சென்னை, அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதும், வெடிமருந்து பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் மிகவும் பொறுப்பற்ற நிர்வாக அணுகுமுறை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வெடிமருந்து பயன்படுத்த அனுமதி நாட்டின் அணுப் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடைய கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் குவாரிகளில் வெடிமருந்து பயன்படுத்தும் வெடிப்பு முறை இடம்பெற்றிருப்பது குறித்தத் தகவல்கள் கடும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன. இது வெறும் செய்தி அல்ல. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ EIA ஆவணமே, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், இருக்கன்துறை Part-II பகுதியில் 4.87.80 ஹெக்டேர் பரப்பிலான குவாரித் திட்டத்தில் துளையிடுதல் மற்றும் வெடிமருந்து மூலம் பாறைகளை உடைக்கும் வெடிப்பு முறை திட்டமிடப்பட்டிருப்பதைப் பதிவு செய்துள்ளது. மேலும், கூடங்குளம், இருக்கன்துறை,எருக்கந்துறை பகுதிகளில் குவாரி விதிமீறல்கள் மற்றும் அனுமதியற்ற வெடிப்பு முறை குறித்தப் புகார்களும் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதும், வெடிமருந்து பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் மிகவும் பொறுப்பற்ற நிர்வாக அணுகுமுறையாகும். தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியப் போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அணுமின் நிலையத்திற்கு பாதிப்பு? அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த அலுவல் பிரச்சினை மட்டுமல்ல. அப்பகுதியில் வாழும் மக்களின் உயிர், உடைமை, எதிர்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரிய பொறுப்பு. ஒரு குவாரியில் வெடிக்கப்படும் வெடி பாறையைச் சிதைக்கலாம். ஆனால் அதன் அதிர்வு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து முழுமையான அறிவியல் மதிப்பீடு செய்யாமல் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குவாரி முதலாளிகளின் கல் வியாபாரத்திற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கக் கூடாது. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து குவாரிகளின் செயல்பாடுகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக அணுமின் நிலையத்திலிருந்து ஒவ்வொரு குவாரியும் எவ்வளவு தொலைவில் உள்ளது, அதன் சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதிகள் என்ன, வெடிமருந்து பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ அனுமதி உள்ளதா?, வெடிப்பு முறை அதிர்வுகள் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை பாதிக்காது என்பதை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் வெளிப்படையாக வெளியிட வேண்டும். அணு உலைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு மண்டல எல்லையை (Buffer / Sterile Zone) மீறி எந்தவொரு குவாரிக்கும் அனுமதி வழங்கப்படக் கூடாது என்பதோடு, இதில் ஒன்றிய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) மற்றும் சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகம் (DGMS) ஆகியவற்றின் முன் அனுமதி பெறப்பட்டதா? என்பதையும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும். அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக ஆபத்து இல்லையென்று அர்த்தமல்ல. கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தச் சமரசத்திற்கும் இடமில்லை. குவாரி லாபத்தைவிட மக்களின் உயிர் மேலானது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விதிமீறல் அல்லது அனுமதியற்ற வெடிப்பு முறை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரிகளை உடனடியாக மூடி, அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுஆய்வு செய்ய வேண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள குவாரி நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக முழுமையாக மறுஆய்வு செய்து, ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெடிப்பு முறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-lives-of-the-people-of-kudankulam-being-gambled-with-for-the-sake-of-quarry-profits-velmurugan-asks




