திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகனுக்கு வயது 29. ஆனால், அவரை ‘ஜெகன்’ என்று அழைப்பவர்களைவிட ‘ஜோ குட்டி’ என்ற பெயரில் அறிந்தவர்கள்தான் அதிகம். 14 வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கிய இவர், இன்று ஒரு நடனக் கலைஞராக மட்டுமல்லாமல், பல மாணவர்களுக்கு பரதம் கற்றுக்கொடுக்கும் குருவாகவும் திகழ்கிறார். மலேசியா நடனமணி மனோஜ், ஜெயவீரபாண்டியன், வசுந்தரா சுந்தரம் உள்ளிட்ட குருமார்களிடம் பரதநாட்டியத்தின் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட இவர், சலங்கை பூஜை, அரங்கேற்றம் என ஒவ்வொரு படியாகக் கடந்து வந்திருக்கிறார். 19 வயதிலேயே குழந்தைகளுக்குப் பரதம் கற்றுக்கொடுக்கும் குருவாக மாறியவர், இன்று பல்வேறு மேடைகளிலும் கோயில்களிலும் தனது நடனத்தை அரங்கேற்றி வருகிறார். “என்னை இன்று ‘பரதநாட்டிய குரு’ என்று பெருமையாக அழைக்க வைப்பதற்கு காரணம் இந்தக் கலைதான். 14 வயதில் நான் பரதம் கற்கத் தொடங்கியபோது, இது இவ்வளவு பெரிய பயணமாக மாறும் என்று நினைக்கவில்லை. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் இந்தக் கலையே என்னுடைய வாழ்க்கை என்று புரிந்துகொண்டேன். அதன்பிறகு வேறு எதையும் நினைத்துப் பார்க்கவில்லை.” “பரதம் கற்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் என்னைச் சுற்றி பல கேள்விகள் இருந்தன. குறிப்பாக, ‘ஆண்கள் பரதம் கற்கலாமா?’ என்ற கேள்வியை நேரடியாகவும் கேட்டிருக்கிறார்கள்; பின்னாலும் பேசியிருக்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடமிருந்து அந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் என்னுடைய அம்மா மட்டும் என்னை விட்டுக்கொடுக்கவில்லை. எல்லோரும் எதிர்த்தபோதும் என்னை வகுப்புக்கு அழைத்துச் செல்வார். வகுப்பு முடிந்ததும் அழைத்துக்கொண்டு வருவார். சலங்கை பூஜை செய்து, இந்தக் கலைக்குள் என்னை நிறுத்தியதும் அவர்தான்.” “என்னுடைய வாழ்க்கையில் மேடை என்பது ரொம்ப முக்கியமானது. வீட்டில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும், மனதில் எவ்வளவு வேதனை இருந்தாலும், மேடையில் நின்றுவிட்டால் அந்த நிமிடத்தில் எல்லாமே மறந்துபோகும். நம்முடைய பிரச்னைகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லாமல், அவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் ஒரு கலைஞனாக என்னுடைய ஆசை.” “படிப்பை முடித்த பிறகு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தன. அரசு வேலைக்குக்கூட அழைப்பு வந்தது. ஆனால், நான் இந்தக் கலையை விட்டுவிட்டு வேறு எங்கும் போகக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்த வாய்ப்புகளை நிராகரித்தேன். மற்றவர்களுக்கு அது ஒரு நல்ல வேலை வாய்ப்பாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்கு பரதம் ஒரு வேலை இல்லை. அது என்னுடைய வாழ்க்கை.” “பரதநாட்டியத்தில் பெண் கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு புதிதல்ல. ஆனால், அதற்காகவும் நிறைய கேலி, கிண்டல், விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். சிலர் நேரடியாகவே மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அருவருப்பான வார்த்தைகளைக்கூட கேட்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் மனதை உடைத்திருக்கின்றன. பல இரவுகளில் அழுதிருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருந்தால் நான் எப்போதோ இந்தக் கலையை விட்டிருப்பேன்.” “பெண் கதாபாத்திரம் கொடுக்கப்படும்போது அதை வெறும் வேஷமாக நான் பார்ப்பதில்லை. அந்தக் கதாபாத்திரத்தை