சென்னை, பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு பொருந்தாதது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு (யதார்த்தத்திற்கு) சற்றும் பொருந்தாததாகவே உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், முறையான வரைபடமோ திட்டமிடலோ இன்றி ரூ.1,200 கோடி என அறிவிக்கப்பட்டிருப்பது வெறும் கற்பனையே அன்றி வேறில்லை. குறிப்பாக, 20 லட்சம் சதுர அடி கட்டடத்திற்கு உள்கட்டமைப்புடன் சேர்த்து 45 ஏக்கர் தேவைப்படும் சூழலில், அங்கு இருப்பதோ வெறும் 25 ஏக்கர் மட்டுமே. கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருந்தும், முதல்வர் விஜய்யின் வீட்டிற்கு அருகில் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம், சட்டத்தின் முன் ஒருபோதும் நிற்காத வெறும் மணல் கோட்டையே ஆகும். அதனை மீறி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், முள்ளிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தலின்போது பட்டா தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது தங்களை தவெக அரசு அப்புறப்படுத்த முயல்வதாக மீனவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். மேலும் ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட இக்கடற்கரைப் பகுதியானது, அடையாறு சூழலியல் முகத்துவார மண்டலத்தையும், அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய இனப்பெருக்க வாழ்விடத்தையும் கொண்டிருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு முரணாகக் கட்ட முயலும் இக்கட்டடம் சட்டத்தின் முன் நிற்காத 'மணல்' கோட்டையாகும். மேலும் இத்திட்டத்தால் சாந்தோம், பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு வழியே நாள்தோறும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான போக்குவரத்து முடக்கத்தால் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது. இப்படி அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழலில், முதல்வரின் தனிப்பட்ட சௌகரியத்திற்காக மக்கள் நலனைப் பலிகடா ஆக்கும் இந்த "துக்ளக் தர்பார்" திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களுடன் இணைந்து தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக பாஜக தயங்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/parliament-900-crore-secretariat-1200-crore-nainar-nagendran-question




