‘பூனை’யால் அவமானப்பட்ட பிரிட்டன்உளவன் 06 1942-ம் ஆண்டு. பிப்ரவரி 12-ம் தேதி. நண்பகல். டோவர் ஜலசந்தி - ஆங்கிலக் கால்வாய், பிரிட்டன். திடீரென பீரங்கி சுடும் சப்தம். ஜெர்மன் கப்பல் படை அதிர்ந்தது. குண்டு எதுவும் கப்பல் மேல் விழவில்லை. அச்சப்பட்டது சரியே. பிரிட்டன் கப்பல் படை விழித்துக் கொண்டுவிட்டது. கடற்கரையில் உயரமான பாறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பீரங்கிகள் குண்டு மழை பொழிந்தன. வானிலை படுமோசம். ஜெர்மன் கப்பல்களைத் துல்லியமாகத் தாக்க முடியவில்லை. 33 பீரங்கி குண்டுகளும் கடலில் விழுந்தன. வீட்டு வாசலைக் கடந்து செல்லும் ஜெர்மன் கப்பல்களைத் துரத்த, பிரிட்டனில் எந்த போர்க் கப்பலும் தயார் நிலையில் இல்லை. ஐந்து சிறிய ரக மோட்டார் படகுகள் சீறிப் பாய்ந்தன. பறந்து சென்ற படகுகள் டார்பிடோக்களை எறிந்தன. கடலுக்குள் சென்று நீரின் உள்ளிருந்தே இலக்குகளைத் தாக்கும் ‘கடல் ஏவுகணை’ டார்பிடோ (Torpedo). பிரிட்டனின் வான்படையும் களத்தில் குதித்தது. இரண்டடுக்கு இறக்கைகள் கொண்ட ஆறு டார்பிடோ விமானங்கள் விரைந்தன. ஜெர்மன் கப்பல் படையை நெருங்க முடியவில்லை. தூரத்தில் வட்டமிட்டன. உளவன் 06 ஜெர்மனியின் பெரிய போர்க் கப்பல்களிலிருந்த பீரங்கிகள் முழங்கின. பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து விமானப் படை தளங்களிலிருந்து ஜெர்மனியின் போர் விமானங்கள் பறந்து வந்தன. பிரிட்டனின் ஆறு டார்பிடோ விமானங்களையும் குண்டுகளால் துளைத்தெடுத்தன. பிரிட்டன் விமானப் படை மரண வலைக்குள் சிக்கிக் கொண்டது. ஆறு டார்பிடோ விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. 13 விமானிகள் கொல்லப்பட்டனர். 5 விமானிகள் படுகாயங்களுடன் தப்பித்தனர். விமானங்களிலிருந்து வீசப்பட்ட டார்பிடோ குண்டுகளும் ஜெர்மன் கப்பல்களைத் தாக்கவில்லை. உளவன் 06 பிரிட்டன் விமானப் படை விடுவதாக இல்லை. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஆங்கிலக் கால்வாய் கடல் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்தன. திடீரென பறவைக் கூட்டம் பறப்பது போல புகையையும் இரைச்சலையும் வாரி இறைத்தன போர் விமானங்கள். மோசமான வானிலை ஜெர்மன் கப்பல் படைக்கு சாதகமாக இருந்தது. 40-க்கும் மேற்பட்ட பிரிட்டன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சில விமானங்கள் கடலில் விழுந்தன. ஜெர்மனி 17 விமானங்களை இழந்தது. ஹிட்லரின் தீர்மானத்தை எந்த வகையிலும் பிரிட்டனால் முறியடிக்க முடியவில்லை. உச்சத்தில் இரண்டாம் உலகப் போர். ஹிட்லரின் கையே ஒங்கி இருந்தது. அச்சு நாடுகள் முழு ஐரோப்பாவையும் கபளீகரம் செய்ய நாள் குறித்தன. நேச நாடுகள் கை பிசைந்து நின்றன. எந்த நேரத்திலும் பதிலடி