தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் புகாரையடுத்து கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் கருப்பு முருகானந்தம். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கருப்பு முருகானந்தமும் அவரது ஆட்களும் எனது நிர்வாண வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள். கருப்பு முருகானந்தம் கட்சியில் பதவி உயர்வு பெறுவதற்காகவும் பணம் சம்பாதிக்கவும் என்னைப் பயன்படுத்த முயற்சித்தார்" என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார். இதையடுத்து பெண் நிர்வாகியின் குற்றச்சாட்டுகள் குறித்து கருப்பு முருகானந்தத்திடம் பேசியபோது. "அந்த மாதிரியான வீடியோக்களை எல்லாம் பரப்புகிற கேவலமான ஆள் நான் கிடையாது. என்னுடன் தொடர்பு இருப்பதாக அவர் சொல்வதுபோல், ஏற்கெனவே பல பேருடன் அவருக்குத் தொடர்பு இருக்கிறது. 'அவர் என்னுடன் பெங்களூருவிலும் திருவாரூரிலும் ஆறு மாத காலம் குடும்பம் நடத்தி, ஏமாற்றி சென்றுவிட்டார்' என இன்றுகூட ஒரு இளைஞர் திருவாரூர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். என்னால் அவர் கர்ப்பமுற்றதாகவும் இரண்டு முறை நான் அபார்ஷன் செய்யச் சொல்லி டார்ச்சர் செய்ததாகவும் பின்னர் அந்த அபார்ஷன் சர்டிபிகேட்டுகளை நானே அழித்துவிட்டதாகவும் என் மீது அவர் புகார் கூறியிருக்கிறார். ஒரு பெண் அபார்ஷன் செய்திருப்பது உண்மையென்றால், அது மருத்துவப் பரிசோதனையில் கட்டாயம் தெரியும். வேண்டுமென்றால், அவரை இப்போதேகூட மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கச் சொல்லுங்கள். உண்மை தெளிவாகத் தெரிந்துவிடும். '2016-ம் ஆண்டே அவர் கர்ப்பத்தடை ஆபரேஷன் செய்துகொண்டதாக' ஒரு வாரத்துக்கு முன்புகூட அவரது தாயாரே பேட்டியளித்திருக்கிறார். எனவே, அவருக்கு கர்ப்பத்தடை ஆபரேஷன் நடைபெற்றிருக்கிறதா, அபார்ஷன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் மருத்துவப் பரிசோதனை செய்து நிரூபிக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு அவர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்கிறேன்." "கட்சியில் கருப்பு முருகானந்தம் பதவி உயர்வு வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் என்னைப் பயன்படுத்த முயற்சி செய்தார் என்றும் சொல்லியிருக்கிறாரே?" "பா.ஜ.க-வில் நான் முப்பது வருடங்களுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். 'எனக்கு இந்தப் பொறுப்பு கொடுங்கள்' என இதுவரை யாரிடமும் நான் போய் கேட்டது கிடையாது. என்னுடைய உழைப்பைப் பார்த்துதான் தலைவர்களும் எனக்கு பொறுப்பு கொடுத்தார்கள். ஆக, என்னுடைய பதவிக்காக நானே வாய் திறந்து கேட்காதபோது, அவர் சொல்வதுபோல் எல்லாம் செய்திருப்பேனா? அவர் சொல்வது உண்மை என்றால், நான் அப்படி அவரைக் கட்டாயப்படுத்தி யாரிடம் அழைத்துச் சென்றேன் என்பதையும் அவரையே சொல்லச் சொல்லுங்கள். அவர் சொல்வது எல்லாமே பொய்தான். அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக சொல்கிறார். அதுவும் பொய்; இன்னும் அவருக்கு விவாகரத்து ஆகவில்லை. ஏற்கெனவே ஐந்தாறு பேர்களுடன் அவர் இதுபோல் தொடர்பில் இருந்ததாக, என்னிடம் தகவல் இருக்கிறது." "அப்படியென்றால், அந்த பெண்னுடன் உங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுக்கிறீர்களா?" "எந்தத் தொடர்பும் இல்லையென்று மறுக்கவில்லை. அவரை எனக்குத் தெரியும். கட்சியில் இருக்கிறார்; கட்சிகாக வேலை பார்த்திருக்கிறார். 30 வருடங்களாக நான் இந்தக் கட்சியில் வேலை பார்த்திருக்கிறேன். இதுவரை ஒரு பெண்ணிடம்கூட தப்பாக நடந்ததாக என் மீது எந்தவொரு புகாரும் இல்லை. என்னைக் கூடப்பிறந்த அண்ணனாக பார்க்கக்கூடிய பல பெண்கள் கட்சியில் இருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் என்னோடு பாசத்துடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை கட்சியில் கிடையாது." "அந்த பெண் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலா உங்களை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்?" "அதுதான் எனக்கும் தெரியவில்லை. இப்போதும்கூட கட்சி என் மீது எடுத்த நடவடிக்கைக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால், ஒருவரை பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் எதையும் என் விஷயத்தில் பின்பற்றாமலேயே பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார்களே என்றுதான் எனக்கு வருத்தம். கட்சி நிர்வாகிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தால், முதலில் கட்சியிலுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரிக்க வேண்டும். பின்னர்தான் அதுகுறித்து கட்சித் தலைமைக்கு அவர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும். அதன்பின்னர் கட்சித் தலைவர் இதுகுறித்து ஆராய்ந்து ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார். இதுதான் நடைமுறை. ஆனால், என் விவகாரத்தில் இந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. யாரும் இதுகுறித்து என்னிடம் ஒரு கேள்விகூட கேட்காமல், அவசரப்பட்டு ஏன் இப்படியொரு நடவடிக்கையை எடுத்தார்கள் என்பதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுக்காலமாக பா.ஜ.க-வுக்காக என் உயிரையும் பணயம் வைத்து நான் கட்சிப் பணியாற்றி வந்திருக்கிறேன். என் அளவுக்கு கட்சிக்காக உழைத்த, நேரம் செலவழித்த நபர்கள் கட்சியில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றுகூட தெரியவில்லை. இப்படிப்பட்ட என்னிடம் 'என்ன நடந்தது.' என்று ஒரு கேள்விகூட கேட்காமல் நீக்கியது உண்மையிலேயே வருத்தமானது!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/karuppu-murugananthan-denies-video-leak-allegations




