கடந்த சில வருடங்களில் இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிராந்தியங்களில் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியப் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் புதிய சந்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்திய நிறுவனங்களுக்குப் பிற நாடுகளில் சந்தை அணுகல் கிடைப்பதும், வரிகள் குறைவதும், முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாவதும் வரவேற்க வேண்டிய விஷயங்கள்தான். ஆனால், ஒப்பந்தங்கள் மட்டுமே வர்த்தகத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவந்து விடுமா என்பது முக்கியமான கேள்வி. இந்தியத் தொழில்துறையில் பல அடிப்படைச் சிக்கல்கள் நெடுங்காலமாக கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. வர்த்தக ஒப்பந்தங்களில் காட்டும் ஆர்வத்தை அரசு, இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் காட்டவேண்டும். வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பெரியளவிலான வணிக வாய்ப்புகள் நமக்குக் கிடைத்திருப்பது முக்கியமானதுதான். அதேநேரம் நம் போட்டியாளர்கள் யார், சர்வதேசத் தரத்துடனும் தேவையை ஈடுசெய்யும் அளவுக்கும் நம் உற்பத்திகள் இருக்கின்றனவா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண வேண்டியதும் அவசியம். இந்தியா வளர்ந்த நாடாக மாற அதிக உற்பத்தி வேண்டும். அதிக முதலீடு வேண்டும். அதிக வேலைவாய்ப்புகள் வேண்டும். அதிக ஏற்றுமதி வேண்டும். உயர்தரமான பொருள்கள் மற்றும் சேவைகள் வேண்டும். உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்திய நிறுவனங்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். அந்த வகையில் நிலையான கொள்கை, உற்பத்தித் திறன், தரம், போட்டித்திறன், விநியோகத் திறன், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா இன்னும் பலபடிகள் முன்னேற வேண்டியிருக்கிறது. அதற்கு, அரசும் தனியாரும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். திறன்மிக்க மனிதவளம் உருவாக வேண்டும். இறக்குமதி வரி, ஏற்றுமதிக் கட்டுப்பாடு, தர விதிமுறை, உரிமம், வரிச் சலுகை, ஊக்கத்தொகை போன்ற பல்வேறு விஷயங்களில் நிலைத்தன்மை தேவை. உலக வங்கி முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை அனைவரும் சுட்டிக்காட்டுவது இவற்றைதான். ‘சுதந்திர நூற்றாண்டில் வளர்ந்த இந்தியா’ என்ற தம் கனவை பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சுதந்திர தின விழாவிலும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். அந்த நெடும் பயணத்துக்கான வாசலை வர்த்தக ஒப்பந்தங்கள் திறந்துள்ளன. இந்திய நிறுவனங்கள் உலகச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க, இப்போதிருந்தே தீர்க்கமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். 2047-ல் இந்தியாவை வளர்ந்த பொருளாதார தேசமாக மாற்றுவதற்கான செயல்பாடுகளை இன்றிலிருந்தே தொடங்குவோம். ஒருங்கிணைந்து இயங்குவோம்! - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/editorial/editorial-page-august-30-2026




