Volledig artikel
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சில படங்களின் தலைப்பு நம்மைச் சுண்டி இழுக்கும். விஜய் அவர்களின் படங்களான...1) பூவே உனக்காக...2) காதலுக்கு மரியாதை 3) துள்ளாத மனமும் துள்ளும் அந்த வகையை சேர்ந்தவை . இந்த பெயர்களில் ஒரு அழகியல் ஒளிந்திருக்கும். அது ரசிகர்களை வா வாவென்று அழைக்கும். நம்பி செல்லலாம். மிகப்பெரிய வெற்றி படமாக அது அமையும் என்று முதல் நாள் பார்க்க செல்லும் போதே ஒரு நம்பிக்கை வரும். இந்த மூன்று படங்களும் காதலை...வெவ்வேறு வகையானகாதலை.. மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். மூன்றிலும் பாடல்கள் எப்போதும் விரும்பி கேட்கும் படி இருக்கும். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி வரும் போது நிச்சயமாக 'பூவே உனக்காக'மட்டுமே முதலிடம் பெறும். மற்ற இரண்டு படங்களும் அதற்கு பிறகு வெளியானவை. தினமும் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கும். அந்த பூக்கள் யார் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களிடம் சென்று சேரும். சிலவகை ஆண்டவனிடம் சென்று சேரும். இந்த இயக்கம் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. பெண்களை 'பூ'என்று சொல்வதுண்டு. இந்த தலைப்பில் அந்த 'பூ' வான ஒரு பெண்ணுக்காக அவளை காதலித்த ஒருவன் அவளுக்காக என்ன செய்கிறான் என்பதே படத்தின் ஒரு வரிக்கதை. காதல் என்று வரும் போது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரம் கனவுகள் உள்ளுக்குள்ளே இருக்கும். நெஞ்சுக்குள் முதன் முதலாக வரும் முகம் அவன்/அவள் உயிருள்ள வரையில் மறக்க முடியாது. "நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்"என்று கவிஞர் கு மா பாலசுப்ரமணியன் அவர்கள் 'சித்ராங்கி' என்ற படத்தில் எழுதியிருப்பார். காதலை எவ்வளவு உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார் பாருங்கள் . அதை அடிப்படையாக கொண்டே காதல் என்பது ஒரு முறை முதல் முறை பூப்பது மட்டுமே என்ற அஸ்திவாரத்தை வைத்துக்கொண்டு எல்லாருடைய உள்ளங்களையும் தனது திரைக்கதை பிரம்மாஸ்திரம்மூலம் தாக்கி வென்றார்...அப்போதைய அந்த இளம் ஹீரோவை வெற்றி வீரனாக்கினார் இயக்குநர் விக்ரமன் அவர்கள். பூவே உனக்காக - படத்தின் கதையை இயக்குநர் விக்ரமன் அவர்கள் எழுதி முடித்த பிறகு யார் ஹீரோ என்று முடிவு செய்யாத ஒரு நாளில் தொலைக்காட்சியில் விஜய் அவர்கள் நடித்த ஒரு படத்தின் பாடலை பார்க்கிறார். அவர் மனதில் இவர்தான் அந்த ஹீரோ என்ற முடிவுக்கு வருகிறார். பேட்டிகளில் பலமுறை இதை சொல்லி இருக்கிறார். அதுவரையில் அந்த ஹீரோ பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் செௌத்ரி அவர்களிடம் தகவல் சொல்கிறார். அவர் உட்பட பலர் இயக்குநர் முடிவுக்கு உடன்படவில்லை. ஆனாலும் விக்ரமன் அவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் படம் உருவாகிறது. பிரபஞ்சம் ஒருவருக்கு மாலை சூட முடிவெடுத்துவிட்டால் யார் மூலமாவது அவர் கழுத்துக்கு வெற்றி மாலை சென்று விடும்.அதன் பிறகு மிகப்பெரிய உயரத்திற்கு அவர் சென்று விடுவார். விஜய் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. கதாநாயகன் ராஜா நண்பன் கோபியுடன் தனது தாய் தந்தையரின் அப்பா அம்மா வசிக்கும் ஊருக்கு வருகிறார். அவரது வருகை இரண்டு குடும்பங்களுக்கும் பிடிக்கவில்லை. காரணம் காதல். மதம் கடந்த நட்புணர்வுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் ராபர்ட் ஜானகி இருவரும் காதலிக்கிறார்கள். தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வந்ததால் இருவரும் எதிர்ப்பை மீறி ஊரை விட்டு, உறவை விட்டு வெளியூர் சென்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அன்று முதல் அந்த குடும்பங்களுக்குள் பகைமை ஏற்படுகிறது. அவர்களை ஒன்றாக இணைக்க சென்னையில் இருந்து ராபர்ட் ஜானகியின் மகனான ராஜா வருகிறான். அந்த ஊரில் யாரும் அவனுக்கு வீடு கொடுக்க முன்வராத போது 'பாட்டும் நானே பாவமும் நானே' ன்னு தினந்தோறும் இரவு 8.00 மணிக்கு பாடி ஊரை பயமுறுத்தும் வெள்ளிங்கிரி என்பவர் இடம் தருகிறார். அவன் முயற்சி வெற்றி அடைந்ததா...உண்மையில் அவன் யார் என்பதை மிக மிக அழகாக தெளிவாக சொல்லி இருப்பார் இயக்குநர் விக்ரமன். கதாநாயகனாக முழு ஈடுபாட்டுடன் முற்றிலும் மாறுபட்டு நடித்திருப்பார் விஜய். அதே இரவு 8 மணி அளவில் வெள்ளிங்கிரி வீட்டில் இருந்து 'சொல்லாமலே யார் பார்த்தது..' என்ற ஒரு இனிமையான ஆண் குரல் மறு நாள் ஒலிக்கும் போது திரையரங்கம் முழுவதும் ஒரு பரவசம் ஏற்படும். அப்படி ஒரு இனிமையான பாடலை ஜெயச்சந்திரன் அவர்கள் பாடியிருப்பார். அந்த பரவசம் அந்த இனிமை கிளைமாக்ஸ் வரையில் நீடிக்கும். தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லி அவளுக்கு நிர்மலா மேரி என்று பெயர் வைத்து விஜய் சார்லி அடிக்கும் கூத்துகள் ரசிக்கும்படி இருக்கும. பூவே உனக்காக - 2 திடீரென்று ஒரு நாள் அந்த நிர்மலா மேரி வந்து சேர கதையில் மிகப்பெரிய திருப்புமுனை வரும். அவர் மூலமாக விஜய் யார் எதற்காக அந்த ஊருக்கு வந்தார் என்பது தெரிய வரும். ஒவ்வொரு காட்சியும் சலிப்பு தட்டாமல் காமெடி கலந்து கடைசி வரையில் நம் கவனத்தை திரையை விட்டு விலகாமல் கொண்டு செல்வார் இயக்குநர். காதல் தொடர்பான ஒவ்வொரு வசனங்களும் அற்புதமாக இருக்கும். விஜய் யாரென்று சங்கீதாவுக்கு தெரியும் போது, தான் காதலிச்ச ஒரு பெண்ணின் காதலை அவளை காதலிச்சவன் சேர்த்து வைக்க முன்வந்திருப்பது தெரிந்ததும் 'இவ்வளவு நாள் காதல்னா வெறும் INFATUATION (உடல் ரீதியான கவர்ச்சி) ன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால் உன் கதையை கேட்ட பிறகு காதல் மேல ஒரு மரியாதை வருது என்று சொல்லும் போது நமக்குள்ளும் அப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதன் பிறகு ஹீரோவை மரியாதையாக அழைப்பது சிறப்பாக இருக்கும். 'காதலுக்கு மரியாதை' தலைப்பு உருவாக இந்த காட்சிகள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். அந்த காட்சியில் பின்னணி இசையாக ஒலிக்கும் 'ஆனந்தம் ஆனந்தம் பாடும்' பாடல் நெஞ்சுக்குள் உட்கார்ந்து விடும். "மழை சுடுகின்றதே அடி இது காதலா...தீ குளிர்கின்றதே அடி இது காதலா...இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா...?' "இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்...சுகமாய் வலிக்குது இது என்ன காயம்... நாளும் இங்கே அதிசய உலகம் உள்ளங்கையில் பூமிகள் சுழலும்..." -பாடல்களில் காதலை மிக மிக கவித்துவமாக எழுதி இருப்பார் கவிஞர் பழனிபாரதி . அதற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் மிக மிக இனிமையாக இசை வடிவம் கொடுத்திருப்பார். பகைமை மறந்து சந்தோஷம் பிறக்க மத நல்லிணக்க வசனங்களை விக்ரமன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக எழுதியிருப்பார். 