தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ராஜா, எட்டயபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை செல்போனில் தொடர்புகொண்ட முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர், `மளிகைக் கடை ராஜா அண்ணாச்சிதானே…? எனக்கு உங்களை நல்லாத் தெரியும் அண்ணாச்சி. உங்களை விட்டால் எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை’ என்று தழுதழுத்தபடி பேசியிருக்கிறார். ஆனால், `நீங்கள் யார் என்று சொல்லுங்கள்…’ என்று ராஜா கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ``அண்ணாச்சி என் பேரு சுரேஷ். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். செஞ்சிக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல கட்டுமான வேலைக்கு நான் பள்ளம் தோண்டியபோது ஆறு கிலோவுக்கு தங்கப் புதையல் கிடைச்சிருக்கு. எனக்கு படிப்பறிவு இல்லாததால அதை யாருகிட்ட விற்கறதுனு தெரியல. பித்தளைக் காசுகள் தெரிஞ்சவங்ககிட்ட சொன்னாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு அவங்களும் என்னை ஏமாத்திடுவாங்கனு தோணுது. அதனால் இந்தப் புதையலை விற்கறதுக்கு நீங்கதான் எனக்கு உதவி பண்ணனும்” என்றுப் பேசியதுடன், வாட்ஸ்-அப் மூலம் தங்கக் காசுகளின் போட்டோவையும் அனுப்பியிருக்கிறார். குவியலாக தங்கக் காசுகளைப் பார்த்த ராஜா, புதையலை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுரேஷ், ``நான் இப்போ பாண்டிச்சேரில வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். புதையலை எடுத்துக்கிட்டு என்னால அங்க வர முடியாது. அதனால் பாண்டிச்சேரிக்கு வந்தால் புதையலைப் பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். அதையடுத்து சுரேஷ் கூறியபடி புதுச்சேரி வில்லியனூரை அடுத்திருக்கும் தொண்டமாநத்தம் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார் அண்ணாச்சி. அங்கு அவரைச் சந்தித்த சுரேஷ், பையில் வைத்து தான் கொண்டு வந்திருந்த தங்கக் காசுகளில் இருந்து ஒன்றை எடுத்து ராஜாவிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்ட ராஜா, உடனே ஒரு நகைக்கடைக்குச் சென்று அது அசலா போலியா என்று சோதித்திருக்கிறார். அது அசல் தங்கம்தான் என்று உறுதியானதால், புதையலை மொத்தமாக வாங்க முடிவெடுத்தார் ராஜா. அதையடுத்து சுரேஷை சந்தித்த அவர், `நீ வெளிப்படையாக இருப்பதைப் பார்த்தால் உன்னை எல்லோரும் எளிதாக ஏமாற்றிவிடுவார்கள் என்று தெரிகிறது. அதனால் உனக்காக நானே ரிஸ்க் எடுத்துக் கொள்கிறேன். புதையலை நானே வாங்கிக் கொள்கிறேன். எவ்வளவு வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார். அப்போது, ``என்கிட்ட ஆறு கிலோவுக்கு தங்கக் காசு இருக்குது. அதோட மதிப்பு ரூ.60 கோடி. ஆனால் இப்போ இருபது கோடி மதிப்புள்ள தங்கக் காசை உங்களுக்காக ரூ.20 லட்சத்துக்குத் தர்றேன். கைது நீங்களும் கஷ்டப்படறீங்க. கடவுள் கொடுத்த இந்தப் புதையல் நாலு நல்லவங்களுக்கு உதவியா இருக்கட்டும்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார் சுரேஷ். அதை அப்படியே நம்பிய ராஜா, ஊருக்குப் போய் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு தூத்துக்குடிக்கு பஸ் ஏறியிருக்கிறார். தூத்துக்குடிக்குச் சென்ற ராஜா, வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்தும், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் ரூ.20 லட்சத்தை தயார் செய்தார். அதன்பிறகு ஆகஸ்ட் 30-ம் தேதி ரூ. 20 லட்சம் பணத்துடன் புதுச்சேரிக்குத் திரும்பிய ராஜா, அதே தொண்டமாநத்தம் பகுதியில் சுரேஷிடம் கொடுத்து தங்கப் புதையல் இருந்த பானையை வாங்கினார். அப்போது, `புதையல் பூமியைவிட்டு வெளியில் வந்தவுடன் தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டிவிடும் என்பதால், இங்கு பானயைப் பிரித்துப் பார்க்க வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார் சுரேஷ். அதை ஏற்றுக் கொண்ட ராஜா, காரில் போகும்போது புதையல் பானையைப் பிரித்துப் பார்த்திருக்கிறார். அப்போது அதில் தங்கக் காசுகளுக்கு பதில் பித்தளைக் காசுகளும், களிமண்ணும் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்து கொண்ட ராஜா, சுரேஷின் செல்போனுக்குப் போன் செய்தார். ஆனால் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வில்லியனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சுரேஷின் செல்போன் எண் மூலம் அவரைப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் கொடிக்கால்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷை போலீஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்த ரூ.6 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷுடன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்ளிட்டப் போலீஸார் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், புதுச்சேரி பத்துக்கண்ணு பகுதிக்கு அருகிலிருக்கும் அம்மனங்குப்பம் கிரமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், அவரது மனைவி ரேணுகா, வளர்ப்பு மகன் வெங்கடேசன், மகள் தரணி, சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மகன் ராம்குமார், உறவினர் ஆனந்த் உள்ளிட்ட 15 பேர் இதற்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. தற்போது சுரேஷுடன், ஆனந்தையும் கைது செய்திருக்கும் போலீஸார், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``புதையல் திட்டத்தை தயார் செய்த கும்பல், அதை ஏமாந்து வாங்குவதற்குத் தோதாக சமூக வலைத்தளங்களில் ஆட்களைத் தேடியிருக்கிறது. அப்படித்தான் ராஜா இவர்களிடம் சிக்கியிருக்கிறார். எப்படி சிக்கினார் என்பது தர்மலிங்கமும் அவருடைய குடும்பத்தினரும் சிக்கினால்தான் தெரியவரும்” என்றனர். புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் `ட்விஸ்ட்’ - லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கைது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/puducherry-police-searching-a-gang-that-swindled-people-by-passing-off-brass-coins-as-treasure-of-gold




