இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந்தத் தாக்குதல் நிகழ்ந்தபிறகு அமெரிக்க அரசின் ஒற்றை இலக்காக இருந்தது, அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைத் தீர்த்துக் கட்டுவது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து 2011 மே 2-ம் தேதி பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனைக் கொன்றது அமெரிக்க ராணுவம். எப்படி பின் லேடனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தார்கள், ஒசாமாவைத் தீர்த்துக் கட்டும் ஆபரேஷனை எப்படித் திட்டமிட்டார்கள் என எல்லாவற்றையும் நீண்ட காலம் ரகசியமாக வைத்திருந்தது அமெரிக்கா. அந்த ரகசியங்கள் வெளியானபோது அமெரிக்க உளவு அமைப்பின் மீதும், பின் லேடனின் யுக்திகள் பற்றியும் பிரமிப்புகள் அதிகமாகின. அந்த ‘த்ரில்’ வேட்டையையும் பின் லேடனின் கடைசி தினங்களையும் காட்சிப்படுத்தும் கட்டுரை இது. September 11 Attack - 9/11 Anniversary 2011 மே 2-ம் தேதி அதிகாலை. பின் லேடன் வசித்த கோட்டை போன்ற அபோதாபாத் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள், ஏதோ வெடிச்சத்தம் கேட்டு எழுந்தார்கள். முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பின் லேடனின் 20 வயது மகள் மரியம் எழுந்து பதற்றமாக இரண்டாவது மாடிக்கு ஓடினார். அங்கிருந்த பின் லேடனிடம், ‘‘என்ன நடக்கிறது?’’ என்று கேட்டார். ‘‘நீ கீழே போய்த் தூங்கு’’ என்று சொன்ன பின் லேடன், தனது மூன்றாவது மனைவி அமால் பக்கம் திரும்பி, ‘‘என்ன நடந்தாலும் லைட்டைப் போடாதே!’’ என்றான். தன் வாழ்க்கையில் பின் லேடன் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் இவைதான்! அந்த இரவு நேரத்தில் அமெரிக்க ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் பிரிவான சீல்ஸ் படையினர் அபோதாபாத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும் யாரோ அந்தப் பகுதியில் மின் சப்ளையை துண்டித்து விட்டிருந்தனர். ஒசாமாவையே கண்டுபிடித்த அமெரிக்க உளவுத்துறையினரால்கூட, மின்சாரத்தைத் துண்டித்த அந்த ‘யாரோ’ யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலவில்லாத அந்த இரவில், மின்சாரம் இல்லாத இருட்டு பின் லேடன் தப்பிக்க வசதியாக இருக்கும் என்று அந்த ‘யாரோ’ நினைத்திருக்கலாம். ஆனால், சீல்ஸ் படையினருக்கு அந்த இருட்டு இன்னும் வசதியாகப் போய்விட்டது. பின் லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத், நம்ம ஊர் கொடைக்கானல் போல ஒரு குளுகுளு மலைப் பிரதேசம். இமயமலையின் அடிவாரத்தை ஒட்டியிருக்கும் இந்த நகரில் கோடை அவ்வளவாகக் கொளுத்தாது. பாகிஸ்தானின் பிற நகரங்களை ஒப்பிடும்போது குற்றங்களும் குறைவு. மக்கள் நெரிசலும் குறைவு. இதனாலேயே இந்த இடத்தை பின் லேடன் பதுங்கி வாழத் தேர்ந்தெடுத்தான். 