வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிபலிக்கிறதா என்றால், ‘இல்லை’ என்கின்றன மத்திய தணிக்கை ஆணையத்தின் (CAG) அறிக்கையும், சமீபத்திய ஜி.எஸ்.டி வசூல் தரவுகளும். த.வெ.க அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ‘கஜானா காலியாக உள்ளது’ என்று கூறிய நிலையில், வெவ்வேறு வருவாய் ஆதாரங்களைக் கண்டுபிடித்து செயல்படுத்த பிரத்யேக குழுவும் அமைத்தது தமிழக அரசு. இந்தச்சூழலில் கடந்த செவ்வாயன்று, மத்திய தணிக்கை ஆணையம் (சிஏஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கடனுக்கும் ஜி.எஸ்.டி.பி-க்குமான விகிதம் 27.38% ஆக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது நிதிக்குழு நிர்ணயித்த வரம்புக்குள் இருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதேசமயம், மத்திய தணிக்கை ஆணையம் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. மாநிலத்தின் ஜி.எஸ்.டி.பி வளர்ச்சி 15.98% ஆக இருந்தாலும், வருவாய் வளர்ச்சி 6.89% மட்டுமே இருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறது. இன்னொரு முக்கியமான பிரச்னையையும் தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வருவாய் குறைந்துவருகிறது. 2026, ஆகஸ்டில் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.10,189 கோடி. 2025, ஆகஸ்ட்டில் அது ரூ.10,329 கோடியாக இருந்தது. ஆனால், இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த தேசத்தின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் 9% உயர்ந்திருக்கிறது. மாநில அளவில் கர்நாடகா 13%, குஜராத் 15%, தெலங்கானா 16% என ஜி.எஸ்.டி வசூலில் வளர்ச்சி கண்டுள்ளன. தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வசூல் குறைகிறது என்றால், பொருளாதார செயல்பாடுகளில் பின்னடைவு இருக்கிறது என்றே பொருள். புதிய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாற்றங்கள் கூட, ஜி.எஸ்.டி வசூல் குறைய காரணமாக இருக்கலாம் என்று சில பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான சீர்திருத்த நடவடிக்கை தேவைதான். ஆனால், சீர்திருத்தங்களைத் துரிதமாக்கி வளர்ச்சியை ஊக்குவிக்க ஆக்கபூர்வ நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும். மாநிலத்தின் வரி வருவாயில் ஜி.எஸ்.டி முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அதன் வீழ்ச்சி தொடர்ந்தால் நிதி நிலைமை இன்னும் மோசமாகும். வருவாய் இல்லாமல் போனால் கடன் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே, அரசின் கடனில் சுமார் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மூலதனச் செலவாக உள்ளது. 70 சதவிகிதத்துக்கும் மேலான கடன்கள், வருவாய் வளர்ச்சிக்கு உதவாத செலவுகளாகவே இருக்கின்றன. போட்டி மாநிலங்கள் முன்னேறும்போது தமிழ்நாடு பின்னோக்கிச் செல்வதை அலட்சியப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தவேண்டும். - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/governance/tamil-nadus-debt-to-gsdp-ratio-stands-at-2738-at-cag-report




