புதுச்சேரி, டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனத்தின் பேரில் புதுவையில் போலி மாத்திரைகள் தயார் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலி மாத்திரை தொழிற்சாலை உரிமையாளர் ராஜா உள்பட 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுவையில் பல்வேறு மாத்திரை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மாத்திரைகள், குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள், மூலப்பொருட்கள், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் எந்திரங்களை கைப்பற்றினர். மேலும் அந்த குடோன்கள், தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர். உரிமையாளர் ராஜாவின் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள், ரொக்க பணம், சொத்து பத்திரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் புதுவையில் இருந்து பல மாநிலங்களுக்கு போலி மாத்திரைகள் சப்ளை செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கில் பல மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதினர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மண்டபம் பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த படகில் சோதனை நடத்தினர். அதில் சட்ட விரோதமாக மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தியபோது, இமாசல பிரதேசத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தின் மாத்திரைகள் என்பது தெரியவந்தது. புதுவையில் இருந்து ராமேசுவரம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்ததும், அந்நிறுவனத்தின் சென்னை அலுவலக அதிகாரி ராஜ்குமார் பெயரில் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. உடனே கடலோர காவல்படையினர் அவரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'நாங்கள் இலங்கைக்கு எந்த மாத்திரைகளையும் அனுப்பவில்லை., அந்த மாத்திரைகள் எங்களது தயாரிப்பும் இல்லை' என மறுத்து விட்டார். இதற்கிடையே அந்த மருந்து நிறுவனத்தின் அதிகாரி ராஜ்குமார் புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள தொழிற்சா லையை புரோக்கர் மூலமாக தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் கொடுத்து மாத்திரைகள் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அனுப்பி வைத்த மாத்திரையும், ராமேசுவரம் பகுதியில் பிடிபட்ட மாத்திரையும் ஒன்று என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர், புதுவை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குரும்பாபேட் பகுதியில் உள்ள மெடினோக் ஹெல்த்கேர் மாத்திரை தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் போலியாக ரூ.3 லட்சம் போலி வலி நிவாரணி மாத்திரைகள் தயாரித்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த போலி மாத்திரை தொழிற்சாலை உரிமையாளரான சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மாத்திரை தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போல் போலியான மாத்திரைகள் வேறு ஏதாவது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு சென்று சோதனைக்காக மாத்திரைகளை எடுத்து சென்றுள்ளனர். மேலும் மெடினோக் ஹெல்த்கேர் மாத்திரை தொழிற்சாலைக்கும் 'சீல்' வைத்தனர். புதுவையில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/another-fake-pill-factory-discovered-in-puducherry-owner-arrested




