தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் முதல் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இந்தநிலையில், அவர் விடுவிக்கப்பட்டு புதிய கவர்னர் நியமனம் விரைவில் இருக்கும் என்கிறது டெல்லி வட்டாரம். தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் இந்தாண்டு மார்ச் வரை கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆர்.என்.ரவி ஆளுநராகப் பணியாற்றினார். தி.மு.க அரசு ஆட்சிப் பெறுப்பேற்றதுமே அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து, ஆளும் அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கே நீடித்துவந்தது. இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக மாற்றப்பட்டார். தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்துகூட, அர்லேக்கர் கேரளாவுக்குச் சென்றுவிட்டதால் இந்தாண்டு நடைபெறவில்லை. இந்தநிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வரான கிரண்குமார் ரெட்டி ஆளுநர் பொறுப்பில் நியமிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நியமனதுக்குப் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் சொல்லப்படும் நிலையில் முதலில் கிரண்குமார் ரெட்டி யார் என்று பார்ப்போம்., கிரண்குமார் ரெட்டியின் தந்தை நல்லாரி அமர்நாத் ரெட்டி ஒரு காங்கிரஸ்காரர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் கேபினெட்டில் அமைச்சராகப் பணியாற்றியவர். தொடர்ந்து, கிரண்குமார் ரெட்டியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தார். 2009-ல் ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பிடித்து ராஜசேகர் ரெட்டி முதல்வரானார். அவர் விமான விபத்தில் இறந்துவிட, அப்போது சபாநாயகராக இருந்த கிரண்குமார் ரெட்டி ஆந்திராவின் முதல்வரானார். தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். தொடர்ந்து, ''ஜெய் சமக்யாந்திரா கட்சி" எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். மீண்டும் 2023-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜாம்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தற்போது அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஷ்ணு ரெட்டி கிரண்குமார் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்த காலத்தில்தான், அப்போதைய தலைநகரான ஐதராபாத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ்ஸை அமைப்பு தீவிரமாக வளர்ச்சியடைந்தது. அதற்கு கிரண்குமார் ரெட்டி பெரியளவில் உதவினார் என அப்போது சில கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்தன. இன்னும் சொல்லப்போனால், அதுவரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அசாதுதீன் ஓவைசி, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துதான் கூட்டணியிலிருந்தே வெளியேறினார். அதுமட்டுமல்ல, கிரண்குமார் ரெட்டி தனிக்கட்சி நடத்தியபோது, 2014 தேர்தலில் அவருக்குச் செருப்புச் சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது, ''ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது. அதுபோல, இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்'' என அவர் பேசியதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியது. அடிப்படையில் காங்கிரஸ்காரராக இருந்தாலும், இந்துத்துவ அரசியலின் ஆதரவாளராகவே இருந்துவந்தார் கிரண்குமார் ரெட்டி. பின்னர் அவர் பா.ஜ.கவிலேயே இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, தற்போது அவர் தமிழ்நாட்டின் கவர்னராக நியமிக்கும் தகவல்கள் குறித்து விபரமறிந்தவர்கள் பேசும்போது, ''தமிழ்நாட்டின் முதல்வர் விஜயின் நண்பரும் அதிகார மையமாகத் திகழும் விஷ்ணு ரெட்டிக்கு ஒருவகையில் கிரண்குமார் ரெட்டி உறவினர். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பா.ஜ.கவின் வளர்ச்சிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைக் கொண்டு வருவதற்கும் கிரண்குமார் ரெட்டி உதவிபுரிவார். த.வெ.கவுடன் ஒரு இணக்கப்போக்கை கடைபிடிப்பார் என்பதால் அவர் பெயர் பரிசீலினையில் இருக்கிறது'' என்கிறார்கள். ஆனால், இதுவரை ஆளுநர் நியமனத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/is-kiran-kumar-reddy-the-governor-of-tamil-nadu