2005ம் ஆண்டு இந்த வீடு கட்டப்பட்டது. தரைத் தளத்துக்கும் முதல் மாடிக்கும் மட்டுமே கட்டட அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு ரகசியமாக இரண்டாவது மாடி கட்டப்பட்டது. பின் லேடன் தனது மூன்றாவது மனைவி அமாலுடன் தங்கியிருந்தது இந்த மாடியில்தான். படுக்கையறை, ஒரு ஸ்டடி ரூம், கிச்சன், பாத்ரூம் என அளவாக இருந்த இந்த தளத்தில் ஒரே ஒரு பக்கச் சுவற்றில் மட்டுமே ஜன்னல்கள் இருந்தன. அவையும் மிக உயரத்தில் - வெளியிலிருந்து யார் பார்த்தாலும் உள்ளே இருப்பவர்கள் தெரியாதபடி இருந்தன. பின் லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் வீடு இந்த இரண்டாவது மாடி அறைக்கு வெளியே சிறிய திறந்தவெளி இருந்தது. 193 செ.மீ. உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்த பின் லேடன் இங்கு வந்து நடமாடியதைக்கூட வெளியிலிருந்து யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம், 2 மீட்டர் உயரத்தில் ஒரு சுவர் எழுப்பி இந்த மாடியையே மறைத்திருந்தார்கள். ஐந்து வருடங்கள் இங்கே வாழ்ந்த பின் லேடன் வெகு சில முறை மட்டுமே இந்த மாடியை விட்டு கீழே வந்திருக்கிறான். வீட்டின் பக்கவாட்டில் இருந்த காய்கறித் தோட்டத்தில் வாக்கிங் போக வருவான். அங்கே ஒரு நடைபாதை இருந்தது. அந்த இடத்தில் மட்டுமே வாக்கிங். அதன் மேல் தார்ப்பாலின் போட்டு மூடியிருந்தார்கள். வானில் பறக்கும் ஆளில்லா உளவு விமானங்களின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு. மலைகளிலும் குகைகளிலும் சுற்றிக் கொண்டிருந்த ஒரு நபருக்கு இது கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை போலத்தான். ஆனால் அதிலும் சில நன்மைகள் இருந்தன. அமெரிக்காவின் சந்தேக ரேடாரில் இல்லாத ஒரு நகரில் வாழ்க்கை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூன்று மனைவியரும் பின் லேடனுடன் இங்குதான் இணைந்து வாழ்ந்தனர். மூத்த மனைவி கைரியாவை கடந்த 85-ம் ஆண்டு மணந்தான் பின் லேடன். அப்போது அவனுக்கு வயது 28. மனைவிக்கு வயது 35. காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியையாக இருந்தவர் கைரியா. பிஹெச்.டி. பட்டம் பெற்றவர். பின் லேடனின் இரண்டாவது மனைவி சிஹாமும் பிஹெச்.டி ஆராய்ச்சி முடித்தவர்தான். கவிஞரும் அறிவுஜீவியுமான இவர்தான் பின் லேடனின் முக்கியமான உரைகளைத் திருத்தம் செய்து கொடுத்தவர். மூன்றாவது மனைவி அமாலைத் திருமணம் செய்யும்போது பின் லேடனுக்கு வயது 43. அமாலுக்கு வயது 17. பின் லேடனின் ஐந்து வாரிசுகளை இவர் பெற்றெடுத்தார். இதில் இரண்டு குழந்தைகள் அபோதாபாத்தில் பிறந்தன. தனது ஆலோசகர் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஒசாமா பின் லேடன் - 2001 அந்த வீட்டில் வசித்த 24 பேருக்காக வாரத்தில் இரண்டு ஆடுகள் வெட்டப்படும். முட்டைக்காக 100 கோழிகளைத் தோட்டத்தில் வளர்த்தார்கள். பால் தர பசுக்களும் வளர்க்கப்பட்டன. தேன்கூடு வைத்து தேனும் எடுத்தார்கள். காய்கறிகளும் வெள்ளரியும் தோட்டத்தில் பயிரிட்டு இருந்தார்கள். தேவையான மற்ற பொருள்களை வாங்கிவர, ஒசாமாவின் நம்பிக்கைக்குரிய கூரியர் அபு அஹமது அல்-குவைதி ஒரு ஜீப் வைத்திருந்தான். சுடப்பட்டு சாவதற்கு முன்பாக 5 வருடங்கள் பின் லேடன் வாழ்ந்த அபோதாபாத் வீடு, ஒரு தற்காலிக ராணுவ முகாம் போலத்தான் இருந்தது. அந்த வீட்டின் எந்த சுவரிலும், சும்மா இயற்கைக்காட்சிப் படங்கள் கூட மாட்டியிருக்கவில்லை. ஏ.சி. இல்லை; ஹீட்டர் இல்லை. இத்தனைக்கும் பனிக்காலங்கள் பனிப்பொழிவு அதிகமாகவும், கோடையில் வெயில் அதிகமாகவும் இருக்கும் ஊர் அபோதாபாத். மூன்று மாடி வீட்டில் 24 பேர் வசித்தாலும் கரன்ட் பில் மாதம் ரூ.2,500 அளவுக்குத்தான் வந்தது. ஆடம்பரம் என எதுவுமே அந்த வீட்டில் இல்லை. எல்லோருக்கும் சாதாரண மரக்கட்டில்கள்தான். பின் லேடனின் மூன்று மனைவியருக்கும் தனித்தனி சமையல் அறைகள் இருந்தன. மூத்த மனைவியர் இருவரின் சமையல் மற்றும் படுக்கையறைகள் முதல் மாடியில் இருக்க, இரண்டாவது மாடியில் மூன்றாவது மனைவி அமாலுக்கு சமையலறை இருந்தது. பின் லேடனின் கூரியரான அல்-குவைதி, அவனது சகோதரன் ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்தோடு இந்த வளாகத்தில் வாழ்ந்தனர். அவர்கள் வசித்த அவுட் ஹவுஸ், பின் லேடன் வாழ்ந்த வீட்டுக்குப் பின்புறம் இருந்தது. இரண்டு வீடுகளையும் 2 மீட்டர் உயரமான ஒரு சுவர் பிரித்தது. குவைதிக்கும் அவனது சகோதரனுக்கும் மாதம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் தரப்பட்டது. அல்-கொய்தா அமைப்பு நிதிப் பற்றாக்குறையில் தவித்தது இதிலிருந்து தெரிகிறது. பின் லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் வீட்டின் வரைப்படம் அல்-குவைதியின் மனைவி மரியம், ஐந்து வருடங்களில் கடந்த ஆண்டு ஒரே ஒரு முறை வீட்டை சுத்தம் செய்வதற்காக மட்டுமே பின் லேடன் தங்கியிருந்த பெரிய வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அப்போது பின் லேடனையும் பார்த்திருக்கிறார். ஆனால் அவருக்கு பின் லேடனை அடையாளம் தெரியவில்லை. தங்கள் முதலாளி யார் என்று குவைதியும் சொல்லியிருக்கவில்லை. ஆக, தன் வீட்டில் இருந்த சிலருக்கேகூடத் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்தியிருக்கிறான் பின் லேடன். பின் லேடனின் உயரத்துக்கு, அவன் தங்கியிருந்த இரண்டாவது மாடி படுக்கையறைக் கூரை தலையில் இடித்திருக்கும். சுவர்களில் மட்டுமே டைல்கள் பதிக்கப்பட்ட, ஐம்பது ரூபாய்க்கு விற்கும் சாதாரண பிளாஸ்டிக் ஷவர் பொருத்தியிருந்த. மிக எளிமையான குளியலறை. ‘ஜஸ்ட் ஃபார் மென்’ ஹேர்டை பின் லேடனுக்கு பிடித்த பிராண்ட். 65 வயதிலும் தலைமுடிக்கும் தாடிக்கும் இதை அடித்து, தன் இளமைத் தோற்றத்தைப் பராமரித்து வந்தான். பின் லேடன் தனது பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டது கம்ப்யூட்டரில்தான். இரண்டாவது மாடி ஹாலை ஒட்டி இருந்த ஸ்டடி ரூமின் மூலையில் இருந்தது பின் லேடனின் கம்ப்யூட்டர். அந்த வீட்டுக்குள் தொலைபேசி இணைப்போ, இன்டர்நெட் இணைப்போ இல்லை. இரண்டும் இருந்திருந்தால் பின் லேடனை எப்போதோ பிடித்திருப்பார்கள். தனது போராளிகளுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பும் கடிதங்களை இந்தக் கம்ப்யூட்டரில் டைப் செய்து, அதை அல்-குவைதி மூலம் கொடுத்தனுப்புவது பின் லேடனின் வழக்கம். மற்றவர்களையும் போன் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்த வேண்டாம் என்று கட்டளை போட்டிருந்ததால், பின் லேடனிடமிருந்து ஒரு கடிதம் போய், அதற்கு பதில் பெற்று வருவதற்குள் குறைந்தது 