சென்னை, சிவகாசி அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தான் நடத்திய ஆய்வு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அது குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். கேலி செய்கிறார்கள் இந்நிலையில், இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல. என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். கற்றுக்கொண்டே இருக்கிறேன் நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. தமிழ் வழி மாணவி இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். கேலி செய்யாதீர்கள் என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இன்னொரு கேள்வி. இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-myself-am-a-government-school-student-i-studied-through-the-tamil-medium-minister-keerthana




