வங்கிச் சேவைகள், நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகி விட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு வங்கிப் பரிவர்த்தனைகள் எளிமையாகி விட்டன. குறிப்பாக, யுபிஐ மிகப்பெறும் மாற்றத்தை உருவாக்கி விட்டது. ஆனால், இந்த மாற்றத்துக்கு இணையாக வங்கிச் சேவைகளின் தரமும், வாடிக்கையாளர் களுக்கான பாதுகாப்பும் உயரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. 2024 - 25 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின், புகார்களுக்கான ஒருங்கிணைந்த ஆம்பட்ஸ்மேன் அமைப்புக்கு (Reserve Bank - Integrated Ombudsman) 13.34 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இது, முந்தைய ஆண்டைவிட 13.55% அதிகம். அவற்றில் சுமார் 46% கடன் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பானவை. இதே வேகத்துக்கு வங்கி சார்ந்த மோசடிகளும் அதிகரித்துள்ளன. 2024 - 25 நிதியாண்டில் 23,953 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. விதவிதமான சைபர் மோசடிகளால் மக்களின் பணமும் நம்பிக்கையும் பறிபோய் வருகின்றன. இந்தப் பின்னணியில், தேவைக்கேற்ப ஆம்பட்ஸ்மேன் அமைப்பை மேலும் வலுப்படுத்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. ‘One Nation, One Ombudsman’ என்ற ஒருங்கிணைந்த கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தி உள்ளது ரிசர்வ் வங்கி. முன்பு, வங்கி, NBFC, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி ஆம்பட்ஸ்மேன் அமைப்புகள் இருந்தன. புதிய திட்டத்தில் அவை அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உண்மையில் இது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. எந்த ஊரில் இருந்தும், வங்கி சார்ந்த எந்தவகைப் புகாரையும் ஒரே அமைப்பில் பதிவு செய்யலாம் என்பது மக்களின் சுமையையும் மன அழுத்தத்தையும் குறைக்கும். மேலும், புகாரைத் தீர்ப்பதற்கான காலக்கெடு, இழப்பீட்டு வரம்பு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு போன்ற பல்வேறு அம்சங்களில் மாற்றங்கள் கொண்டுவந்திருப்பதும் நம்பிக்கையளிக்கிறது. ஆனால், ‘ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வரக்கூடிய புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்கிறோம்’ என்று பெருமைப்படுவதைவிட, புகார்களே வராதபடி வங்கிச் சூழலை உருவாக்குதுதானே உண்மையான மக்கள்நலச் செயல்பாடாக இருக்கமுடியும். வங்கி சேவை பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்க வேண்டிய பொறுப்பு ஒழுங்குமுறை அமைப்புக்கு உண்டு. வங்கிகளின் உள்கட்டுப்பாடு, மோசடித் தடுப்பு தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு, வெளிப்படையான கட்டண நடைமுறைகள், வங்கிப் பணியாளர்களின் பொறுப்புணர்வு ஆகியவற்றில் கடுமையான கண்காணிப்புத் தேவை. வங்கி சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கி, புகார்களைத் தீர்ப்பதில் மட்டுமல்ல, புகார்களே உருவாகாத சூழலை உருவாக்குவதிலும் கவனம் காட்ட வேண்டும். அதுவே வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். நாளுக்கு நாள் அதிநவீனமாகிக் கொண்டிருக்கிற தொழில்நுட்பத்தால் அந்த இலக்கை எட்டுவது ஒன்றும் சிரமமல்ல. ரிசவர் வங்கி அதற்கான முயற்சியில் இறங்கும் என்று நம்புவோம்! - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/personal-finance/banking/editorial-page-july-19-2026




