சென்னை, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டத்திருத்தம் தமிழ்நாட்டில் 'வளர்ச்சி' என்ற போர்வையில் விவசாய நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு மிக எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில், அரசு மேற்கொண்டு வரும் சட்டத்திருத்தங்களும் அரசாணைகளும் கடும் கண்டனத்திற்குரியவை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 8-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் கடந்த ஜூலை 31-ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை ஆகியவை வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், நில உரிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நன்செய் நிலங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில உரிமைகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், திட்டப் பரப்பிடம் அல்லாத பகுதிகளில் உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கும் பயன்பாடு மாற்றம் செய்வதற்கும் மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடைமுறையை நீக்கி, அதற்கான அனைத்து அதிகாரங்களையும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) இயக்குனரிடம் மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அளவிலான ஒரே ஒரு அதிகாரியிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் எல்லைக்குள் நடக்கும் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழப்பதுடன், உள்ளூர் மக்களின் தேவைகளுக்கோ அல்லது உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கோ சட்டப்பூர்வ மதிப்பு குறையும் அபாய நிலை ஏற்படுகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள 'அதிகாரப் பரவலாக்கம்' என்ற கோட்பாட்டிற்கு மாறாக, உள்ளாட்சிகளின் சுயாட்சியைக் குறைத்து மாநில அரசு அதிகாரத்தை மையப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கே முற்றிலுமாக முரணானதாகும். ஏற்கெனவே 2017-ல் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, வேளாண் நிலங்களைப் பயன்பாடு மாற்றம் செய்ய வேளாண் துறை இணை இயக்குனரிடம் தடையின்மை சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது அதையும் தளர்த்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்துத் தாரைவார்க்க தவெக அரசு முயல்கிறது. வளர்ச்சி திட்டம் 'வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துதல்' என்ற பெயரில் காலதாமதத்தைக் குறைக்க விரும்புவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது உள்ளாட்சி பிரதிநிதிகளின் சுதந்திரத்தையும், நிலத்தின் தன்மையை பரிசீலிக்கும் அடிப்படைச் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத் தடுப்பணைகளையே அரசு தகர்த்தெறியும் ஜனநாயக விரோத செயலாகும். 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவது என்ற பெயரில், உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் நன்செய் நிலங்களையும், நிலத்தடி நீரைச் சேமித்துச் சூழலியல் சமநிலையைப் பேணும் வேளாண் பரப்புகளையும் அரசு தியாகம் செய்யத் துணிவது எதிர்கால தலைமுறையின் உணவுப் பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பேரழிவை உண்டாக்கும். இது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது ஊரின் நிலங்களைப் பாதுகாக்கும் உரிமையையும் நேரடியாகப் பறிப்பதாகவே அமைகிறது. வலியுறுத்தல் எனவே, தமிழ்நாட்டின் வேளாண் எதிர்காலத்தையும், பரவலாக்கப்பட்ட ஜனநாயக அமைப்பான உள்ளாட்சிகளின் சுயாட்சியையும் சீர்குலைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்தங்களையும், ஜூலை 31 அரசாணையையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-the-town-and-country-planning-amendments-stpi-urges-tamil-nadu-government




