுகாப்பான பணியிடம், கண்ணியமான நடத்தை, பொறுப்புணர்வு மற்றும் சமமான அங்கீகாரம் ஆகியவையே அவை. ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய இந்த குறைந்தபட்ச அடிப்படை மதிப்புகள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று நாங்கள் மனதார நம்பினோம். ஆனால், அதற்கு எங்களுக்குப் பதிலாகக் கிடைத்தது மௌனமும் புறக்கணிப்பும் மட்டுமே. நடிகைகள் ரேவதி மற்றும் பத்மப்ரியா ஒரு காலத்தில் எங்களது சொந்த வீடு என்று நாங்கள் கருதிய இடத்திலிருந்தும், உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் இந்த மௌனம் மட்டுமே எஞ்சியது. இருந்தபோதிலும் நாங்கள் தொடர்ந்து எங்களுடைய முயற்சியைக் கைவிடாமல் இருந்தோம். ஏனெனில், எந்தவொரு ஏமாற்றத்தையும் வெல்லக்கூடிய அரிய சக்தி 'நம்பிக்கைக்கு' உண்டு. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு இந்த அமைப்பில் நிகழ்ந்த ராஜினாமாக்கள் யாவும், தங்களது பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியே தவிர வேறில்லை. பொதுமக்களின் கவனம் குறைந்தவுடன், பழைய நடைமுறைகளும் அதிகார வர்க்கமும் மீண்டும் தலைதூக்கித் திரும்ப வந்துவிட்டன. அதிகாரத்தின் முகங்கள் மாறலாம், அதன் வழிமுறைகள் மாறலாம், ஆனால், சமத்துவமின்மையின் கட்டமைப்பு மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. 'அம்மா' அமைப்பு உருவாக்கப்பட்டது அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான குரலாக இருப்பதற்காகத்தான். ஆனால், காலப்போக்கில் ஆணாதிக்கமும் அதிகார மோகமும் அதன் ஸ்தாபக லட்சியங்களைச் சிதைத்து, இந்த அமைப்பைப் படிப்படியாகப் பலவீனப்படுத்திவிட்டன. இந்தச் சூழலில், நாங்கள் இப்போது எடுத்துள்ள இந்த முடிவு என்பது ஒருபோதும் பின்னடைவோ அல்லது பின்வாங்கலோ அல்ல, மாறாக, இது எங்களுடைய சுயமரியாதைக்கான பிரகடனம் ஆகும். முன்பு பெண்கள் எதிர்கொண்ட அதே போராட்டங்களை, இனிவரும் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளத் தேவையில்லாத ஒரு சிறந்த இடமாக மலையாளத் திரைப்படத் துறை மாறும் என்பதில் எங்களுக்குத் தீர்க்கமான நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை என்பது ஒருபோதும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நாங்கள் உறுப்பினராக நீடிப்பதைச் சார்ந்தது அல்ல. சிறந்த திரைப்பட முயற்சிகளை நோக்கி எங்களுடைய கலைப் பயணம் எப்போதும் தொடரும். நடிகை ரேவதி சக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், ஒரு நியாயமான, நீதியான பணியிடச் சூழலை உறுதி செய்வதற்கும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். எங்களுக்கு எப்போதும் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி வரும் பொதுச்சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். ஒரு அமைப்பின் இருப்பு மற்றும் நிலைத்தன்மை என்பது தனிநபர்களைப் பொறுத்தது அல்ல, மாறாக அதன் நம்பகத்தன்மையை மட்டுமே பொறுத்தது என்ற உறுதியான கொள்கை விளக்கத்தோடும், எதிர்கால நல்லெதிர்பார்ப்போடும் நாங்கள் விடைபெறுகிறோம்." இவ்வாறு அவர்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/mollywood/actress-revathi-and-padmapriya-resigns-from-the-association-of-malayalam-movie-artists




