சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி இன்று காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்த கனிமொழி பேசியதாவது; ”ஒரு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தவெக ஆட்சி ராஜினாமா செய்ய வைத்தது. இந்த குதிரை பேரம் நடைபெற்றதன் விளைவாக, இன்று மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. இவர்கள்தான் மக்களுக்கு நேர்மையான அரசியலைத் தரப்போகிறோம் என்று கூறிக்கொள்கிறார்கள். உண்மையில், இந்த இடைத்தேர்தல் என்பது முற்றிலும் அவசியமற்ற ஒரு தேர்தல். முன்னதாக மக்களின் மீதும், மக்களின் வரிப்பணத்தின் மீதும் கேடு விளைவிக்கும் அளவிற்கு, தேவையற்ற இந்த இடைத்தேர்தலை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலை தவெக தான் உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, இன்று மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கொலைக் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் இதற்கு உரிய பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் சினிமாவில் பேசுவதுபோல பஞ்ச் டயலாக்குகளைப் பேசுவதும், பழைய கதைகளைச் சொல்வதும், இல்லாத பொய்களை சட்டமன்றத்தில் அரங்கேற்றுவதுமாக இருக்கிறார். மக்களின் தேவைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த அரசு இயங்கி வருகிறது. அதேபோல் தவெக இருக்கின்ற சட்டமன்றத்தில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கலாம். கண்டிப்பாக சட்டமன்றத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் கட்டிய சட்டமன்றக் கட்டிடம் ஏற்கனவே உள்ளது. பின்னர் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தாலும், அந்த இடம் சட்டமன்றத்திற்காகவே கட்டப்பட்ட இடம். எனவே, அதைக்கூட மீண்டும் பயன்படுத்தலாம். எதை கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று கூறும் தவெக ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல், அதை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-the-government-run-the-administration-properly-only-then-can-tvk-consider-the-matter-of-a-new-legislative-assembly-kanimozhi-mp