2 மாதங்கள் ஆகிவிடும். இப்படி புறாக் காலில் கட்டிவிடும் புராதன டெக்னிக்கை வைத்துத்தான் அல்-கொய்தா இயங்கியது என்பதை நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். உண்மையைச் சொல்வதென்றால், கடந்த 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தோராபோரா மலைக்குகைகளிலிருந்து தப்பித்த பின் லேடன், அதன்பிறகு எங்கு சென்றான் என்பது அமெரிக்கப் படைகளுக்குத் தெரியாது. ஆப்கானிஸ்தானின் வடக்கில் இருக்கும் குனார் காடுகளுக்குச் சென்ற பின் லேடன், அங்கிருந்து எல்லை தாண்டி பாகிஸ்தானின் பெஷாவருக்கு வந்தான். அங்கிருந்து ஷாங்க்லா என்ற மலைக்கிராமம் சென்று ஒரு வருடம் தங்கியிருந்தான். 2001-ம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்றில் ஒசாமா பின் லேடன் அடுத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலுள்ள ஹரிபூர் என்ற சிறுநகரத்தில் இரண்டு வருட வாழ்க்கை. அபோதாபாத் வீடு ரெடியானதும், இங்கு வந்தாயிற்று! 2009-ம் ஆண்டு அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.-வின் இயக்குநராக லியோன் பனேட்டாவை நியமித்தார், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா. ‘‘அல்-கொய்தாவுக்கு எதிரான போரைவிட, பின் லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிப்பது முக்கியமானது’’ என்பது பனேட்டாவுக்கு அவர் போட்ட கட்டளை. 15 மாதங்கள் கழித்து, 2010 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நல்ல செய்தியோடு ஒபாமாவைப் பார்க்க வந்தார் பனேட்டா. ‘‘பின் லேடனின் நம்பிக்கைக்குரிய கூரியர் அல்-குவைதி வாழும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுபிடித்து விட்டோம். ஐந்து மீட்டர் உயர காம்பவுண்டு சுவரோடு இருக்கும் அந்த வீட்டில்தான் பின் லேடனும் இருக்கக்கூடும்’’ என்பதே அந்த செய்தி. அதாவது, பின் லேடன் இருக்கும் இடத்தை, அவனைக் கொல்வதற்கு எட்டு மாதங்கள் முன்பாகவே கண்டுபிடித்துவிட்டது அமெரிக்கா. இப்போது பின் லேடனை எப்படிக் கொல்வது? ஒபாமா முன்பு நான்கு சாய்ஸ்கள் இருந்தன. டிரோன் எனப்படும் ஆளில்லா விமானத்திலிருந்து 230 கிலோ எடையுள்ள ஏவுகணையைச் செலுத்திக் கொல்வது. அல்லது, பி-2 ரக போர் விமானத்திலிருந்து 9 ஆயிரம் கிலோ எடையுள்ள - லேசர் வழிகாட்டுதல்படி துல்லியமாகத் தாக்குகிற - குண்டுகளை வீசிக் கொல்வது, அல்லது அமெரிக்கப் படைகளை அபோதாபாத் வீட்டுக்கு அனுப்பிக் கொல்வது, இறுதியாக பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு கூட்டுத் தாக்குதல் நடத்துவது! இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே சிரமமாக இருந்தது. சி.ஐ.ஏ. இயக்குநர் லியோன் பனேட்டா ‘அபோதாபாத் வீட்டில் பதுங்கியிருப்பது பின் லேடனாக இருக்கலாம்’ என்ற தகவல் வந்ததும், ‘அட்டாக்’ என்று கட்டளையிடவில்லை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. ஏடாகூடமாக ஏதாவது நடந்து பின் லேடன் தப்பிவிட்டால், அவர் அதிபர் பதவியிலிருந்தே விலக நேர்ந்திருக்கும். அதனால் இரண்டு விஷயங்களை அவர் செய்யச் சொன்னார். முதல் விஷயம், ரகசியம் காப்பது. ஒபாமா உட்பட 8 பேருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். அலுவல்ரீதியான எந்த ஃபைலையும் இதற்காக உருவாக்காமல் பார்த்துக் கொண்டனர். இரண்டாவது விஷயம், அது பின் லேடன்தானா என்பதை உறுதி செய்வது. சி.