நெல்லை, நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய மக்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கைரேகை, கண் கருவிழி பதிவு மற்றும் பல கோணங்களில் புகைப்படங்களை எடுக்கும் நெல்லை மாநகரக் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில சமூக மக்களைப் பிறப்பாலேயே குற்றவாளிகளாக சித்தரித்து, அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து, சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய கொடூரமான 'குற்றப்பரம்பரைச் சட்டம்' நடைமுறையில் இருந்தது. பல தியாகப் போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் ஒழிக்கப்பட்ட அந்தப் பாசிச நடைமுறையை, தற்காலத்தில் நெல்லை மேலப்பாளையத்தில் காவல்துறை கையில் எடுத்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து வரும் மேலப்பாளையம் பகுதியில், எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துபோன சிறிய சமுதாய வழக்குகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட ஒரு சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை மட்டுமே குறிவைத்து இத்தகைய அடக்குமுறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. குறிப்பாக, காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் இத்தகைய நடைமுறைகளை முற்றிலும் கைவிட வேண்டும். 'சரித்திரப் பதிவேடு' என்ற பெயரில் குற்றவாளிகளை கண்காணிக்கிறோம் எனக் கூறி, அப்பாவிகளையும் பொதுமக்களையும் தொடர்ந்து அச்சுறுத்துவதும், அவர்களின் சுதந்திரமான வாழ்வுரிமையைப் பறிப்பதும் மனித உரிமைக்கு எதிரானது. இத்தகைய சரித்திரப் பதிவேடு நடைமுறையால் பல அப்பாவி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த அடக்குமுறை நடைமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளைத் தொடர்ச்சியாகச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதும் சமூக நல்லிணக்கத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், சில காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய ஒருதலைப்பட்சமான அதிகார துஷ்பிரயோகம் மாநில அரசுக்குத் தான் களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக நேரடியாகத் தலையிட்டு, மேலப்பாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்படும் பயோமெட்ரிக் பதிவு நடவடிக்கைகளையும், சரித்திரப் பதிவேடு என்ற பெயரிலான அடக்குமுறைகளையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக பொதுமக்களிடம் அச்சத்தை விதைக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-registration-of-muslims-summoned-to-the-police-station-in-nellai-sdpi-party-condemns-the-move




