சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறும் போது முதலமைச்சர் விஜய் திடீரென பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமும் மாலை நேரங்களில் தலைமைச் செயலகம் வெளியே சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடிவந்து முதலமைச்சரை பார்க்க காத்திருக்கின்றனர். முதலமைச்சர் வாகனத்தில் செல்லும் போது அவருக்கு கையசைத்து வாழ்த்து தெரிவிக்கும் பொதுமக்களுக்கு, முதலமைச்சரும் பதிலளித்து கையசைப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முதலமைச்சர், மனுக்களுடன் காத்திருந்த பொதுமக்களை கண்டதும் தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டு, நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்வர் விஜய் தலைமைச் செயலக வளாகத்திற்குள் வருபவர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தலைமைச் செயலகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் முழுமையாக செயல்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களின் காட்சிகள் தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரலையாக கண்காணிக்கப்படுகின்றன. அங்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் திடீரென வாகனத்தை நிறுத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெறும் சூழலில், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சரிசெய்தல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சருக்கு மத்திய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மூலம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் மூலம் சிசிடிவி கேமராக்களின் செயல்திறன் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/cm-vijays-sudden-plans-to-meet-public-security-actions-taken




