`சினி'ஸ்கோப் 21விண்ணைத்தாண்டி வருவாயா? கல்யாணம் நின்று போன இரவில் ஜெஸ்ஸியைச் சந்திக்க, அவளது வீட்டுக்கு வருகிறான் கார்த்திக். காதல் இரு மனங்களில் எழுதப்படும் ஒரே கவிதை. அதே நேரத்தில் ஜெஸ்ஸியும் அவனைக் கடைசியாய் ஒருமுறை பார்த்துவிட வேண்டுமெனும் ஆவல் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர்தான், அவள் தன் தந்தைக்கு, ‘இனி அவனைப் பார்ப்பதில்லை, பேசுவதில்லை’ என்று வாக்குக் கொடுத்திருக்கிறாள். அதோடு அவர்கள் மாட்டிக்கொண்டால், அது அடிதடி, போலீஸ் என்பதான இன்னும் பெரிய ரசாபாசங்களை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. ஆனால், காதலில் துணிவுதான் மிக ரசமான அம்சம். மௌனராகம் படத்தில் மனோகர், திவ்யாவை காபி சாப்பிட அழைத்துப் போகிறான். மனோகருக்கு, அவளோடு விளையாடி அவள் மனதில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பது நோக்கம். அவளோ, அவன் மீது தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைச் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாள். அப்போது இருவருக்கும் தெரிந்த யாராவது வந்தால், பொதுவாக மறைந்துகொள்ளத்தான் நினைப்பார்கள். மனோகரோ, தற்செயலாக அங்கு வரும் திவ்யாவின் தந்தையாரை, ’காபி சாப்பிட வாங்க மிஸ்டர். சந்திரமௌலி’ என்று அவளைக் கொதிப்படைய வைக்கிறான். இம்மாதிரியான இடங்களில் பார்வையாளர்களான நமக்குமே டென்ஷன் எகிறத்தான் செய்கிறது. ஜெஸ்ஸியும், கார்த்திக்கும் அவ்வளவு தைரியமாக வீட்டின் புறத்தோட்டத்தில் நிலவொளியில் பேசிக்கொள்கிறார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா ”சர்ச்ல வைச்சிக் கல்யாணத்தை நிறுத்துறதுக்கு பெரிய கட்ஸ் வேணும். ஏன் ஜெஸ்ஸி, அந்தப் பையனை உனக்குப் பிடிக்கலையா?” இனிமேலும் காதலின் கனத்தை அவளால் தாங்கிக்கொண்டிருக்க முடியாது. அவன் மீதான காதலை முதன்முறையாக, ஒளிவுமறைவின்றி முழுமையாக எடுத்து வைக்கிறாள் அவள். “உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ கார்த்திக்!” இருவரும் சில கணங்களுக்குப் பேச்சின்றித் தவிக்கிறார்கள். காதல் அவ்வளவு அடர்த்தியாகத்தான் இருக்கும். இருவருக்கும் நெஞ்சம் படபடக்கிறது. பெருமூச்சு விட்டுக்கொள்கிறார்கள். ஜெஸ்ஸியின் கரம் பற்றிக்கொண்டு அவளது சுவாசம் படும் நெருக்கத்துக்குப் போகிறான் கார்த்திக். “உன்னைப் பின் தொடர்ந்து தொல்லை செய்து, பாடாய்ப்படுத்தி விட்டேனா?” இந்தக் காதலை அவள் ஏற்றுக்கொண்டது, அவன் செய்த தொல்லையாலா எனும் ஒரு சிறிய சந்தேகம். ஆனால், அது அப்படியில்லை. எப்போதும் காதல் என்பது தொல்லையானதில்லை. தொல்லை தருவது ஒருபோதும் காதலுமாகாது! ”உன்னை முதலில் பார்த்தவுடனேயே பிடிச்சுப்போச்சு கார்த்திக். டெரேஸ்ல வைச்சு உன்னைப் பார்த்தப்போ உன் முகத்தைத் தொட்டுப் பார்க்கணும்னு தோணுச்சு. ரோட்ல வைச்சு நீ என்கிட்ட காதலைச் சொன்னப்போ, எனக்கு என் மேலயே கோபம். உன் மீதான என் காதலை மறைக்க முடியாத அளவுக்கு நான் அவ்வளவு வீக்காகவா இருந்தேன்னு. டிரெயின்ல ‘ஃப்ரெண்ட்ஸ்’னு நீ எழுதி வைச்சதைப் பார்த்தப்போ, டிரெயின் சத்தத்தை விட என் ஹார்ட்பீட் சத்தம்தான் அதிகமா கேட்டுச்சு. எனக்கு அது காதல்னு தெரியும். அதனாலதான் டிரெயின்ல என்னை நீ கிஸ் பண்ணினப்ப உன்னை நான் தடுக்கல” கார்த்திக் இனி அவனது வாழ்நாளில், அப்படியொரு நிறைவைப் பெறவே முடியாது. அத்தகைய தருணம் அது. ஒரு சினிமாவின் அடிப்படை அம்சம் கதைதான்! ஆனால், அதிலேயேயும்கூட விதிவிலக்குகள் உண்டு! அவ்வளவு எளிதில் விளங்கிவிடாத தத்துவார்த்தப் படங்களை நான் குறிப்பிடவில்லை. ஒரு வெகுஜனப் படமும்கூட அப்படி அமையலாம். இந்தப் படத்தில் கார்த்திக், ஜெஸ்ஸியைக் காதலிக்கிறான். ஜெஸ்ஸியும் அவனைக் காதலிக்கிறாள். அவ்வளவுதான். பெரிதாகச் சொல்ல வேறொன்றும் இல்லை. கதாசிரியரும், இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் கூட்டாகச் சேர்ந்து திரையில் ஒரு கவிதையை எழுதி வைத்திருக்கிறார்கள். இருக்கலாம்தானே. சினிமாவை வடிவமாகவும், உள்ளடக்கமாகவும் அவ்வளவு எளிதில் நம்மால் வரையறுத்துவிட முடியாது. தன் படங்களின் இசைக்காக, முன்னதாக ஹாரிஸ் ஜெயராஜோடு தொடர்ந்து இயங்கிய கௌதம், முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்றினார். பின்னணி இசையும், பாடல்களும் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றன. பாடல்கள் அத்தனையும் இளைஞர்களின் ப்ளேலிஸ்டில் பல்லாண்டுகள் கோலோச்சின, இப்போதும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. `ஆரோமலே' தவிர்த்த பாடல்கள் அத்தனையையும் எழுதியவர் கவிஞர் தாமரை. வீட்டு வாசலில் கார்த்திக்கும், ஜெஸ்ஸியும் முதன்முறையாக சந்தித்துக் கொள்கிறார்கள். அங்கே வருகிறது விஜய் பிரகாஷ், சுஸானா பாடிய பாடல் ’ஹோஸானா’. இந்தப் பாடலில் வரும் ராப் பகுதியை எழுதி பாடியவர் பிரபல ராப் பாடகர் ப்ளாஸ். ’ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே’ என்று அந்தப் பாடல் தொடங்குகிறது. ’லவ் அட் பர்ஸ்ட் சைட்’ என்பது ஒரு தத்துவம். அது உடல் சார்ந்த ஈர்ப்பு மற்றும் காமம் குறித்த எதிர்பார்ப்பில் உருவாவதாகவே ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், அதில் மாற்றுக் கருத்துகளும் இருக்கின்றன. முதல் பார்வையில் ஒரு புன்னகை, ஒரு சொல், ஒரு செயல், குரல், முகச்சாயல், கண்களின் மொழி, உடல்மொழி இப்படி ஏதோ ஒன்று, ’இது நம்மில் ஒரு பகுதி, இது நமக்கானது, இப்படியான ஒன்றாகத்தான் நாம் இருக்க விரும்பினோம்’ என நமது உள்ளுணர்வுகள் கூடிக்கும்மியடிக்கின்றன. அங்கே தொடங்குகிறது காதல். ஆனால், அது முகிழ்க்க, முழுமையடைய இன்னும் மேலதிக அறிமுகம், நம்பிக்கை, மரியாதை, பொறுப்பு போன்ற பலவும் தேவைப்படுகின்றன. அதெல்லாம் கிடைத்து, காதல் மலர்ந்தால் வெகு சீக்கிரமாகவே அந்த உறவுக்குள் காமமும் வந்துவிடும். ஏனென்றால், காதலுக்காக நாம் தரும் மிக உயரிய பரிசுதான் காமம். ஒரு பையனும், பெண்ணும் சரியான வயதில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பது போன்ற ஓர் அழகான விசயம், இவ்வுலகில் வேறில்லை! காதலில் மனிதர்கள் ஒரு முழுமையற்ற (Incomplete) நிலையை உணர்கிறார்கள். ஒன்று, தனக்கான இன்னொன்றோடு இணையும் போதே முழுமையடைகிறது. அதை சப்-கான்சியஸாக நாம் உணரும் இடமாகவும் ‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’ இருக்கலாம். பென்னி தயாள், கல்யாணி மேனன் பாடிய ’ஓமனப் பெண்ணே’ பாடல், இந்த அழகான படத்தின், உச்சபட்ச அழகான ஒரு