இந்தியாவின் ஏற்றுமதி 2031-ம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.191 லட்சம் கோடி) அளவுக்கு இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடைய மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம், ஏற்றுமதி தொழில்களின் தலைவர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இந்தியாவின் பனியன் தொழிலின் தலைநகரமாகக் கருதப்படும் திருப்பூர், பல எதிர்ப்புகளையும் மீறி பீடுநடை போட்டு வருகிறது. அமெரிக்கா கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த நிலையிலும், அதிக வரியை விதித்துக் கொண்டிருந்த நிலையிலும், எல்லாவற்றுக்கும் மேலாக மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் சூழ்நிலையில் அனைத்து தொழில்களும் சரிவைக் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில், திருப்பூரில் உள்ள பனியன் தொழில் மட்டும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, சாதனைகளாக மாற்றிக்காட்டி முத்திரை பதித்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் ஏற்றுமதியில் 3 சதவீத உயர்வைப் பதிவு செய்து ரூ.44,747 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2030-ம் ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்து காட்டுவோம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதி பூண்டுள்ளது. இந்தியாவின் மொத்த பனியன் ஆடை ஏற்றுமதியில் 60 சதவீதம் திருப்பூரிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு மட்டும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வந்தாரை வாழவைக்கும் பூமியாகத் திருப்பூர் விளங்குகிறது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி, தமிழகத்தைத் தாண்டியும் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சத்தீஷ்கார் மாநிலம் கொண்டகாவனில் நக்சல் இயக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு, திருப்பூரைச் சேர்ந்த ஆடைத் தயாரிப்பு நிறுவனம் ஆர்டர்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் வன்முறையின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண்களுக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார சுதந்திரத்தை நோக்கி முன்னேறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்தவகையில், திருப்பூர் ஆடைகளை மட்டும் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நகரமாக இல்லாமல், பலரது வாழ்க்கைக்கும் புதிய பாதையை உருவாக்கும் தொழில் நகரமாகவும் திகழ்கிறது. ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். உலகளாவிய அளவில் எவ்வளவோ பாதகமான நிலை இருந்தாலும், திருப்பூர் ஆடைகளின் தரம் நல்ல ஆர்டர்களைப் பெற்றுத் தந்தது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததும் ஏற்றுமதி வருமானத்துக்குக் கைகொடுத்தது. இது, பனியன் தொழிலில் திருப்பூர் இன்னும் உச்சத்துக்குப்போகும் என்ற நம்பிக்கையை துளிர்விட வைத்துள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி தற்போது இருக்கும் 38 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக (சுமார் ரூ.9.55 லட்சம் கோடி) உயர்த்தப்படவேண்டும் என்ற இலக்கில், தமிழ்நாட்டின் பங்கு 21 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) அளவில் இருக்கவேண்டும். அதில் திருப்பூர் 11.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) அளவுக்கு ஏற்றுமதி செய்யும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்பு கண்டிப்பாக நிறைவேறும். அதற்கான பிறை பிரகாசமாகத் தெரிகிறது. இதனை அடைய மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பது இங்குள்ள உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/others/thalayangam/tiruppur-that-broke-records-despite-challenges




