Volledig artikel
`அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. ஜவ்வாது மலை கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது. இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும். அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன. மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். சீமான் அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை. எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும். தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.' எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜவ்வாது மலையில் அதானி நிறுவனம்: `337.452 எக்டேர் நிலப்பகுதிக்கு ஆபத்து'- பூவுலகின் நண்பர்கள் குழு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder




