சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சென்ட்ரல் ரெயில் நிலையப் பகுதியில் நேற்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சிறுமியருக்கான 2 காப்பகங்கள், சிறுவர்களுக்கான 3 காப்பகங்கள், அறிவுத்திறன் குறைவுள்ள ஆண்களுக்கான 1 காப்பகம், ஆண்களுக்கான 14 காப்பகங்கள், பெண்களுக்கான 11 காப்பகங்கள், முதியோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 1 காப்பகம், முதியோர் பெண்களுக்கான 2 காப்பகங்கள், முதியோர் ஆண்களுக்கான 1 காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான 3 காப்பகங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான 2 காப்பகங்கள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான 1 காப்பகம், திருநங்கைகளுக்கான 1 காப்பகம், மெரினா கடற்கரையில் குடும்பங்களுக்கான 1 காப்பகம் என நகர்ப்புற வீடற்றோருக்கு 43 இரவு நேர காப்பகங்களும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கான 1 காப்பகம், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் தங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக பெண்களுக்கான 7 காப்பகங்கள் மற்றும் ஆண்களுக்கான 6 காப்பகங்கள் என 14 சிறப்பு காப்பகங்கள் என மொத்தம் 57 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,384 நபர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த காப்பகங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படுக்கை வசதி, மின்வசதி, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, இணை ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 10.07.2026 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியில் தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேரக் காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர். மேலும், நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பக சமூகப் பணியாளர்கள் தெருநாடகம், பறையாட்டம், கதனி கூத்து மற்றும் ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் சிறப்பாக எடுத்துரைத்தனர். மேலும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வலுப்படுத்தும் வகையில் அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் காப்பகங்களில் வழங்கப்படும் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், பாலின ஆய்வகத் தலைவர் டாக்டர் லெஜிஸ், பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நந்தகுமார், ரெயில்வே காவல்துறையினர், ரெயில்வே பாதுகாப்புப் படை அலுவலர்கள் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/cultural-programs-to-raise-awareness-about-night-shelters-for-the-urban-homeless-in-chennai




