சென்னை, கனிமங்கள் திருத்த மசோதா அமலுக்கு வந்தால், தமிழகத்தின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் என்று மக்களவை எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- இன்று காலை, தமிழக நிதிஅமைச்சர் மரிய வில்சனை சந்தித்தேன். திருத்த மசோதா அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து, நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினோம். மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது மேலும், மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிரிவு 9D-ஐ நீக்கும் திருத்த முன்மொழிவையும் நான் தனிப்பட்ட முறையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், எவ்வித விரிவான விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கனிம வளங்கள் மீதான உரிமை இம்மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 9D, “கனிம வளங்கள் மீதான உரிமை” மற்றும் “கனிமங்கள் தாங்கிய நிலங்கள்” மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுகளால் ஏற்கனவே விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாயையும் இனி வசூலிக்க முடியாத நிலையை இந்தத் திருத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் மாநிலங்களின் முக்கியமான நிதி ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் நிதிசார் தன்னாட்சிக்கு கடுமையான சவால் ஏற்படும். சுப்ரீம் கோர்ட் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ரூ.4,395.68 கோடி வருவாய் இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசு தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நிலங்கள் மீதான வரி சட்டம், 2024 மற்றும் தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நில வரி விதிகள், 2025 ஆகியவற்றை இயற்றியது. 04.04.2025 முதல் இவ்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2025–26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிடைத்த ரூ.4,395.68 கோடி வருவாயில், ரூ.2,265 கோடி கனிம வளம் கொண்ட நிலத்திற்கான வரி மூலம் கிடைத்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் இந்த முக்கியமான வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் எனவே, இது வெறும் வருவாய் இழப்பு பிரச்சினை அல்ல; மாநிலங்களின் அதிகாரம், நிதிசார் தன்னாட்சி மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் பிரச்சினையாகும். இந்த விவரங்களை நிதிஅமைச்சர் மரிய வில்சன் அவர்களிடம் எடுத்துரைத்து, தமிழகத்தின் நிதி உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசிடம் வலுவாக வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையான சட்டரீதியான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். நடவடிக்கை எனது கோரிக்கையை கவனத்துடன் கேட்டறிந்த நிதிஅமைச்சர், தமிழக அரசின் சார்பில் எனக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/if-minerals-amendment-bill-comes-into-force-tamil-nadus-revenue-source-will-be-affected-thurai-vaiko




