சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு. மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பிற்போக்கான கருத்து தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னையில் நடைபெற்ற 5-வது "மார்ச் பார் லைப்” என்ற கத்தோலிக்க மத அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்மையில் கலந்து கொண்டுள்ளார். அதில், "கருக்கலைப்பு செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை” என்றும், ஒவ்வொரு குழந்தையும் "கடவுள் கொடுத்த பரிசு” என்றும் பேசியிருப்பது பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிரான, பிற்போக்கான கருத்தாகும். அவர் வகிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த பதவிக்கு இத்தகைய மத அடிப்படையிலான, பிற்போக்கான போதனைகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு மற்றும் உரிமை என்பது அவரது உடல் மீதான உரிமை என்பதோடு, உடல்நலம், உளநலம், கண்ணியம் மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். கர்ப்பம், கருக்கலைப்பு, மகப்பேறு என்பவை ஒரு மதக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்ல கருக்கலைப்புச்சட்டம் 1971 அது பெண்ணின் உடல், உள நலம், கருப்பையில் வளரும் சிசு, மற்றும் தாய் சேய் நலம், பெண்ணுரிமை, சமூக நலம் சார்ந்த விசயமாகும். அந்த அடிப்படையிலும், மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் கருக்கலைப்பை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாகவே, மருத்துவ ரீதியான கருக்கலைப்புச்சட்டம் 1971 (MTP Act -1971) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அது கருக்கலைப்புத் தொடர்பாக உலக நாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களில் ஓரளவு முற்போக்கான சட்டமாகும். கருக்கலைப்பு உரிமை இல்லாத அயர்லாந்தில் இந்தியப் பெண் பல்மருத்துவர் டாக்டர் சவீதா, கர்ப்பப்பையில் கருச்சிதைவுக்கு உள்ளான 17 வார சிசுவை கருக்கலைப்பு செய்ய முடியாமல் தொடர்ந்து சுமந்ததால் ஏற்பட்ட மருத்துவ ரீதியான பாதிப்பால் பரிதாபகரமாக 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாகியது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு ஆதரவான சட்டத்திருத்தம் 2018 ல் கொண்டுவரப்பட்டது. 50 நாடுகளில் கருக்கலைப்பிற்கு அனுமதி உலகளவில் எகிப்து, மால்ட்டா, ஹாண்டுராஸ், உள்ளிட்ட 24 நாடுகளில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்துகொண்டதால் பெண்கள் சிறை தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். துயரங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அங்கெல்லாம் கருக்கலைப்பு உரிமை கோரி பெண்கள் போராடி வருகிறார்கள். ஏராளமான லிபியா, இந்தோனேசியா, நைஜீரியா, ஈரான் போன்ற 50 நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்புக்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவிலேயே, பல மாகாணங்களில் குறிப்பாக குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி, போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் ஒரு தேர்தல் பிரச்சனையாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. கருக்கலைப்பு சட்டரீதியாக இருக்கின்ற நாடுகளில் 90 விழுக்காடு கருக்கலைப்புகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன. சட்டரீதியாக இல்லாத நாடுகளில் 25 விழுக்காடு கருக்கலைப்புகள் மட்டுமே பாதுகாப்பானதாக உள்ளன. உலகில் உள்ள கருக்கலைப்பு சட்டங்களை ஒப்பிடும் பொழுது, இந்தியாவின் கருக்கலைப்பு சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் 2002, 2003, 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு பெண்ணின் மற்றும் குழந்தையின் கருவில் உள்ள உயிருக்கு ஆபத்தான நிலை, மனநல பிரச்சினைகள், மருத்துவக் காரணிகள், மனிதாபிமான அடிப்படைகள், கருத்தடை சாதனம் செயல்படாதது, பாலியல் வன்புணர்வு, சமூகக் காரணிகள் போன்ற காரணிகளுக்காக கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக இந்தியச் சட்டம் அனுமதிக்கிறது. திருமணமாகாத பெண்களும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 20 வாரங்களிலும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 24 வாரங்கள் வரையிலான காலத்திலும் கலைக்கலாம் என்பது போன்ற முக்கியத்திருத்தங்கள் செய்யப்பட்டன. பெண்களுக்கு சாதகமாக மேலும் திருத்தங்கள் அவசியப்படுகின்றன. இருப்பினும் இன்றையச் சட்டத்தின் காரணமாகவே, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அபாயகரமான கருக்கலைப்பு காரணமாக ஏற்படும் பேறுகால மரணங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இந்நிலையில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களை களங்கப்படுத்தும் வகையிலான சில தவறான கருத்துக்களும், கண்ணோட்டங்களும் நம் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றன. அவற்றின் விளைவாகவும், பல பெண்கள் பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு முறைகளை நாடுகின்றனர். அது, அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இந்தியாவில், பாதுகாப்பில்லாத கருக்கலைப்பினால் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 8 பெண்கள் இறக்கிறார்கள். இந்தியாவின் பேறுகால தாய் மரணங்களில் 8 முதல் 13 விழுக்காடு பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படுகின்றன என்பது கவலை அளிப்பதாகும். உரிமைகளுக்கு எதிராக பேசுவதை கைவிட வேண்டும் இத்தகைய நிலையில் தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் போன்று முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்களை சொல்வது இறப்புகளை மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்கு எதிரான மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக பேசுவதையும் கைவிட வேண்டும். மதச்சார்பற்ற கொள்கையையும், அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தையும் பற்றி நிற்க வேண்டுமென, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-wrong-for-the-assembly-speaker-to-speak-against-abortion-m-veerapandian