ஐ.ஏ. அமைப்பின் உளவாளிகள் பாகிஸ்தானில் களம் இறங்கினர். கழுகு சைஸில் இருக்கும் ஒரு குட்டி உளவு விமானம், 24 மணி நேரமும் அந்த வீட்டையே கண்காணிக்க ஆரம்பித்தது. அந்தத் தெருமுனையில் இருக்கும் குப்பைத் தொட்டியை சி.ஐ.ஏ ஏஜென்ட் ஒருவர் தினமும் கிளறி, ஏதாவது இருக்கிறதா என்று தேடுவார். ஷகீல் அஃப்ரிடி என்ற உள்ளூர் டாக்டரை வைத்து ஒரு நாடகத்தையும் நடத்தினர். ஒரு மருத்துவக் குழுவுடன் சென்று அந்த ஏரியா குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட இந்த டாக்டர், அப்படியே பின் லேடனின் குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டு, அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தார். (இந்த டாக்டர் பிறகு பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டார் என்பது தனி சோகக் கதை!) பின் லேடனின் இன்னொரு மகனின் ரத்த மாதிரியிலிருந்து எடுத்த மரபணுவோடு இவற்றை ஒப்பிட்டுச் சோதனை நடத்தி, அந்த வீட்டுக்குள் பின் லேடன் இருக்கலாம் என்பதை உறுதி செய்தார்கள். பின் லேடன் என்று சந்தேகத்துக்குரிய உயரமான அந்த மனிதர், இரவு நேரங்களில் தன் தோட்டத்தில் வந்து வேக வேகமாக நடை போடுவதால், அவருக்கு ‘பேசர்’ (Pacer) என்று புனைப்பெயர் சூட்டியது சி.ஐ.ஏ. 9/11 Anniversary - Bin Laden Death Explainer பின் லேடனை அட்டாக் செய்வது தொடர்பாக தங்களுக்கு எழுந்த எல்லா சந்தேகங்களையும் கேள்விகள் ஆக்கி, அவற்றுக்கு பதில் தயார் செய்து, கிட்டத்தட்ட 3 அங்குல தடிமனுக்கு ஒரு புத்தகமே ரெடி செய்தார்கள் அமெரிக்க அதிகாரிகள். ‘பின் லேடனின் சடலத்தை என்ன செய்வது?’ என்பதுவரை எல்லா கேள்விகளுக்கும் 2010 டிசம்பர் வாக்கில் பக்காவாக பதில் தயார்! இதற்கிடையே, பின் லேடனை எப்படிக் கொல்வது என்பதற்கு அதிபர் ஒபாமா முன்பு இருந்த சாய்ஸ்கள் குறைந்துகொண்டே வந்தன. 2011 ஜனவரியில் சி.ஐ.ஏ. கான்டிராக்டர் ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்கரை ஒரு கொலை வழக்கில் பாகிஸ்தான் போலீஸ் கைது செய்தது. இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்க அரசுக்கு கசப்புணர்வு ஏற்பட்டது. நம்பத் தகுந்ததாக இல்லாத ஒரு தேசத்தின் ராணுவத்தை கூட்டாகச் சேர்த்துக்கொண்டு இப்படி ஒரு ரகசிய அதிரடியைச் செய்யமுடியாது என்ற முடிவுக்கு ஒபாமா வந்தார். எனவே பாகிஸ்தானுக்குத் தெரியாமலேயே, அந்த நாட்டுக்குள் அட்டாக் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசிக் கொல்வது அடுத்த சாய்ஸ். உளவு விமானங்கள் மூலம் குண்டு வீசும் டெக்னாலஜியை சி.ஐ.ஏ. உருவாக்கியதே பின் லேடனுக்காகத்தான். அரபு நாடுகளில் இலக்கில்லாமல் திரியும் ஒரு நபரை, தரைவழியே தேடிச் சென்று தாக்குவது அமெரிக்க ராணுவத்துக்கோ, உளவுப் படைக்கோ சாத்தியமில்லாத விஷயம்! எனவேதான் இப்படி ஆளில்லா விமானத் தாக்குதல் முறையை உருவாக்கி மேம்படுத்தினர். 230 கிலோ எடையுள்ள ஒரு குண்டை இந்த விமானம், 90 சதவிகித துல்லியத்துடன் இலக்கில் வீசும். இந்த சாய்ஸையும் நிராகரித்தார் ஒபாமா. இதற்கான காரணங்களும் விவாதிக்கப்பட்டன. பின் லேடனைக் கொல்ல 230 கிலோ எடையுள்ள குண்டு போதுமானதா என்ற சந்தேகம் இருந்தது. வலிமையான கான்க்ரீட் சுவர்களால் உருவாக்கப்பட்ட பாதாள அறையில் பின் லேடன் பதுங்கியிருந்தால், அந்த குண்டிலிருந்து தப்பிப் பிழைத்துவிடலாம். ஒருவேளை பின் லேடனை அந்தத் தாக்குதலில் கொன்றாலும்கூட, சடலத்தைக் கேட்டால் பாகிஸ்தான் தர மறுக்கலாம். அப்போது, பின் லேடனைக் கொன்றதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லாமல் போய்விடும். அல்-கொய்தா அமைப்பும், ‘பின் லேடன் உயிரோடு இருக்கிறார்’ என பிரசாரம் செய்யலாம். அதோடு, அல்-கொய்தா அமைப்பு சம்பந்தமாக பின் லேடனின் மறைவிடத்தில் இருக்கும் சகல ஆதாரங்களும் அழிந்துவிடும். அந்த ஆதாரங்கள் இல்லாமல் அந்த அமைப்பை வேரறுக்க முடியாது. தளபதி ஜேம்ஸ் கார்ட்ரைட் (2023 புகைப்படம்) பி-2 ரக போர் விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்வதே சிறந்தது என வலியுறுத்தினார் அமெரிக்கப் படைகளின் துணைத் தளபதி ஜேம்ஸ் கார்ட்ரைட். அவர் சொன்ன உத்தி பயங்கரமானது. ‘‘9 ஆயிரம் கிலோ எடையுள்ள 32 குண்டுகளை அந்த வளாகத்தைச் சுற்றி வீசினால், கட்டடம் பொடிப்பொடியாகிவிடும். தரைக்கு அடியில் 20 அடி ஆழத்தில் சுரங்க அறை இருந்தாலும், அதையும் இந்த குண்டுகள் நொறுக்கிவிடும். பின் லேடன் தப்பிக்கவே முடியாது’’ என்றார் அவர். ஆனால் இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட 24 பேரும் இறப்பார்கள்; பக்கத்து வீடுகளிலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழும்; பின் லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குக் கூப்பிடு தூரத்தில் பாகிஸ்தான் ராணுவ அகாடமி இருந்தது. அங்கு இந்த குண்டின் மிச்ச சொச்சங்கள் விழுந்தால், இரு தேசங்களின் உறவில் குண்டு வீசியது போலத்தான்! அதனால் இதை எல்லோருமே நிராகரித்தார்கள். இவ்வளவு டீடெய்லாக விவாதம் நடந்தபோதுகூட, அபோதாபாத் வீட்டில் இருப்பது பின் லேடன்தான் என்பதை யாரும் 100 சதவிகிதம் நம்பத் தயாராக இல்லை. சி.ஐ.ஏ. இயக்குநர் லியோன் பனேட்டா 80 சதவிகிதம் நம்பினார். அப்போது அமெரிக்க துணை அதிபராக இருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் 40 சதவிகிதம்கூட நம்பவில்லை. * மற்ற தாக்குதல் வழிமுறைகளை நிராகரித்துவிட்டு, ‘சீல்ஸ்’ சிறப்புப்படையினரை அனுப்பி பின் லேடனைக் கொல்ல வேண்டும் என 2011 மார்ச் 29-ம் தேதி அப்போதைய அதிபர் ஒபாமா முடிவெடுத்தார். பின் லேடனின் வீட்டுக்குள் நிகழ்த்த வேண்டிய தாக்குதலை அமெரிக்காவில் ஒரு ரகசிய இடத்தில் ஒத்திகை பார்த்தனர் சீல்ஸ் படையினர். * அட்டாக் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாக - அதாவது ஏப்ரல் 25ம் தேதி - விக்கிலீக்ஸ் சில ரகசியக் கடிதங்களை வெளியிட்டது. ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழிலும், அதன் இணையதளத்திலும் இவை வெளியாகின. சிறையில் அடைபட்டிருக்கும் அல்-கொய்தா கைதிகளிடம் நடத்திய விசாரணை விவரங்களும் அதில் வந்திருந்தன. ‘‘பின் லேடனின் அதிகாரபூர்வ கூரியர் ஒருவன் கொடுத்த கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அபோதாபாத் சென்றிருந்தேன்’’ என்பதாக அல்-கொய்தா முக்கியஸ்தர் ஒருவர் கொடுத்த வாக்குமூலமும் அதில் அடக்கம். இதை ஒருவேளை பின் லேடன் பார்த்திருந்தால், தன் மறைவிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்துவிட்டது என்பதை உணர்ந்து தப்பியிருக்கலாம். ஆனால், இணையதள இணைப்பு இல்லாததால் பின் லேடன் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லாமல் போனது. A wanted poster for Bin Laden, made by the FBI in early 2011 * 2011 மே 1, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி. ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் ராணுவ தளத்திலிருந்து கிளம்பின இரண்டு ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டர்கள். ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் அரை மணி நேர வித்தியாசம். அப்போது பாகிஸ்தானில் இரவு 11.30 மணி. பின் லேடன் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியிருந்தார்கள். * சீல்ஸ் வீரர்கள் 23 பேருடன் அரபு மற்றும் உருது தெரிந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இருந்தார். பின் லேடன் வீட்டில் இருக்கலாம் எனக் கருதப்பட்ட 24 பேரின் புகைப்படங்களும் குறிப்புகளும் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களோடு ‘கெய்ரோ’ என்ற நாயும் இருந்தது. * ரேடாரின் கண்களில் சிக்காதபடி விசேஷ பெயின்ட் பூசப்பட்டவை இந்த ஹெலிகாப்டர்கள். வால்பக்கம் இருக்கும் மோட்டார்களும் ஸ்பெஷலாக செய்யப்பட்டவை என்பதால் அதிக சத்தம் கேட்காது. அதோடு, பாகிஸ்தான் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, மிகத் தாழ்வாக, கிட்டத்தட்ட மரங்களுக்கு சற்று மேலாகவே பறந்து வந்தன இவை. 250 கி.மீ. தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் வந்தடைந்தன. * பின் லேடன் வீட்டுத் தோட்டத்தில் இறங்க முயன்றது முதல் ஹெலிகாப்டர். அப்போது அதன் வால்பகுதி காம்பவுண்ட் சுவரில் உரச, வால் காற்றாடி செயலிழந்தது. சாமர்த்தியமாக பைலட் தரையிறக்கியதால், வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை. இரண்டாவது ஹெலிகாப்டர் மூலம் மொட்டை மாடியில் சில வீரர்களை இறக்குவதாக பிளான். ஆனால் முதலில் இறங்கிய ஹெலிகாப்டர் சொதப்பியதால், இந்த பிளான் மாற்றப்பட்டது. தூரத்து வயல்வெளியில் அது இறங்கியது. வெள்ளை மாளிகையில் இருந்தபடி அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் பைடன் மேற்பார்வை - The Situation Room * முதலில் தடுமாறி இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து 3 வீரர்கள் குதித்து இறங்கி வீட்டுக்குள் ஓடினர். அவுட் ஹவுஸில் வசித்த பின் லேடனின் கூரியர் குவைதி சத்தம் கேட்டு எழ, இரண்டு புல்லட்கள் அவனை சாகடித்தன. அவன் மனைவியை தோளில் சுட்டு காயப்படுத்தினர். குவைதியிடம் ஏ.கே.47 இருந்தது. ஆனால் அவனால் அதை எடுக்க முடியவில்லை. அதன்பின் அவுட் ஹவுஸில் நுழைந்தவர்கள், வீட்டின் தரைதளத்தில் இருந்த குவைதியின் சகோதரன் அப்ராரையும், அவனது மனைவி புஷ்ராவையும் கொன்றனர். நவீன சைலன்ஸர் பொருத்தியிருந்ததால், துளிகூட சத்தம் இல்லை. * இதற்குள் மற்ற சீல்ஸ் வீரர்கள் பின் லேடன் பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து, ஆங்காங்கே இருந்த கதவுகளை குண்டு வைத்துத் தகர்த்தனர். * சீல்ஸ் வீரர்களின் ஹெல்மெட்டில் இருந்த கேமராக்கள் உடனுக்குடன் தாக்குதல் காட்சிகளை அமெரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. பின் லேடனின் வீட்டுக்கு நேர் மேலே 2 மைல் உயரத்தில், வௌவால் வடிவத்தில் ஒரு ஆளில்லா உளவு விமானம் பறந்து கொண்டிருந்தது. அது தாக்குதல் காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்தது. வெள்ளை மாளிகையில் இருந்தபடி அதிபர் ஒபாமாவும் மற்றவர்களும் இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். * முதல் மாடியில் இருந்த பின் லேடனின் 23 வயது மகன் காலித் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த தளத்தில் இருந்த பின் லேடனின் மூத்த மனைவிகள் இருவர், பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என இதர 17 பேரும் அப்புறப்படுத்தப்பட்டனர். * முதல் ஹெலிகாப்டர் தடுமாறி தரையிறங்கியதுமே பின் லேடன் விழித்தாயிற்று. ஆனால் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை. உள்ளே இருப்பவரை வெளியிலிருந்து யாரும் பார்த்துவிடாதபடி உயரத்தில் இருந்த ஜன்னல்கள் அவனுக்கே பாதகமாக அமைந்தன. நிலவும் இல்லாத மின்சாரமும் இல்லாத இருட்டிலும் நிசப்தத்திலும் அவன் 15 நிமிடங்களை தவிப்போடு நகர்த்தினான். முதலில் ‘‘என்ன சத்தம்?’’ என்று கேட்டு வந்த மகளுக்கு, ‘‘போய்த் தூங்கு’’ என்று ஆறுதல் சொன்னவன், மகன் சுடப்பட்டு அலறுவது கேட்டதும் இரண்டாவது தளத்திலிருந்த இரும்புக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். படியில் ஏறிய சீல்ஸ் வீரர்கள் அவனைப் பார்த்து விட்டார்கள். கதவை மூடாமலேயே பின் லேடன் பின்வாங்க, வேகமாகத் துரத்தினர் வீரர்கள். இவர்களைப் பார்த்ததும் அலறிய அமால் கணவனுக்கு முன்னால் நிற்க, காலில் சுட்டு அவரை அப்புறப்படுத்தினர். நிராயுதபாணியாக நின்ற பின் லேடனின் மார்பிலும் இடது கண்ணிலும் குண்டுகள் பாய, அந்த இடத்திலேயே மரணம் நிகழ்ந்துவிட்டது. பின் லேடன் இறந்துவிட்டதை உறுதிசெய்த எஃப்.பி.ஐ இணையதளம் * படுக்கையறை ஷெல்ஃபில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கியும் பிஸ்டலும் இருந்தாலும், அவற்றை எடுக்க போதுமான நேரம் இருந்தாலும், பின் லேடன் அமெரிக்க வீரர்களை சுட முயற்சி செய்யவில்லை. அந்த வீட்டில் ஏதும் ரகசிய அறைகளோ, தப்பியோட சுரங்கப் பாதைகளோ இல்லை. ஆபத்து நெருங்கும்போது முன்கூட்டியே எச்சரிக்கைத் தகவல் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்த பின் லேடனுக்கு கடைசி வரை எச்சரிக்கை வரவே இல்லை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/a-detailed-report-on-how-osama-bin-laden-was-killed-by-usa-operation



