சென்னை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 20 தேதிகளில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் பலியானதற்கு அதிகாரிகள் தங்கள் கடமையை முறையாக செய்யாததே காரணம். அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நீதியரசர் பி. கோகுல்தாஸ் தலைமையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது. இந்த அறிக்கை சட்டப்பேரவையிலும் வைக்கப்பட்டிருக்கிறது. கள்ளச் சாராய விற்பனையில் சம்மந்தப்பட்ட 433 பேரிடம் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு கொள்கையை கடந்த கால அரசுகள் செயல்படுத்தாததால் பெரும்பான்மையான மக்கள் மது பிரியர்களாக மாறி விட்டனர். டாஸ்மாக் மதுவை விட குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை ஏழை, எளியவர்கள் நாடுகிற நிலை ஏற்பட்டதால்தான் இத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனைக்காக சட்டவிரோதமாக பகிரங்க ஏலம் நடத்தியுள்ளனர். அதில் வெற்றி பெற்ற ஏலதாரருக்கு அதை விற்க எந்த இடையூறும் இருக்காது. அந்த ஏலதாரர் ரூபாய் 5 லட்சம் கொடுத்ததும் அதற்கான உரிமமும் அவருக்கு கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது என்று நீதியரசர் அறிக்கையில் கூறியிருக்கிறார். காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த விஷச் சாராய விற்பனை நடந்திருக்காது. கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், காவல்துறை, ஆயத்தீர்வைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே கேடான கூட்டணி இருந்தது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற கூட்டணி உடைக்கப்பட வேண்டும். கடமையை செய்யத் தவறிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று நீதியரசர் கோகுல்தாஸ் பரிந்துரை செய்திருக்கிறார். கள்ளச் சாராயத்தை குடித்து 70 பேர் பலியான உடனேயே மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் அந்த பகுதியில் இருந்த சில அதிகாரிகள் கடந்த ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நீதியரசரின் அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி பேரழிவிற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடுமையான தண்டனை விதிப்பதற்கும், இந்த கொடூர சம்பவம் வெறும் அதிகாரிகள் அளவில் நடைபெற்றதா? அல்லது இதற்குப் பின்னால் அரசியல் பின்னணி இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் உரிய விசாரணையின் மூலம் அறிய வேணடும். அதனடிப்படையில் குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க முடியும். கள்ளச் சாராயத்தினால் பலியானவர்களுக்கு கடந்த அரசு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கியிருந்தாலும் அதில் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உணவு, குடியிருப்பு வசதி, கல்வி உதவி, அரசு வேலை போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டுமென்று நீதியரசர் பரிந்துரை செய்திருக்கிறார். இந்த பரிந்துரையை மனிதாபிமான உணர்வோடு தமிழக முதல்-அமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டை மதுவின் பிடியில் இருந்து எவ்வளவு விரைவாக மீட்கிறோமோ அப்பொழுது தான் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விமோசனம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/illicit-liquor-deaths-all-the-culprits-must-be-identified-and-strict-action-taken-manickam-tagore




