சென்னை, தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து 2,000 ஏக்கர் பரப்பளவில் 38,000 கோடி முதலீட்டில், தென்கொரிய நிறுவனத்தின் மூலம் புதிதாகக் கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக அரசு அறிவித்துள்ள 2,000 ஏக்கரில் ஏறத்தாழ 1,000 ஏக்கர் நிலமானது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஏழை எளிய மக்கள் பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள் என்றாலும் அவை உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, கருணை அடிப்படையில் உப்பு உற்பத்திக்காகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும். அவற்றைக் கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதென்பது கொடுங்கோன்மையாகும். வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வேளாண்மை செய்யும் விளைநிலங்கள், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள், மீன்பிடி தளங்கள் அமைந்துள்ள கடற்கரைகள், மக்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், இயற்கையின் அருங்கொடைகளான ஆறுகள், அருவிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயலாகும். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு எதை வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்? அடுத்த தலைமுறையிடம் எவற்றைக் கையளிக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு உணவாக எதைக் கொடுக்கப்போகிறீர்கள்? உணவுகள் அனைத்துக்கும் அடிப்படையானது உப்பு. உப்பினை உப்பளங்களங்களில்தான் உற்பத்தி செய்ய முடியுமே தவிர, கப்பல்கட்டும் தளங்களில் அல்ல; எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உணவு உற்பத்தி நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து, அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து ரத்தம் குடிப்பதற்குச் சமமாகும். பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட்ட தவெக அரசு, ஓசூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிடாதது ஏன்? தற்போது தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து உப்பளங்கள் மீது கப்பல்கட்டும் தளம் அமைக்க முயல்வது ஏன்? அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நவீனம், நாகரீகம் என்ற பெயரில் அவர்கள் நாட்டுத் தொழிற்சாலை உற்பத்திகளைக் கொண்டுவந்து குவித்து, நம் நாட்டின் கைவினைத் தொழில்களை அழித்து முடித்தனர். விடுதலை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு அழைத்துவந்து மீதமிருக்கும் பாரம்பரிய உணவு உற்பத்தி தொழில்களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதில் எங்கே இருக்கிறது விடுதலை? எங்கே இருக்கிறது மக்களின் ஆட்சி? அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே தவிர, தொழிற்சாலைகளுக்காக மக்கள் தோன்றவில்லை. தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் இன்றி மக்களால் வாழ முடியும். ஆனால், மக்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்காது. மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறி நிற்கும். ஆகவே, தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், பாதிக்கப்படும் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-drop-shipyard-plan-in-thoothukudi-seeman