தரலாம். எதிர்கொள்ள தயாராக இருந்தார் ஹிட்லர். ஆக்கிரமிக்கப்பட்ட ஃபிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் (Brest) துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று போர்க் கப்பல்களை, பிரிட்டன் தாக்கும் அபாயம் இருந்தது. இதனை ஜெர்மனிக்கே கொண்டு வர ஹிட்லர் விரும்பினார். கப்பல்களைக் கொண்டு வர இரண்டு வழிகளே இருந்தன. வட அட்லாண்டிக் கடலைச் சுற்றி ஜெர்மனிக்கு வர வேண்டும். ஆங்கிலக் கால்வாய் வழியாக, பிரிட்டன் எல்லையைத் தொட்டு ஜெர்மனிக்கு வர வேண்டும். முதல் வழித்தடம் சுமார் 2000 முதல் 2500 கடல் மைல் தூரம். ஐந்து அல்லது ஆறு நாட்கள் பயணம். நடுக்கடலில் எரிபொருள் நிரப்ப டேங்கர் கப்பல்கள் வர வேண்டும். இந்தப் போக்குவரத்து எதிரிகளின் கண்களில் படலாம். இது தவிர ஸ்காட்லாந்து அருகே பிரிட்டனின் பிரமாண்ட கடற்படைத் தளம் உள்ளது. அங்கிருந்து தாக்கினால் தப்பிப்பது சுலபமல்ல. உளவன் 06 இரண்டாவது வழித்தடம் 850 முதல் 900 கடல் மைல் தூரம்தான். விரைவாகக் கலங்களைச் செலுத்தினால் 24 - 36 மணி நேரத்தில் எல்லையைத் தொட்டு விடலாம். ஆனால், மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்க வேண்டும். டோவர் ஜலசந்திப் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும். பிரிட்டனின் வாசல்படியை ஒட்டியது இந்தப் பயணம். இருந்தாலும் விமானப் படை உதவியோடு எளிதாகக் கடந்து விடலாம். குருட்டு நம்பிக்கையில் களமிறங்கியது ஜெர்மன் கடற்படை. இப்படி ஒரு நகர்வை மேற்கொண்டால் அது இரவில்தான் இருக்கும் என்பது பிரிட்டனின் நம்பிக்கை. திருட்டுத்தனத்தை இருட்டில்தானே செய்வோம். ஜெர்மனியும் அதைத்தானே செய்யும். `நீ இப்படி நம்பிக் கொண்டிரு, நீ விழித்திருக்கும் பகல் நேரத்திலேயே நாங்கள் ஆங்கிலக் கால்வாயை கடப்போம். துணிந்து இறங்கியது ஜெர்மனி. கிரேக்க புராணத்தில், நரகத்தை காவல் காக்கும் மூன்று தலை நாய்க்கு பெயர் ‘செர்பரஸ்’. அந்தப் பெயரையே வைத்தனர். Operation Cerberus. 1942-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நள்ளிரவு. பிரிட்டனின் ரேடார் அலைவரிசையைக் குழப்பும் வேலையைத் தொடங்கியது ஜெர்மனியின் உளவுத்துறை அப்வேர். ரேடார் திரைகளில் வழக்கத்திற்கு மாறான இரைச்சல். மோசமான வானிலை அதனால் இரைச்சல் சப்தம் என நம்பியது பிரிட்டன் ரேடார் கண்காணிப்புக் குழு. ஃபியூரரின் உத்தரவை ஏற்று ஃபிரான்ஸின் கடல் பகுதியில் இருந்து மூன்று கப்பல்களும் மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்தன. அடுத்த நாள் நண்பகல் வேளை. டோவர் ஜலசந்தியின் மையப் பகுதி. பிரிட்டனின் கடல் எல்லை 20 கடல் மைல் தூரம்தான். மூன்று கப்பல்களும் டோவர் ஜலசந்தியை கவனமாகக் கடந்தன. அந்த மூன்று