தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறுவதற்கு பல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட ஐந்து மலை கிராமங்கள் உள்ளன. அங்குள்ள வனப்பகுதியானது, 1929-ம் ஆண்டில் சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் நிலத்தை சீர்படுத்தி, அங்கு தேயிலைத் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர். அதற்காக 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக அங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணி செய்து வந்தார்கள். பி.பி.டி.சி கட்டுப்பாட்டில் இருந்த நிலம் அனைத்துக்கும் வரும் 2028-ம் ஆண்டு தான் குத்தகை காலம் முடிவடையும். ஆனாலும் அதற்கு முன்பாகவே, பி.பி.டி.சி நிர்வாகம், தேயிலைத் தோட்டத்தை மூடியதுடன் அங்குள்ள அனைத்து நிலங்களையும் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டது. கடந்த மாதம் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல் படி அடர் வனப்பகுதியில் பொதுமக்கள் வசிக்க தடை இருக்கும் சூழலில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் காடுகளை விட்டுக் கீழிறங்க உத்தரவிட்டது. ஆகவே, பொதுமக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுபாட்டில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் பணி செய்தவர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்ட சூழலில், அங்கிருந்த 534 குடும்பங்களில் 150-க்கும் மேற்பட்டோர் வெளியேற ஒப்புக்கொண்டனர். அவர்களில் சிலருக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பு, சிலருக்கு அரசு நிலம் வழங்குவது மற்றும் வீடுகள் கட்டிக் கொடுப்பது மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்குதல் என சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் சிலர், ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாக மலையை விட்டு வெளியேற மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியில் தற்போது வசிக்கும் குடும்பத்தினர் யார், வெளியேறிய குடும்பத்தினர் யார் என்பதைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் வனத்துறைக்கு நிலவி வருவதாகத் தெரிகிறது. அதனால் மாஞ்சோலை மலைப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்களில், அரசிடம் நலத்திட்டங்களைப் பெற்றவர்கள் மீண்டும் மலைப்பகுதிக்குச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஏற்கெனவே அங்கு குடியிருப்பவர்களையும் எப்படியாவது வெளியேற்றிவிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோதையாறு சென்ற அரசுப் பேருந்தை மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் நிறுத்திய வனத்துறை அதிகாரிகள், பேருந்துக்குள் இருந்தவர்களின் விவரங்களைப் பரிசோதித்தனர். அப்போது, ஏற்கெனவே அரசிடம் நலத்திட்ட உதவிகள் பெற்ற பலர் பேருந்துக்குள் இருப்பதும் அவர்கள் தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள தங்களின் சொந்த வீடுகளுக்குச் சென்று வருவதும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்களை வனப்பகுதிக்குள் செல்ல தடை இருப்பதைச் சுட்டிக்காட்டி, பேருந்தைவிட்டு கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளனர். அதற்கு மாஞ்சோலை உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பேருந்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில குடும்பத்தினர், மணிமுத்தாறு சோதனைச் சாவடி முன்பாக அமர்ந்து, தாங்கள் கொண்டுசென்ற உணவுப் பொட்டலங்களைப் பிரித்து உண்ணத் தொடங்கினார்கள். பொதுமக்களில் சிலர் வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. இது குறித்து அறிந்த மணிமுத்தாறு போலீஸார், பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, மாஞ்சோலை உள்ளிட்ட 5 வன கிராமங்களில் வசிக்கும் மக்கள் அடுத்த 10 தினங்களுக்குள் தங்களுடைய பொருள்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதுவரை மலைப் பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்ததால், தற்காலிகமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனாலும், பொதுமக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பல தலைமுறைகளாக தாங்கள் வசித்த பகுதியை விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதில் பொதுமக்கள் தீவிரம் காட்டும் நிலையில் அரசு இந்த விவகாரத்தில் நியாயமான முடிவை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/manjolai-residents-denied-entry-protest-against-forest-department-heated-argument