தத்ரூபமாக வெளிப்படுத்துவதற்காகத்தான் பெண் வேடம் அணிகிறேன். ஒரு பெண்ணின் உடல் அமைப்பு, முக அமைப்பு, முகபாவனைகள் போன்றவற்றை மேடையில் இயல்பாகக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அதற்காகவே அந்த வேடம். அதனால்தான் எனக்கு பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள் வழங்கப்படுகின்றன. அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னால் முடிந்த சிறந்த நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதில்தான் என்னுடைய கவனம் இருக்கும்.” “நான் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களில் நடிப்பதற்குக் காரணம் வேறு எதுவும் இல்லை. மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்தது. ‘இன்னும் இதுபோன்ற கதாபாத்திரங்களைச் செய்யுங்கள்’ என்று அவர்கள் சொல்லும்போது, அடுத்த முறை அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதனால்தான் தொடர்ந்து அந்த வேடங்களை ஏற்றுக்கொண்டு வருகிறேன்.” “ஒரு கதாபாத்திரத்தை மேடையில் செய்வது என்றால், வெறுமனே ஆடை அணிந்து சென்றுவிடுவது கிடையாது. அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன மாதிரியான ஆடை பொருத்தமாக இருக்கும், என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும், எப்படிப்பட்ட ஒப்பனை இருக்க வேண்டும், முகபாவனை எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நூறு சதவிகிதத்துக்கும் மேலாக உழைக்கிறேன்.” “என்னுடைய கலைப்பயணத்தில் பல பட்டங்களும் விருதுகளும் கிடைத்திருக்கின்றன. பல முக்கியமான மேடைகளிலும், பிரசித்தி பெற்ற கோயில்களிலும் நடனமாடியிருக்கிறேன். அந்த அங்கீகாரங்கள் எல்லாமே மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. ஆனால், என்னுடைய மாணவர்கள் என்னை ‘குரு’ என்று அழைக்கும்போது கிடைக்கும் பெருமை வேறு மாதிரி.” “பரதம் யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு நல்ல குருவாக இருப்பது கடவுளின் ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு கற்றுக்கொடுத்த குருமார்களுக்கு ஒரு நல்ல சீடனாக இருக்க வேண்டும். அதேபோல, என்னிடம் கற்றுக்கொள்ள வரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல குருவாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.” “என்னுடைய பள்ளியிலேயே தற்போது பல ஆண் குழந்தைகள் பரதம் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எதிர்கொண்ட கேள்விகளை அடுத்த தலைமுறை எதிர்கொள்ளக் கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம்.” “ஆண் குழந்தைகளும் பரதம் கற்றுக்கொள்ளலாம். இது பெண்களுக்கான கலை மட்டுமல்ல; எல்லோருக்குமான கலை. பரதத்தைப் பற்றி மக்களிடம் சரியான விழிப்புணர்வு வர வேண்டும். இது வெறும் வேஷம் கட்டி ஆடுவது கிடையாது. இது ஒரு தெய்வீகமான கலை. அதன் பின்னால் இருக்கும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.” ஒரு காலத்தில் ‘ஆண்கள் பரதம் கற்கலாமா?’ என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருந்த ஜோ குட்டி, இன்று அதே பரதத்தின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். ‘ஜெகன்’ என்ற பெயரை ‘ஜோ குட்டி’ என்ற பெயராக மாற்றியது வெறும் புகழல்ல; கலையின் மீதான காதலும், விமர்சனங்களைத் தாண்டி தொடர்ந்து பயணிக்கச் செய்த தன்னம்பிக்கையும், அவருக்குப் பின்னால் உறுதியாக நின்ற தாயின் ஆதரவும்தான். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/arts/from-jegan-to-jo-kutty-a-male-dancers-journey-in-bharatanatyam




