கோவை, கோவையை அடுத்த அன்னூர் அருகே வடவள்ளி ஊராட்சி குமரன் குன்று பகுதியில் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருகப் பெருமான் அருள் பாலிக்கிறார். இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 12 ஆண்டு நிறைவடைந்ததால், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவிலில் முன் மண்டபம், திருச்சுற்று பிரகாரம், மண்டபங்கள் எழுப்பி திருப்பணிகள் செய்யப்பட்டன. கொடி மரம் மிக பழையதாக இருந்ததால் புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பிள்ளையார் வழிபாடு, காப்பு கட்டுதலுடன் நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. பெண்கள் தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். 108 மூலிகைகளால் முதல் கால வேள்வி பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் இன்று காலை விமானங்களில் கலசம் நிறுவும் பணிகளும், அதைத் தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் தெய்வ திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாற்றுதலும் நடைபெற்றது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜை நடைபெற உள்ளது. நாளை காலை, நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. பின்பு காலை, 8.30 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து, விமான கலசங்களுக்கும், மூலவருக்கும், பரிவார் தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/coimbatore-kumaran-kundru-kalyana-subramaniya-swamy-temple-kumbabhishekam-on-27-august-2026