'மதம் தான் பெருசுன்னு நீங்க நெனச்சிங்க ஆனால் மனசு தான் பெருசுன்னு 'லாரன்ஸ் நந்தினி நிரூபிச்சிட்டாங்க. மதம் மனுஷன் கிட்ட மட்டும் தான் இருக்கு, ஆனால் காதல் காக்கா குருவி கிட்ட கூட இருக்கு.' பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வசனங்கள். விஜய் அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் படி அதிரடியாக பேசி இருப்பார். பூவே உனக்காக! #VikatanReview இரண்டு குடும்பங்களும் மீண்டும் இணையும் போது 'ஆனந்தம் ஆனந்தம் பாடும் ' பாடலை ராஜா பாடுவார். அனைவரும் சந்தோஷமாக கொண்டாடும் போது அந்த ராஜா யார் என்ற உண்மை தெரிய வரும். அவருக்கு பேத்தி சங்கீதாவை திருமணம் செய்து கொடுக்க முன்வருவார்கள். அது தொடர்பாக ராஜாவிடம் பேச அவர் காதலி வருவார். அந்த கிளைமாக்ஸ் காட்சி வசனம் பிரமாதமாக இருக்கும். "காதல் ஒன்னும் பரீட்சை இல்லீங்க ஒரு முறை தோல்வி அடைஞ்சா திரும்ப எழுதலாம்னு நெனைக்க...அது ஒரு பீலிங்....காதல்ல தோல்வி அடைஞ்சவங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அவங்க கிட்ட கேட்டுப் பாருங்க சந்தோஷமா இருக்காங்களான்னு..100 வருஷம் ஆனாலும் அந்த பழைய காதல் மனசுக்குள் வந்து ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கும். ஒரு செடியில் எத்தனையோ பூ பூக்குது ஒன்னு உதிர்ந்தா...இன்னொன்னு பூக்குது...உதிர்ந்த பூவை திரும்ப எடுத்து ஒட்ட வைக்க முடியாதுங்க." இந்த வசனங்கள் வரும் போது தியேட்டரே கைதட்டலால் அதிரும்...இன்றும். காதலில் தோற்றவர்கள் எண்ணிக்கை எப்போதும் அதிகம் என்று வெள்ளை அறிக்கை வெளியிடலாம். "இந்த முடிவு உங்களுக்கு வேணும்னா சோகமா இருக்கலாம் . இந்த சோகம் கூட எனக்கு சுகமாத்தான் இருக்கு. என்று சொல்லிவிட்டு பேக்கை தூக்கி கொண்டு அவர் கிளம்பும் போது 'உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் உள்ளம் வாழாது...உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது...நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமுமில்லை...' என்று பின்னணியில் பாடல் ஒலிக்க படம் நிறைவு பெறும். நாமும் தியேட்டரை விட்டு வீடு திரும்புவோம். மனதை தியேட்டரில் விட்டுவிட்டு வெறும் உடம்போடு. வலிமையான ஒரு காதல் கதையை அந்நாளில் சாதரணமான ஒரு நடிகர் தன் தோளில் சுமந்து நடித்து மிகப்பெரிய வெற்றி படமாக்கினார். பூவே உனக்காக தமிழ்த் திரையுலகில்..குறிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில்.. காதலை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வந்திருக்கலாம். பூவே உனக்காக மட்டும் அனைத்து விதத்திலும் முன்னணியில் இன்றும் நிற்கிறது. எத்தனையோ படங்கள் அதன் பிறகு விஜய் நடித்திருக்கலாம். அந்த முதல் அனுபவத்தை அவரும் அவரது ரசிகர்களும் அனைத்து தரப்பு மக்களும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஏன்னா...அது ஒரு பீலிங். இந்த பீலிங்கை மீண்டும் அனுபவிக்கணும்... அதற்கு ரீ ரிலீஸ் செய்யணும். GEN Z தலைமுறைகளுக்கு காதலைப் பற்றி ஒரு புரிதல் உண்டாகும். அப்படியே படத்தின் இன்னொரு கிளைமாக்ஸ் காட்சியை.. விஜய் சங்கீதா சேர்வது போல எடுத்து வைத்ததை... கூடுதலாக இணைத்து புதிய பீலிங்கை கொடுக்கலாம் டைரக்டர் விக்ரமன் அவர்கள். தடபுடலான விருந்துக்கு பிறகு தரப்படும் ஐஸ்கிரீம் போல அந்த காட்சி அமையும். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder


