தர்மபுரி, சுடுகாட்டிற்குச் செல்ல வழிப்பாதை இல்லாததைக் கண்டித்து, முதியவரின் சடலத்தை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் (வயது 85) என்ற முதியவர் நேற்று இரவு வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களும் பொதுமக்களும் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், மயானத்திற்குச் செல்லும் பாதையைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இறந்தவரின் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்குச் செல்ல முறையான வழிப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அரூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மனு அளித்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்து பாதிப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உயிரிழந்த வேடியப்பனின் சடலத்தை மாநில நெடுஞ்சாலை செங்கம் செல்லும் சாலையில் நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், "அரூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் நேரில் வந்து உடனடியாக மயானப் பாதையை மீட்டுத் தர வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அம்மாப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-way-to-the-crematorium-road-blocked-with-corpse




