சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ல அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கள்கிழமை), திருச்சி மாநகர், உறையூரில் உள்ள ஜி.கே.எம். திருமண மண்டபத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு. கண்ணகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கே. சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர்கள் திருச்சி எம்.செல்வராஜ், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்தரநாத், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவா, புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ராஜ்குமார் உள்பட 60 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு கண்டனம் தமிழ்நாடு கவர்னர் ஆர்.வி.அர்லேகர் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளையும், மாநில அரசின் அதிகார வரம்புகளையும் மீறுகின்றன. அண்மையில், வைகை ஆற்றை கவர்னர் மாளிகையின் சார்பில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மாநில நிர்வாகத்தைப் புறக்கணிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக கவர்னரிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியிருப்பது, அரசின் நிர்வாகப் பொறுப்புகளை கவர்னர் தனது கரங்களில் எடுத்துக் கொள்ளும் செயலாகும். அதேபோல், மாவட்டங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, நிர்வாகச் செயல்பாடுகளில் நேரடியாகத் தலையிடுவது, மாநில அரசுக்கு இணையாக, சரியாக சொன்னால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தனி நிர்வாக அமைப்பு செயல்படுகிறது என்கிற தவறான எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. கூட்டாட்சி முறைமை இத்தகைய நடவடிக்கைகள், இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள கூட்டாட்சி முறைமைக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களுக்கும் முரணானவை. இந்திய அரசியலமைப்பின்படி, கவர்னர் பதவி என்பது மாநில அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் அடிப்படையில் செயல்பட வேண்டிய அரசியலமைப்புப் பதவியாகும். அந்த வரம்புகளை மீறி, “போட்டி அரசு” நடத்தும் வகையில் கவர்னர் செயல்படுவது, கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளையே பலவீனப்படுத்தும் முயற்சியாகும். எனவே, தமிழ்நாடு கவர்னரின் அரசியலமைப்புக்கு முரணான, மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டாட்சி முறைமையையும், மாநிலங்களின் உரிமைகளையும் மதித்து, அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அதிகார வரம்பிற்குள் மட்டுமே கவர்னர் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மாநிலங்களின் உரிமைகள், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறைமையைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுக்கிறது. சட்டத் தொகுப்புகள் மக்கள் நலக் கோரிக்கைகள் மீது ஆகஸ்டு 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயணப் பரப்புரை இயக்கம். தொழிலாளர்களின் வேலைப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழிலாளர்கள் நூறாண்டுகளாகப் போராடி உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய பாஜக அரசு நீக்கிவிட்டு, தொழில் நடத்துவதை எளிமையாக்குதல் என்ற பெயரில் நான்கு சட்டத் தொகுப்புகளை செயல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, முற்றிலும் முதலாளிகளுக்குச் சாதகமானதாக, கார்ப்பரேட்டுகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு குழும நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றித்தரும் முயற்சியில், விவசாயிகள் விரோத மூன்று வேளாண் வணிக சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய பாஜக அரசு மின்சார சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒன்றுப்பட்டு நடத்திய ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தால், 740-க்கும் மேற்பட்ட விவசாயிகள் களப்பலியானார்கள். வரலாற்றுப் புகழ்பெற்ற இந்தப் போராட்டத்தால் விவசாயிகள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய, சட்டபூர்வ நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என விவசாயிகளுக்கு பாஜக மத்திய அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் விவசாயிகள் வாழ்க்கை நிலை அவலம் தொடர்கிறது. இடதுசாரி கட்சிகளின் தலையீடு நாடாளுமன்றத்தில் வலிமையாக இருந்த நேரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசு 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பாடு, புலம் பெயர்ந்து உழைக்கும் மக்கள் வெளியேறும் துயரம் மற்றும் வறுமை நிலை தணிப்பு போன்ற நற்பயன்கள் கிடைத்துள்ளன. பல லட்சக் கணக்கான சமூகச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில் வாழ்ந்து வரும் உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை பெற்றிருந்தன. இந்தச் சட்டத்தை பாஜக மத்திய அரசு கடந்த 2025 டிசம்பர் 16 ஆம் தேதி நீக்கிவிட்டது. சட்டபூர்வ உரிமை கிராமப்புற வேலை வாய்ப்புக்காக பாஜக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வளர்ச்சி பாரதம் - கிராம வேலை உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் என்பது “தொழிலாளர்கள்“ என்ற தகுதியினையும் நீக்கிவிட்டு, அரசையும், ஆளும் தரப்பையும் சார்ந்து வாழும் “பயனாளிகளாக” தாழ்த்தப்பட்டுள்ளனர். இதனால், ஊரகப்பகுதி உழைக்கும் மக்களின் சட்டபூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற காலத்தில் பொதுமக்களின் வரிப் பணத்தில் இருந்தும், பல்வேறு சோசலிச நாடுகள் உதவியை பெற்றும் பல பொதுத்துறை நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டன. இவைகளால், நாடு சுயச்சார்பு பொருளாதாரக் கட்டமைப்பை பெற்றுள்ளது. இதன் மீது பாஜக மத்திய அரசு கடுமையான தாக்குதல் நடத்தி, பொதுத்துறை சொத்துக்களை பங்குகளாக்கி தனியார் மயமாக்கி வருகிறது. கோரிக்கைகள் கடந்த 12 ஆண்டுகளில் நாள்தோறும் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். பொது விநியோக முறையினையும், பொது சுகாதாரத்தையும் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும். சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்க வேண்டும். உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமலாக்க வேண்டும். பழங்குடியினர், பட்டியல் சாதியினர் பிரிவு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அவர்கள் மீதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்துப்பட வேண்டும். மாற்றம் கட்டாயமானது “மாற்றம் கட்டாயமானது” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மக்கள் விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் மத்திய பாஜக அரசின் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு, பன்னாட்டு குழும நிறுவனங்கள் ஆதரவுக் கொள்கையின் பேராபத்தை மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறியும், “ஆட்சியில் மாற்றம் கட்டாயமானது” என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்தும், ஆகஸ்டு 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை நடத்துவது என கட்சியின் தேசியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கட்சியின் மாவட்டக் குழுக்களும், இடைக்குழுக்களும் ஆகஸ்டு 6 முதல் 15 வரையிலான காலத்தில் பொதுமக்களை விரிவாக சந்திக்கும் முறையில் நடைபயண இயக்கங்களை திட்டமிட்டு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா மாவட்டங்களில் பல்வேறு குழுக்களாக கட்சி உறுப்பினர்கள் பிரித்தமைக்கப்பட்டு, விரிவான நடைபயண இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் விடுதலை பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க 15.08.2026 ஆம் தேதி மாவட்டத் தலைநகரில் அல்லது மாவட்டத்தின் மையப் பகுதியை தேர்வு செய்து அனைத்துக் குழுக்களையும் ஓரிடத்தில் இணையும் வகையில் ஏற்பாடு செய்து, அந்த இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பரப்புரை இயக்கத்தை நிறைவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/m-veerapandian-demands-that-employment-opportunities-be-ensured-for-every-young-generation




