Volledig artikel
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கோபிநாத். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாகத்தான் இருந்தனர். ரஞ்சித் வீட்டில் வளர்ந்து நின்ற தென்னை மரத்தில் இருந்து தேங்காய், ஓலை உள்ளிட்டவை தனது வீட்டு வளாகத்திக் விழுவதாகவும், அதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி கோபிநாத் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் விவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தனது பக்கத்து வீட்டாரின் தென்னை மரம் தனது வீட்டிற்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறி கரகுளம் ஊராட்சியில் புகார் அளித்திருந்தார் கோபிநாத். அவரது புகாரைத் தொடர்ந்து தென்னை மரத்தின் உரிமையாளர் ரஞ்சித் அந்தத் தென்னை மரத்தை இரும்புக் கம்பியால் இழுத்துக் கட்டினார். மேலும் தேங்காய்கள் எதிர்பாராதவிதமாக விழுந்து ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க அதன் உச்சியில் வலையையும் கட்டியிருந்தார். அதில் திருப்தியடையாத பக்கத்து வீட்டுக்காரர் கோபிநாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த விவகாரத்தை ஆராய உயர் நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் கமிஷனை நியமித்தது. அதற்கான செலவுத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை ஏற்கவும் மனுதாரர் கோபிநாத் தயாராக இருந்தார். வழக்கை விசாரித்த கமிஷன், "தென்னை மரம் பலவீனமாக இல்லை என்றும், தேங்காய்கள் கீழே விழாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று அறிக்கை சமர்ப்பித்தது. கேரள உயர்நீதிமன்றம்! இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "உன்னைப்போல் உன் அயலரையும் நேசிப்பாயாக" என்ற விவிலிய (பைபிள்) வசனத்தை அறிவுரையாகக் கூறி கேரள உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. ஆபத்து என்று வரும்போது உதவிக்கு அண்டை வீட்டாரே முதலில் வருவார்கள் என்றும் நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் இந்த மனுவை விசாரிக்கும் போது நினைவூட்டினார். இதுகுறித்து நீதிமன்றம் தனது உத்தரவில், "ஒரு கப் டீ குடித்துக்கொண்டே பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் இது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கின் தரப்பினர் காட்டும் கடுமையான போக்கை நீதிமன்றம் காட்ட விரும்பவில்லை. வழக்குக்கு காரணமான தென்னைமரம் ஒருவேளை தென்னை மரத்திற்குச் சிரிக்கும் திறன் இருந்திருந்தால், இந்தச் சண்டையைப் பார்த்து அது சிரித்திருக்கும். அதற்கு தானாகவே விழுந்துவிடும் சக்தி இருந்திருந்தால், தானாகவே விழுந்து இந்தச் சண்டையைத் தவிர்த்திருக்கும்" என்று நகைச்சுவையுடன் கோர்ட் சுட்டிக்காட்டியது. தற்போது அந்தத் தென்னை மரத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இதற்கு மேல் இதில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder




