சொந்த வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு. அந்தக் கனவு இல்லம் பல ஆண்டுகள் உறுதியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்றால், அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது அவசியம். பலர் வீட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் அதை சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை சில முக்கியமான பராமரிப்புப் பணிகளைச் செய்தால், பெரிய செலவுகளையும் எதிர்பாராத சேதங்களையும் தவிர்க்க முடியும். முதல் பணி முதலில் வீட்டின் கூரை மற்றும் மேல்தளத்தை ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் நீர் கசிவு ஏற்படுகிறதா, விரிசல்கள் உருவாகியுள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும். சிறிய விரிசல்கள்கூட காலப்போக்கில் பெரிய பிரச்சினைகளாக மாறக்கூடும். எனவே அவற்றை உடனடியாக சரிசெய்வது நல்லது. வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்களையும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். சுவர்களில் ஈரப்பதம், பூஞ்சை, பெயிண்ட் உரிதல் அல்லது விரிசல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே இதை கவனித்தால், சுவர் சேதத்தைத் தடுக்க முடியும். மின் சாதனங்கள் சோதனை மின்சார அமைப்புகளை ஆய்வு செய்வதும் மிகவும் முக்கியம். மின் இணைப்புகள், சுவிட்சுகள், பிளக்குகள் மற்றும் மின் வயர்களில் ஏதேனும் சேதம் உள்ளதா என்பதை தகுதியான மின்பொறியாளர் மூலம் பரிசோதிக்க வேண்டும். இது மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற அபாயங்களைத் தவிர்க்க உதவும். வீட்டின் நீர் விநியோக அமைப்புகளையும் சரிபார்க்க வேண்டும். தண்ணீர் குழாய்கள், மோட்டார், மேல்நிலைத் தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சிறிய கசிவுகள்கூட நீர் வீணாவதற்கும் சுவர் ஈரப்பதத்திற்கும் காரணமாகலாம். கதவு, நிலைகள் சோதனை கதவுகள் மற்றும் ஜன்னல்களின் நிலையும் கவனிக்கப்பட வேண்டும். மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களில் கரையான் தாக்கம், துருப்பிடித்தல் அல்லது தளர்வு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பூட்டுகள், கைப்பிடிகள் மற்றும் கீல்களுக்கு எண்ணெய் தடவி பராமரிக்கலாம். வீட்டைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பைகள் அல்லது இலைகள் தேங்கியிருந்தால், நீர் தேங்கி கட்டிடத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இந்தப் பணியைச் செய்வது அவசியம். எலக்ட்ரானிக் சாதனங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர், நீர் சுத்திகரிப்பான் மற்றும் கீசர் போன்ற சாதனங்களுக்கு தேவையான சேவையைச் செய்தால் அவற்றின் ஆயுள் அதிகரிக்கும். பூச்சி மற்றும் கரையான் தடுப்பு பணிகளையும் ஆண்டுதோறும் மேற்கொள்வது நல்லது. குறிப்பாக மரச்சாமான்கள் அதிகம் உள்ள வீடுகளில் கரையான் பாதிப்பு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். சுற்றுப்புறப் பராமரிப்பு வீட்டின் சுற்றுப்புறத்தையும் பராமரிக்க வேண்டும். தோட்டம் இருந்தால் தேவையற்ற செடிகள் மற்றும் களைகளை அகற்ற வேண்டும். மரக்கிளைகள் வீட்டின் மீது உராயும் நிலையில் இருந்தால் அவற்றை வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டும். ஒரு வீட்டின் மதிப்பை பாதுகாப்பது புதிய வசதிகளைச் சேர்ப்பதில் மட்டும் இல்லை. அதை முறையாகப் பராமரிப்பதிலும் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த எளிய பராமரிப்புப் பணிகள், வீட்டின் ஆயுளை நீட்டிப்ப தோடு அதன் அழகையும் பாதுகாக்கும். அதைவிட முக்கியமாக, குடும்பத்தினருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்விடத்தை உறுதி செய்யும். எனவே, வீட்டு பராமரிப்பை ஒரு செலவாக அல்லாமல், எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முதலீடாகக் கருதுவது புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/trending/what-are-the-essential-annual-maintenance-tasks-for-homes