கப்பல்களுக்கும் பாதுகாப்பாக ஆறு சிறிய ரக கப்பல்கள். கூடவே ஏராளமான டார்பிடோ படகுகள். இது போதாதென்று, ஒரே சமயத்தில் இறக்கைகளை விரித்த பறவைகளைப் போல 32 விமானங்கள் கப்பல் படைக்கு மேலே குடையாக பாதுகாப்புக்கு வந்தன. அடுத்த சுற்று விமானங்கள் வந்து சேர்ந்தவுடன், இவை எரிபொருள் நிரப்பச் சென்றன. இப்படியாக ஜெர்மன் படையின் 280 போர் விமானங்கள் ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பில் சுற்றிச் சுற்றி வந்தன. சுற்றிலும் போர்க் கப்பல்கள், ஆகாயத்தில் போர் விமானங்கள் புடை சூழ படையினர் அனைவரும் பிப்ரவரி 13-ம் தேதி மதிய உணவுக்கு ஜெர்மனிக்கு வந்துவிட்டனர். உளவன் 06 அடுத்த நாள் பிரிட்டன் பத்திரிகைகள் அலறின: பிரிட்டனுக்கு மோசமான தோல்வி. பிரிட்டன் கடல் எல்லையில் கையசைத்து விட்டுச்சென்ற எதிரிப் படை. 17-ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆங்கிலக் கால்வாயைக் துணிச்சலாகக் கடந்த எதிரிப் படை. பிரிட்டனுக்கு அந்த வாரம், இருண்ட வாரம். ஜெர்மனியின் பிரமாண்ட வெற்றிக்கும் பின்னால் இருந்தது ஒரு பூனை. 5 அடி 6 அங்குலம் உயரம். ஒல்லியான முகம். நெருக்கமான கண்கள். தீர்க்கமான பார்வை. பார்த்தவுடன் மின்னல் வெட்டியது போன்ற புன்னகை. பேசத் தொடங்கினால் இயந்திரத் துப்பாக்கியின் வேகத்தில் விழும் வார்த்தைகள். இதுதான் ரோமன் கார்பி செர்னியாவ்ஸ்கி (Roman Garby Czerniawski). ‘போலந்தின் ஜோன் ஆஃக் ஆர்க்’ என தன்னைத்தானே அழைத்துக் கொண்ட சாகசக்காரர். போலந்தின் விமானப் படையில் பணி. விபத்தொன்றில் பகுதியளவு பார்வையை இழந்தார். உளவுப் பிரிவில் தேச சேவையைத் தொடர்ந்தார். எதிருளவில் (Counter Intelligence) விற்பன்னராக உயர்ந்தார். போலந்தை தாக்கியது அச்சுப் படை. ஃபிரான்ஸுக்கு தப்பிச் சென்றார். ஃபிரான்ஸையும் கபளீகரம் செய்தது ஹிட்லரின் சேனை. பிரிட்டனில் தஞ்சம் புகுந்த போலந்தின் தேச பக்தர்கள், அங்கிருந்து நாடு கடந்த தேசமாக செயல்பட்டனர். மீண்டும் இன்னொரு நாட்டின் அகதியாகச் செல்ல செர்னியாவ்ஸ்கி தயங்கினார். மிக உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட மனித முயற்சிகளில், ஒற்றனாக இருப்பது மரியாதைக்குரிய பணி. போரின் முக்கிய அங்கம் உளவு. சிறு சிறு செல்கள் ஒருங்கிணைந்து ஓர் உறுப்பாவது போல், ஒற்றறிந்து கிடைக்கும் சின்னச் சின்ன தகவலும் போரின் போக்கை மாற்றும். இதெல்லாம் அவரின் நம்பிக்கை. சாகசம் என்பதைத் தாண்டி, உளவுப் பணியை தூரநோக்கோடு அணுகினார். தனிநபராக உளவுத்துறையை இயக்கும் வல்லமையைப் பெற்றிருந்த செர்னியாவ்ஸ்கி, ஃபிரான்ஸிலேயே சுயாதீனமாக உளவு வலைப் பின்னலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு நாடு கடந்த போலந்து அரசு உதவியது. அமைப்புக்கு Interallie