காட்சியில் வருகிறது. ஆலப்புழாவில் ஜெஸ்ஸியைச் சந்திக்கப்போகும் கார்த்திக், திரும்பும்போது அவளுடனேயே டிரெயினில் வருகிறான். சைட் லோயர் பெர்த்தில் எதிரெதிராக இருவரும் அமர்ந்திருக்கிறார்கள். கொஞ்சமாக சாப்பிடுகிறார்கள். கொஞ்சமாகப் பேசிக்கொள்கிறார்கள். நிறையப் பார்த்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் இடையே இரண்டடி தூரம்தான் இருக்கிறது. கார்த்திக், ஒவ்வொரு அங்குலமாக அவளை நெருங்கி வருகிறான். கைகள் தொட்டுக்கொள்கின்றன. அவள் கையை அவன் பிடிக்கிறான். கொடுக்கிறாள். விலக்கிக் கொள்கிறாள். கன்னத்தைத் தொடுகிறான். கொடுக்கிறாள். விலக்கி விடுகிறாள். நெருங்கி கன்னத்தில் முத்தமிடுகிறான். அனுமதிக்கிறாள். தழைந்து போகிறாள். பின் மறுக்கிறாள். ’உன் இடத்துக்குப் போ’ என்று சைகை காண்பிக்கிறாள், அது ஏதோ இரண்டுகிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருப்பதைப்போல! ஜெஸ்ஸியின் திருமணம் நின்றுபோன இரவில், கார்த்திக்கைச் சந்திக்கும் ஜெஸ்ஸி தன் காதலைச் சொல்கிறாள். அந்த வெளிப்பாட்டில், அத்தனை நாட்கள் அவனைத் தவிக்க விட்டதற்கான மன்னிப்பும் அடங்கியிருக்கிறது. அதைத்தான் வெளியே கொண்டு வருகிறது ஏ.ஆர்.ரகுமான், ஷ்ரேயா கோஷல் பாடிய, ‘மன்னிப்பாயா’. இந்தப் பாடலின் மாண்டாஜ் காட்சிகளில் இருவரும் இருப்புக்கொள்ள முடியாமல், ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளப் பரபரக்கிறார்கள். கார்த்திக், அவள் கைகளைப் பற்றிக்கொள்ள அலை பாய்கிறான். யாரும் கவனிக்காத சந்தர்ப்பம் அமைகிறதா என்று பார்த்தபடியே, அவனது மூச்சுக்காற்று படும்படியாக எப்போதும் ஜெஸ்ஸி அவனை நெருங்கி நின்றுகொள்ள விரும்புகிறாள். இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள். முத்தமிட்டுக் கொள்கிறார்கள். ஜெஸ்ஸி பிரபல மலையாளக் கவிஞர் கைதப்ரம் எழுதி, அல்ஃபோன்ஸ் ஜோஸப் பாடிய பாடல் ‘ஆரோமலே’! ஒரு கட்டத்தில் கார்த்திக்கும், ஜெஸ்ஸியும் பிரிகிறார்கள். அந்த மொத்த நினைவுகளையும் ஒரு கலையாக்க முயற்சிக்கிறான் கார்த்திக். அப்போது விரிகிறது இந்தப்பாடல்! இன்னும் நரேஷ் பாடிய ’கண்ணுக்குள் கண்ணை’, கார்த்திக், விவேக் அகர்வால் பாடிய ’விண்ணைத்தாண்டி வருவாயா?’, சின்மயி, தேவன் ஏகாம்பரம் பாடிய ‘அன்பில் அவன்’ என அனைத்துப் பாடல்களுமே உணர்வுகளால் ஆக்கப்பட்டிருந்தன. எப்போதுமே விண்ணைத்தாண்டி வருவாயா, ஏ.ஆர்.ரகுமானின் ஆல்பங்களுள் மிக முக்கியமான ஓரிடத்தில் இருக்கும். சிம்பு, கெளதம், ரஹ்மான் இந்த உணர்வுப்பூர்வமான இசைக்கும், பாடல்களுக்கும் தன் அற்புதமான ஒளிப்பதிவால் நியாயம் சேர்த்திருந்தார் மனோஜ் பரமஹம்சா. ஓமனப்பெண்ணே பாடலில் வரும் மாண்டாஜ் காட்சிகள் காதலை அள்ளிக்கொண்டு வந்தன. அவர்களின் மெல்லிய அசைவுகளோடு கூடிய நடனம் காற்றிலே மிதப்பதைப் போல உணர்வைக் கொடுத்தது. டிரெயினில் கார்த்திக், ஜெஸ்ஸி இருவரின் பதற்றம் நிறைந்த மெல்லுணர்வுகள் சிதையாமல் படமாக்கியிருந்தார். சிம்புவும், திரிஷாவும் அவர்களின் திரைவாழ்வின் உச்சமாக அமைந்த இந்தப் படத்தின் கார்த்திக், ஜெஸ்ஸி கதாபாத்திரங்களுக்கு தங்கள் முழு ஈடுபாட்டோடு கூடிய அர்ப்பணிப்பைக் கொடுத்து, நடிப்பில் தங்களின் நுணுக்கமான கலைத்தன்மையைப் பதிவு