நடிகர் தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தனுஷ் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி, அவருடைய அரசியல் வருகைக்கான தொடக்கம்தான் இது எனப் பரபரப்பாகப் பேசப்பட்டும் வருகிறது. அந்த நிகழ்வின் முழு காணொளி இப்போது வெளியாகியிருக்கிறது. தனது ரசிகர்கள் குறித்தும், அவருடைய முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்தும் அந்த நிகழ்வில் அவர் பேசியிருக்கிறார். Dhanush பக்கபலமாக நிற்கும் தூண்கள்! தனுஷ் பேசுகையில், "திடீரென இப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்களே என்று சிலர் கேட்கிறார்கள். 2019-லேயே நாம் வெற்றிகரமாக ஒரு ரத்ததான முகாமை நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால், இப்போது ஏன் திடீரெனக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள் என்று கேட்கிறார்கள். இது என்ன திடீரென கூடிய கூட்டமா? 2002-ல் ஒரு சாதாரண ஒல்லிக் குச்சிப் பையனை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு, என்னை ஏந்திப் பிடித்து, தோளுக்குத் தோள் கொடுத்து, என் இன்ப துன்பங்களில் உடன் நின்று, எனக்கு வழிகாட்டும் தீப்பந்தங்களாக இருந்து வருகிறீர்கள். யார் வந்தாலும் போனாலும், யார் என்ன பேசினாலும் 'நாங்கள் இருக்கிறோம்' என்று கடந்த 24 ஆண்டுகளாக என் பக்கபலமாக நிற்கும் தூண்கள் நீங்கள்தான். இது வெறும் கூட்டம் அல்ல. என் அசுரக் குடும்பம். என் ரசிகர்கள் இணையத்தில் தவறான தகவல்களையோ, வதந்திகளையோ பரப்புபவர்கள் அல்ல. களத்தில் இறங்கிக் களைகட்டுபவர்கள், அன்பைப் பரப்புபவர்கள். 'அன்பே சிவம்' என்ற வழியில் பயணிப்பவர்கள். நாம் எப்போதும் சொல்வது ஒன்றுதான்—அன்பைத் தருகிறார்களா? அன்பையே திரும்பக் கொடுப்போம். வெறுப்பைத் தருகிறார்களா? அதற்கும் அன்பையே பதிலாகக் கொடுப்போம். Dhanush ஜூலை 28 என்பது ஒரு சாதாரண நாள்தான். மற்ற நாள்களைப் போல அதுவும் ஒரு தேதி, அவ்வளவுதான். ஆனால், பள்ளிப் பருவத்தில் யாராவது பிறந்தநாளுக்குப் புது உடையில் வரும்போது, சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர்கள்தான் ஸ்பெஷல். மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு என் பிறந்தநாள் எப்போது என்றே தெரியாது. நானும் வீட்டில் கேட்டதில்லை, அவர்களும் சொன்னதில்லை. ஆனால், பள்ளியில் சக மாணவர்கள் வண்ண உடையில் வருவதைப் பார்த்தபோது, நாமும் ஒருநாள் இப்படி வர வேண்டும் என்ற ஆசை வந்தது. என் அக்காவிடம் சென்று, 'என் பிறந்தநாள் எப்போ? எனக்கும் கலர் உடையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்' என்று என் ஆசையைக் கூறினேன். அதன்பிறகு என் அக்காதான் பெற்றோரிடம் பேசி, 'ஜூலை 28 தான் உன் பிறந்தநாள்' என்று சொன்னார். அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் புது உடை எடுத்துத் தருவார்கள். ஆனால், என் அக்கா பெற்றோரிடம் பேசி எனக்கு ஒரு புது உடையை வாங்கிக் கொடுத்தார். அந்தப் புது உடையைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். அப்போது 25 பைசாவிற்கு ஆசை சாக்லேட் கிடைக்கும். அக்கா தனக்காகச் சேர்த்து வைத்த பணத்தில் அந்தச் சாக்லேட்டுகளை வாங்கித் தந்தார். முதல்முறையாகப் புது உடையில் பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாக்லேட் கொடுத்தேன். அன்றைய நாள் முழுவதும் நான்தான் ஸ்பெஷல். அந்தச் சந்தோஷத்தை என்னால் மறக்கவே முடியாது. Dhanush அதன்பிறகு நாட்கள் செல்லச் செல்ல, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. அன்று நான் மட்டுமே கொண்டாடிய அந்தப் பிறந்தநாளை, இன்று நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வளவு பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறீர்கள். உங்கள் சொந்தப் பிறந்தநாளில் கூட உங்கள் முகத்தில் இவ்வளவு மகிழ்ச்சி இருக்குமா என்று தெரியவில்லை. இதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ, உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியவில்லை. நன்றி என்ற ஒரு வார்த்தையைத் தவிர உங்களுக்கு என்னால் வேறு எதையும் கொடுத்துவிட முடியுமா என்று தெரியவில்லை" எனப் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/actor-dhanush-speech-43rd-birthday-blood-donation-camp