எனப் பெயரிட்டார். வேவு பார்ப்பதை ஓர் இயக்கமாக்கி, ஒற்றறிய விரும்பும் சாகசக்காரர்களை ஒருங்கிணைத்தார். அப்படி இணைந்தவள்தான் மாடில்டே லில்லி கேரி. செர்னியாவ்ஸ்கிக்கு ஃபிரெஞ்ச் மொழி பேசுவதில் சிரமம் இருந்தது. உதவிய மாடில்டே, விரைவில் செர்னியாவ்ஸ்கியின் நம்பிக்கையைப் பெற்றாள். அவளுடைய Codename CAT. இவள்தான் அந்தப் பூனை. இயக்கத்தின் ஆட்சேர்ப்பு பிரிவை பூனையிடம் ஒப்படைத்தார். உளவன் 06 ஃபாசிஸத்திற்கெதிரான இண்டர்அல்லே பட்டாளம் சத்தமில்லாமல் வளர்ந்தது. இயக்கம் வளர வளர, செர்னியாவ்ஸ்கி மீதான பூனையின் காதலும் சேர்ந்தே வளர்ந்தது. ஜெர்மன் படைகளின் நகர்வுகள், வெடிமருந்துக் கிடங்குகள், ரேடார் நிலையங்கள் என இண்டு இடுக்குகளில் புகுந்து ஒற்றறிந்தனர். அந்தத் தகவல்களை பிரிட்டனுக்கு அனுப்பினர். எதிருளவு துறையில் கோலோச்சிய செர்னியாவ்ஸ்கியின் வலைப் பின்னல் பலமடைந்தது. பூனையுடனான காதலும் வலுத்தது. இண்டர்அல்லேயின் வளர்ச்சி அப்வேரின் கண்களை உறுத்தின. இயக்கத்தில் புதிதாக இணைந்த ஒரு பெண்ணின் பின்னால் சுற்றினார் செர்னியாவ்ஸ்கி. பூனையைக் கண்டு கொள்ளவில்லை. உள்ளுக்குள் குமுறிய பூனை, அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அப்வேரின் ஆக்டோபஸ் கரங்கள் இண்டர்அல்லேவை தொட்டன. ஓர் உளவாளி சிக்கியதும், அடுத்தடுத்து ஆட்களைத் தூக்கினர். ஒரே நாளில் காலையில் பூனை சிக்கினாள். மாலையில் வேறொரு இடத்தில் செர்னியாவ்ஸ்கி சிக்கினார். நேரம் பார்த்து காத்திருந்த பூனை பழிவாங்கும் படலத்தை தொடங்கினாள். செர்னியாவ்ஸ்கி மீதிருந்த கோபம் மட்டும் இதற்கு காரணமல்ல. அப்வேர் அதிகாரியின் அழகில் மயங்கிய பூனை, அவரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்த அவர் கேட்காமலே தகவல்களை வாரி வழங்கினாள். இண்டர்அல்லே பயன்படுத்தும் ரேடியோ சாதனங்கள் இருக்கும் இடத்தையும் காட்டிக் கொடுத்தாள். அப்வேரின் இரட்டை உளவாளியாக மாறினாள். பிரெஸ்ட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் போர்க் கப்பல்கள் புறப்படும் நிலையில் தயாராக உள்ளதா? ரேடாரில் கேட்டது பிரிட்டனின் MI6 உளவுத்துறை. உடனே அப்வேர் சுதாரித்தது. அந்த சாதனங்கள் மூலமே, தவறான தகவலை அனுப்பினாள் பூனை. பூனையை எப்போதும் பலமாக நம்பி வந்தது MI6. மூன்று கப்பல்களையும் பத்திரமாக மீட்டது ஜெர்மனி. பூனையின் காதல், பிரேக்கப், இன்னொரு காதல். இதுதான் Operation Cerberus பின்னணி. ஒருவேளை செர்னியாவ்ஸ்கி பூனையை கழட்டி விடாமல் இருந்திருந்தால், பிரிட்டனுக்கு இந்த வரலாற்று அவமானம் ஏற்பட்டிருக்காதோ. (தொடரும்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/literature/ulavan-a-new-series-on-second-world-war-spy-world-part-six




