சென்னை, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. விசாரணை த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குதிரை பேரம் ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர். சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார். தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date