செய்திருந்தார்கள். காதல் கொண்ட ஓர் இளைஞனின் கூடவே சுற்றிக்கொண்டிருப்பது எத்தனைச் சிரமமான பணி என்பதை, அவ்வப்போது வெளிப்படும் இயல்பான சலிப்புகளின் வழியே காண்பித்து ரசிகர்களைக் கவர்ந்த கணேஷ், விடிவி கணேஷாகவே மாறிப்போனார். இறுதியில் கேமியோ தோற்றத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் நடித்திருந்தார்கள். தமிழிலும், தெலுங்கிலும் பெரிய ஸ்டாராக மாறிய சமந்தாவின் முதல் படம் இது. ஜெஸ்ஸி - த்ரிஷா எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் படத்தைத் தயாரித்திருந்தது எல்ரெட் குமார், மதன், விடிவி கணேஷ் மற்றும் ஜெயராமன் ஆகியோர். படத்தை எழுதி இயக்கியிருந்தது கௌதம் வாசுதேவ் மேனன். தொடர்ச்சியாக மிகப்பெரிய ஹிட்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்த கௌதமுக்கு இது கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. மின்னலே, காக்க காக்க, வேடையாடு விளையாடு என்று தமிழ் சினிமாவின் மேக்கிங் ஸ்டைலையே பாதித்திருந்த கௌதம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக, தமிழ் காதல் சினிமாக்களையும் பெருமளவில் பாதித்தார். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில், கார்த்திக், ஜெஸ்ஸி இருவரும் இணைவதாக இந்தப் படம் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், என் விருப்பமும், என் கதையின் முடிவும் அதுவல்ல என்றும் அதன்படியே தமிழில் இந்தப் படத்தின் முடிவு சரியாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லுகிறார் கௌதம். இறுதியில், கார்த்திக் எடுக்கும் படத்துக்குள்ளிருக்கும் ஜெஸ்ஸி, கார்த்திக்கிடம் சொல்லுகிறாள், ‘ஐ’ம் சாரி கார்த்திக், உன்னை வேணாம்னு சொல்லிட்டுப் போனதுக்கு. அதன் பிறகு நான் உன்கூட பேசவே இல்லை, போனைக்கூட எடுக்கல. உன்கிட்ட நான் எதுவுமே சொல்லவேயில்ல. அதனால நீ என்னை மறந்துட்டு மூவ் ஆன் ஆகிப்போயிடுவேனு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. ஐ’ம் சோ ராங் அண்ட் ஐ’ம் சாரி கார்த்திக்’. இந்தக் காட்சி நிஜமில்லை. கார்த்திக் உண்மையில் மூவ் ஆன் ஆகமுடியாமல் தவிக்கிறான்தான். அதைத்தான் தன் சினிமாவிலும் வைத்திருக்கிறான். ஆனால், அது சினிமா. உண்மையில், அவன் நிஜத்தை ஏற்றுக்கொண்டு தாண்டிச் சென்றுதான் ஆகவேண்டும். கவிஞர் வெய்யிலின் ஒரு கவிதை, காதலை இப்படி அணுகுகிறது. உன்னையல்ல நீ வாழும் வீட்டைக் காணவே உன் தெருவில் அலைந்தேன் உன்னையல்ல நீ வசிக்கும் தெருவைக் காணவே இந்த ஊரில் திரிந்தேன் உன்னையல்ல நீ திகழும் ஊரைக் காணவே இத்தனைத் தூரம் வந்தேன் உன்னையல்ல உன் ஊருக்குச் செல்லும் வழியைக் காணவே காடு மலை கடந்தேன் உன்னையல்ல நீ வாழும் பூமியைக் காணவே இந்தப் பூமிக்கு வந்தேன் காதலில் காதலி உட்பட எதுவுமே முக்கியமில்லை, காதலைத் தவிர. நிஜ வாழ்க்கையின் பிடியில் சிக்கிச் சில காதல்கள் அதன் இயல்பையும், அழகையும் தொலைத்துவிடுகின்றன. காதல்கள் இணைவதில் முடிந்தாக வேண்டிய அவசியமில்லை. பசுமையான நினைவுகளில் பதிந்து கிடக்கும் உன்னதமான உணர்வுகளாகவே சில காதல்கள் இருந்துவிட்டுப் போகட்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/a-special-series-on-vinnaithandi-varuvaya-episode-21




