குடும்பத்தில் பொருளாதாரப் பின்னடைவு இருந்தாலும், TNPSC குரூப் 1 தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், அதனைத் தொடராமல் சமூக சேவை மற்றும் முனைவர் பட்ட ஆய்வைத் தொடர்ந்தபடியே சிகை அலங்கார வேலை செய்துவருகிறார், காரைக்குடி பாலமுருகன். காரைக்குடி நூறடிச் சாலையில் இவரது சிகை அலங்கார நிலையம் (சாந்தி ஹேர் டிரஸ்ஸர்ஸ்) உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி, பெரிய அலுவலகங்களில் வேலை செய்பவர்கள்கூட இவரது கடையில் காத்திருந்து சிகை திருத்தம் செய்து செல்கின்றனர். மேலும், அவர் வேலை முடித்து இரவு UPSC தேர்வுக்கு (2 வருடங்களாக) ஆயத்தமாதல், அழகப்பா பல்கலைக்கழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பற்றிய (MSME) முனைவர் பட்ட ஆய்வு. மீண்டும் மாலை சிகை அலங்காரப் பணி எனத் தனது கால அட்டவணையைப் பிரித்து வைத்திருப்பதாகக் கூறுகிறார். ``நான் பத்தாவது படிக்கும்போதே இந்த வேலையை அப்பா, மாமாவிடம் கற்றுக்கொண்டேன். இந்தப் பணியினை நான் தொழிலாக எண்ணவில்லை. எத்தனையோ பொருளாதாரப் பின்புலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் நிலை அறிந்து பணம் வாங்குவதில்லை. அதை ஒரு சேவையாகத்தான் பார்க்கிறேன். சிறுவயதிலேயே என்னை ஒருவர் படிக்கவைத்தார். அதேபோல நானும் ஒவ்வொரு பருவம் முடிவிலும் என் சுற்றுப்புறத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை நண்பர்களின் உதவியோடு கண்டறிந்து, அவர்களுக்கு என் சொந்தச் செலவிலோ அல்லது அதே சேவை மனப்பான்மை கொண்ட என்னிடம் சிகை திருத்தம் செய்யும் வாடிக்கையாளர்கள் சிலரிடம் உதவி பெற்றோ உதவி செய்து வருகிறேன். சிறு வயதான என் அக்கா மகனை இரத்தப் புற்றுநோயால் பறிகொடுத்தேன். அதேபோல் என் குடும்பத்தில் மேலும் சில புற்றுநோய் இழப்புகள் நடந்தன. இதனால் நான் அதிக முறை மருத்துவமனை ஏறி இறங்கியுள்ளேன். என் மனதில் தோன்றியபடியே காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையிலும் அங்குள்ள மருத்துவர்கள் துணையோடு சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோய் நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் இல்லம் தேடிச் சென்று மருத்துவப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்கிறேன். மேலும், வீட்டிற்கே சென்று சிகை திருத்தம் செய்வது போன்ற பணிகளையும் செய்துவருகிறேன். என்னிடம் பணமே இல்லாத சூழலில்கூட என் வாடிக்கையாளர்களிடம் கடன் பெற்றாவது அதனைச் செய்து வருகிறேன். இதேபோன்று புதுச்சேரி ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளுக்கெல்லாம் சென்று புற்றுநோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் புற்றுநோய் நிலையை (Stage) அறிந்து அவர்களுக்கு உதவி செய்து ஆலோசனையெல்லாம் வழங்கியுள்ளேன். சமீபத்தில் எனக்கே தெரியாமல் என் தெரு அருகே நான்காம் நிலை (Stage 4) புற்றுநோய் வந்து ஒருவர் இறந்த செய்தி என்னை வந்தடைந்து, மிகவும் கலங்கச் செய்தது" என்றார். அவருடைய கடைக்கு வருபவர்கள் எல்லாம், `நீ செய்கின்ற விஷயங்களையெல்லாம் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டியதுதானே!' என்று கூறியதற்கு, ``அதைப்பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் செய்கின்ற பணியைக் கடவுள் பார்த்தால் மட்டும் போதும்" என்றாராம். `உங்களுக்கு மேலும் என்னவெல்லாம் ஆசை' என்று கேட்டதற்கு, ``பெரும்பாடுபட்டுச் சிறிது சிறிதாகச் சேர்த்த தொகையினை வைத்து 2 சென்ட் இடம் வாங்கியுள்ளேன். அதில் ஒரு தொண்டு அறக்கட்டளை தொடங்க வேண்டும். இதனைப் பெரிதாக எடுத்துச் செல்ல விரும்புகிறேன்" என்று கூறும் பாலமுருகனின் பொதுநலச் சிந்தனை வியப்படையச் செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/features/human-stories/karaikudi-balamurugan-phd-upsc-aspirant-hairstylist-social-service




