சென்னை, இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;- “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 80 ஆம் விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா, 78 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டபோது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத்தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையில் இருந்து மட்டும் விடுதலை பெற்றால் மட்டும் போதுமா? நம்மை சுரண்டும் சக்திகள், மது, போதை, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதி, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமை, சுற்றுச்சூழல் சீரழிவு, கனிமக் கொள்ளை என நாம் விடுதலை பெற வேண்டிய அடிமைத்தளைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை வென்றெடுத்தால் மட்டும் தான் நாம் உண்மையான விடுதலையை பெற முடியும். இந்த இலக்குகளை எட்டும் நாள்தான் நமக்கு உண்மையான விடுதலை நாள். கடந்த ஆண்டு இதே நாளில் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிகழ்ந்ததை விட அதிகமான சுரண்டல்களும், அத்துமீறல்களும் நடைபெறும் ஆட்சியை அகற்றுவதே நமது இரண்டாவது விடுதலை என்று தெரிவித்திருந்தேன். அந்த இலக்கை நாம் வென்றெடுத்து விட்டோம். எனினும் அதுமட்டுமே போதுமானதல்ல. நாம் வென்றெடுக்க வேண்டிய இலக்குகள் இன்னும் உள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மதுவும் போதையும் இன்னும் ஒழியவில்லை; சமூகநீதி தழைக்கவில்லை; வேலைவாய்ப்பு கனவுகள் நனவாகவில்லை. அவற்றையும் நாம் வென்றெடுக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக, நாட்டிற்கு விடுதலை தேடித் தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் மது இல்லா தமிழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறோம். இந்த பயணத்தின் நிறைவில் நமது அனைத்து இலக்குகளையும் வென்றெடுத்து உண்மையான விடுதலையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை நனவாக்குவதற்காக இன்று முதல் கடுமையாக உழைக்க நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-break-free-from-alcohol-unemployment-and-social-injustice-anbumanis-independence-day-greetings



